28.5 C
Chennai
Saturday, February 24, 2024

கிறிஸ்தவம் போதிக்கும் நற்சிந்தனைகள்…

Date:

இயேசு கிறிஸ்து சொன்ன போதனைகள் யாவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. இவ்வுலகில் வாழும் மனிதர்கள் பலரும் பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அம்மனிதர்களை மீட்கவும் பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவ்வுலகை மீட்கவும் மனிதராய் இவ்வுலகில் பிறந்தார் பரிசுத்த ஆவியான இயேசு கிறிஸ்து அவர்கள்.

பலருடைய இன்றைய சிந்தனை ஏன் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறக்க வேண்டும், எதற்காக நமது பாவத்துக்காய் சிலுவையில் மரிக்க வேண்டும் என்பதுவே.

இன்றும் மக்கள் எவை எல்லாம் பாவம் என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பாவங்களை அறிந்து அவைகளிலிருந்து விடுபடச் செய்யும் தெளிவுரையே விவிலியம்.

பாவம் என்பது ஒரு மனிதன் தன் மனதில் தாம் செய்யும் செயல் தவறு என்று தெரிந்தும், அதை தன் சுயநலத்திற்காகவும், பிறர் பெரிதும் பாதிக்கும் வகையிலும் செய்யும் தவறே ஆகும். அது பிற மனிதர்களின் வாழ்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதை எளிமையாய் கூறவேண்டும் என்றால், தன் மனசாட்சிக்கு எதிராகவும் கர்த்தரின் வார்த்தைக்கு எதிராகவும் செய்யும் அனைத்து தீய காரியங்களுமே பாவம் ஆகும். இதை வைத்து நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம்.

பாவம் என்பது ஒரு மனிதனின் எண்ணத்தின் மூலமாகத் தான் அமைகிறது. அந்த எண்ணம் சமுதாயத்தில் நாம் மனிதர்களுடன் சேர்ந்து வாழும் போது அவர்களிடம் ஏற்படும் பழக்க வழக்க மாற்றங்களால் உருப்பெறுகிறது. இந்த பழக்க வழக்க மாற்றங்களை ஒரு மனிதன் எவ்வாறு சரியான பாதையில், சரியான சிந்தனையோடு, தன் மனசாட்சிக்கு மதிப்பளித்து வாழவேண்டும் என்று சொல்லும் புத்தகமே விவிலியம்(பைபிள்). இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளே விவிலியத்தில் உள்ளன. அவ்வாறே  இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றி வாழ்கிறவர்களே இன்று கிறிஸ்தவர்களாய் வாழ்கின்றனர்.

பாவம் என்பது ஒரு மனிதனின் சிந்தனையில் எவ்வாறு தோன்றுகிறது என்றால், அது பொய், பொறாமை, பேராசை, தந்திரம், சூழ்ச்சி, ஏமாற்றுதல் மற்றும் பிரிவினையை தூண்டுதல் மூலமாய் உண்டாகிறது.

இதில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். நற்சிந்தனைகள் மற்றும் தன்னொழுக்கம் கொண்டு விவிலியத்தை பின்பற்றி இயேசு கிறிஸ்து வார்த்தையின் படி நடப்பவன் கிறிஸ்தவன் என்பதும், பாவத்தை தன் இன்பம் என்று  நினைத்து, தன் சிந்தனையையும் எண்ணங்களை வளர்த்துக் கொள்பவன், சாத்தானின் வழியில் செல்பவன் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மனிதனாய் வருவதற்கும், மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று கூறுவதற்கும், நமது பாவத்துக்காய் சிலுவையை சுமந்து, அறைந்து மரிக்கப்பட்டு, எதற்காக பாவத்தில் இருந்து நமக்கு விடுதலை கொடுத்தார் என்பதற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆதாமும் ஏவாளும்

கடவுள் உலகத்தை படைத்தார். பின் எல்லா உயிரினத்தையும் படைத்தார். இறுதியாக மனிதனைப் படைத்தார். அதில் முதல் மனிதனாய் ஆதாமை படைத்தார். பின் ஆதாம் விலா எலும்பிலிருந்து ஏவாளை படைத்தார். ஆண்டவர் இருவரையும் ஆசீர்வதித்தார். அதன் பின் ஆண்டவர் ஏதேன் தோட்டம் உருவாக்கி இதில் உள்ள அனைத்தும் உங்களுக்குக்கே சொந்தம். நீங்கள் விரும்புவதை அனுபவிக்கலாம் என்று இருவரிடமும் கூறினார். ஆனால் தோட்டத்தின்  நடுவில் இருக்கும் பழத்தை மட்டும் தொடக்கூடாது என்று கட்டளையிட்டார். அது நல்லவை கெட்டவைகளை புரிந்து கொள்ளக் கூடிய அறிவைக் கொடுக்கக் கூடியது. அந்த பழத்தை புசித்தீர்களேயானால் மறித்துப் போவீர்கள் என்று எச்சரித்தார்.

அவர்கள் ஆண்டவரிடம் நாங்கள் உங்கள் வார்த்தைக்கு கண்டிப்பாக கீழ்ப்படிவோம் என்று உறுதியளித்தார்கள். இந்த பழத்தை உண்டவுடன் ஏவாளும் ஆதாமும் இறந்துவிடுவார்கள் என்று ஆண்டவர் கூறவில்லை. அவர்களுடைய ஆத்மா அவர்களுடன் இல்லாமல் காலத்தினால் மரித்து போவார்கள் என்றே ஆண்டவர் கூறினார். ஒருநாள் இரவு ஏவாள் உணவிற்காக பழங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வினோதமான குரல் அவள் பின் ஒலித்தது. பாம்பு ஒன்று அவளிடம் பேச துவங்கியது.

பாம்பு ஏவாளிடம் அந்த பழத்தை சாப்பிட தூண்டுதல் செய்தது. இந்தப் பழம் மிகவும் சுவையானது என்றும், இந்தப் பழத்திற்கு நிகராக எந்தப் பழமும் சுவையானது கிடையாது என்றும் ஏவாள் மனத்தை மாற்றம் செய்தது. ஆண்டவரின் எண்ணமே இந்தப் பழத்தை உண்டால், நீயும் அவரை போலவே எல்லா நல்லது கேட்டதை புரிந்து கொள்ளும் அறிவை பெற்றுவிடுவாய் என்றும், எனவே அவர் உண்ண வேண்டாம் என்று சொல்லி உங்களை ஏமாற்றுகிறார் என்று பாம்பு ஏவாளை மனமாற்றம் செய்தது .பின் ஏவாள் அந்த பழத்தை பார்த்து இந்த பழம் அழகாய் இருக்கிறது உண்டால் எவ்வளவு சுவையாய் இருக்கும் என்று அவளின் எண்ணத்தில் தோன்றியது. பின் ஏவாளும் அந்த பாம்பின் வார்த்தையில் மயங்கி அந்தப் பழத்தை உண்டு, பின் ஆதாம்மையும் அந்த பழத்தை புசிக்கச் செய்தாள். பின் ஆண்டவர் அவர்களிடம் தோன்றும் போது அவர்கள் பயந்து ஒழிந்து கொண்டார்கள்.

Adam-and-Eve-Eating-Fruit
Adam and Eve – Eating Fruit / Credits: lds.org

ஆனால், ஆண்டவர் அவர்களிடம் தோன்றி அந்த பழத்தை உண்ண வேண்டாம் என்று எச்சரித்து இருந்தேன். ஆனால் நீங்களோ என் வார்த்தையை மீறி புசித்தீர்கள், என்று கூறி வருத்தம் அடைந்தார். நீங்கள் செய்த இப்பாவத்திற்கு இனிமேல் வியர்வை சிந்தி, உழைத்து பயிரிட வேண்டும் என்றும் சொல்லி விட்டு அவர்களை விட்டுச் சென்றார்.

ஏவாளும் மரியாளும்

ஏவாளும் மரியாளும் இருவருமே இவுலகில் ஆண்டவரிடம் ஆசீர்வாதம் பெற்று மனிதர்களாய் படைக்கப் பெற்றவர்கள். இருவருக்குமே ஆண்டவர் எல்லா வகையான ஆசிர்வாதமும் கொடுத்து இருந்தார். அனால் ஏவாளோ சாத்தானின் பேச்சை கேட்டு, ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பழத்தை (பாவம்) உண்டு ஆண்டவரின் ஆசிர்வாதத்தை விட்டு விலகி சென்றாள்.

ஆனால் மரியாள் அவர்களோ, ஆண்டவரின் வார்த்தையை ஏற்றுகொண்டு ஆண்டவரின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவருக்காய் வாழ்ந்தார். மரியாளின் வாழ்க்கை முழுவதையும் ஆண்டவர் ஆசிர்வதித்தார். மரியாளின் வயிற்றில் கருவாய் உருவாகி இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தார். ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்ததால், ஆண்டவர் மரியாளை ஆசிர்வதித்து தம் குமாரனை இவ்வுலகில் பிறக்க செய்தார்.

mary-with-jesus--christianity-thoughts

பொதுவிளக்கம்

அன்பான கிறிஸ்தவர்களே! நாம் இந்த இரண்டு விதமான நபர்களை (ஆதாம் & ஏவாள் மற்றும் மரியாள் & ஏவாள்) கொண்டு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டவர் ஏதேன் தோட்டத்தை போல இவ்வுலகை உருவாக்கியுள்ளார். எல்லா வளங்களும், செல்வங்களும்,  மரங்களும், கனிமங்களும், கடல்கள், மலைகள்,ஆறுகள், மழை மற்றும் பல இயற்கை வளங்களை உருவாக்கி நமக்கு தந்துள்ளார். மேலும் ஆதாம் ஏவாளுக்கு கூறியதை போல நமக்கும் (கிறிஸ்தவர்களுக்கும்) மற்றும் பிற மதத்தை பின்பற்றுவோருக்கும் பாவம் செய்யாமல் இருங்கள் என்று கூறியுள்ளார். பிற மதத்தை பின்பற்றுவோருக்கு அவர் கிறிஸ்தவத்தை வழிபடுங்கள் என்று கூறவில்லை. அவருடைய வேத வாக்கியத்தை புரிந்து பாவம் செய்யாமல் இவ்வுலகை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் கூறுகிறார்.

நம்மில் பலர் கிறிஸ்தவர்களாய் இருந்தும் விவிலியம் (பைபிள்) படித்தும் அவர் வார்த்தை புரிந்தும், அந்த ஆதாம் ஏவாளை போல ஆண்டவரின் வார்த்தையை மீறி பாவம் செய்து கொண்டு இருக்கிறோம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று தெரிந்தும் நாம் அதைச் செய்து கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் பாவத்தின் பலனே இன்று சமுதாயத்தில் பேரழிவு நோயும், பெரும் இயற்கை சீற்றமும் சேதமும், பெரும் மனித உயிர் இழப்பும் ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று ஒவ்வொருவரின் சுயநலமும், பொறாமையும், சூழ்ச்சியும், பிரிவினை தூண்டுதலும், உலகையே அழிவை நோக்கி வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் இயேசு கிறிஸ்துவோ இன்றும் நமக்காய் வேதனைப் படுகிறார். நாம் செய்யும் பாவத்தை அவர் இன்றும் சிலுவையில் சுமக்கிறார் என்பதையும் நாம் அறியாமல் ஒரு குருடனாய், செவிடனாய் கிறிஸ்தவத்தை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பாவங்கள் பல செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இயேசு கிறிஸ்துவோ நம்மை, மரியாள் எவ்வாறு ஆசிர்வதிக்கப்பட்டார்களோ, ஆபிரகாம் எவ்வாறு ஆசிர்வதிக்கப் பட்டரோ ,அதை போல நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறார். கிறிஸ்தவத்தை முழுமையாய் புரிந்துகொள்ளுங்கள் என்றும் கூறுகிறார். அதை கோதுமையின் உவமை (விவிலியம்) மூலம் இயேசு கிறிஸ்து நமக்கு தெளிவாய் விவரித்து இருக்கிறார்.

மேலும் ‘பிறரிடம் அன்பு கூறுங்கள்’, ‘பிறரிடம் பாவம் செய்யாதிருங்கள்’, ‘உங்களிடம் இருப்பதை பிறரிடம் கொடுத்து உதவுங்கள்’,  ‘தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப் படுவான், தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான்’,  ‘கர்த்தருக்கு கீழ்ப்படிந்து நடப்பவனே பாக்கியவான்’, இதைப் போல பல வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவானவர் நமக்கு விவிலியத்தில் சொல்லி இருக்கிறார். அதைப் பின்பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாழவேண்டும்.

இயேசு கிறிஸ்து நம்மிடம் விவிலியம் மூலம் பேசுகிறார். நாம் அவரிடம் ஜெபத்தின் மூலம் பேசுகிறோம். இப்படியே நாமும் இயேசு கிறிஸ்துவும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் நம் ஜெபத்திற்கு செவிசாய்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நாமோ அவருடைய வார்த்தைக்கு பலர் செவிசாய்ப்பதில்லை. இன்னும் சிலர் அவரிடம் மட்டும் ஜெபத்தின் மூலம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் நம்மிடம் பேசுவதை நாம் பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை.

ஆனால் இயேசு கிறிஸ்துவானவரோ நம் அனைவரையும் அழைக்கிறார். அவர் நம்மிடம் என்றும் இருக்க விரும்புகிறார். நாம் அதைப் புரிந்துகொண்டு அவர் வார்த்தையை இதயத்தில் வைத்து பாவம் செய்யாமல் வாழ்வோம்.

நாம் அவரிடம் என்றும் ஜெபத்தின் மூலமாகவும், விவிலியத்தின் மூலமாகவும், உறவையும், நம் அன்பையும் வெளிப்படுத்திக் கொள்வோம்.

கிறிஸ்தவனாய் பிறப்பது மற்றும் கிறிஸ்தவனாய் வாழ்வது

நாம் கிறிஸ்தவர்களாய் பிறக்கும்போதே நாம் ஆண்டவரிடம் முழுமையான ஆசீர்வாதம் பெற்று பிறந்துள்ளோம். பின் திருமுழுக்கு மூலம் நாம் மேலும் ஆசிர்வதிக்கப் படுகிறோம்.  ஆனால் நாம் முழுமையாக கிறிஸ்தவத்தை பின்பற்றி வாழ்கிறோமா? அவருடைய வார்த்தைக்கு செவி கொடுக்கிறோமா? அவர் போதித்த வார்த்தைகளை நாம் கடைபிடிக்கிறோமா? என்று கேட்டால், இன்று நம்முடைய பதில் என்ன என்று மனதில் கேள்வி கேட்டு கொள்ளுங்கள்.

அதற்கு ஆம் என்றால், நாம் கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம் மனத்தில் வைத்து சந்தோஷமாய் வாழுங்கள்.

அதற்கு இல்லை என்றால் நாம் கிறிஸ்தவர்களாய் பிறந்து மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.

முன்பு கூறியது போல, மரியாள் அவர்கள் எவ்வாறு கர்த்தருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்களோ அவரைப் போல் நாம் கீழ்ப்படிந்து வாழ்கிறோம் என்றால் நாம் முழு கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு இயேசு கிறிஸ்துவை முழுமையாய் ஏற்றுக்கொண்டு வாழும்போது, நாமும் நம் பிள்ளைகளுக்கும், பின் வரும் வாரிசுகளுக்கும் ஆண்டவரின் ஆசிர்வாதத்தை அளித்துச் செல்கிறோம்.

அதையே நாம் கிறிஸ்தவர்களாய் பிறந்து அவரை பின்பற்றாமல் வாழ்வது என்பது, நாம் அவரோட சிலுவையின் பாரத்தை, நமது பாவத்தின் மூலமாய் அதிகம் கொடுக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அது நம் மூலமாக நம் பிள்ளைகளுக்கும் மற்றும் நம் வாரிசுகளுக்கும் கொடுத்து செல்கிறோம் என்பதை புரிந்துக்கொண்டு வாழுங்கள்.

கிறிஸ்தவர்களாய் மட்டும் பிறந்து வாழ்ந்து ஆதாம் ஏவாளை போல் இல்லாமல், மரியாள் அவர்களை போலவும், ஆபிரகாமை போலவும், கிறிஸ்தவத்தை முழுமையாய் பின்பற்றி கிறிஸ்தவர்களாய் வாழவேண்டும். ஆண்டவரின் முழு ஆசீர்வாதத்தை பெற்று வாழ்வோம்.

தாகமாய் இருக்கிறேன் மற்றும் முடிந்தது 

 (கர்த்தரின் சிலுவை பாடுகள் வார்த்தைகளின்,  5 ஆம் மற்றும் ஆம் வார்த்தைகள்)

கர்த்தரின் சிலுவையின்பாடுகள் 7 வார்த்தைகளில், மிகவும் முக்கியமான வார்த்தைகள் கொண்டது 5 ஆம் மற்றும் 6 ஆம் வார்த்தைகள் ஆகும்.  ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த இரண்டு வார்த்தைகளை நன்கு புரிந்து வாழ வேண்டும். இந்த இரு வார்த்தைகளில் கூறப்படும் தாகமாய் இருக்கிறேன் மற்றும் முடிந்தது என்பது, இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் வெளிப்பாடும் மற்றும் மரணத்தைப் பற்றியும் அமைந்து இருக்கிறது.

அதாவது ஒரு மனிதன் தன் மரிக்கும் தருவாயில் தன்னுடைய இரத்தம் அதிகம் வெளியேறும் போது தாகம் ஏற்படுகிறது. அதைப்போல் ஒரு மனிதன் தன் மரணத்தை முன்கூட்டியே அறிந்து இருக்கும் போது தன்  வாழ்க்கையின் இறுதி நொடியில் முடிந்தது (வாழ்க்கை முடிந்தது) என்று உணரமுடிகிறது. இங்கு கூறப்பட்டிருக்கும் தாகமாய் இருக்கிறேன் மற்றும் முடிந்தது என்பதை நம்மால் இரண்டு விதமாய் யூகிக்க முடிகிறது அல்லவா. அதாவது இங்கு இயேசு கிறிஸ்துவை குறித்து கூறுவது அவருடைய சரீரத்தை பற்றியா அல்லது பரிசுத்த ஆவியை பற்றியா என்று நம் ஒவ்வொரு எண்ணத்திலும் தோன்றுகிறது அல்லவா! ஆம் இவ்விரண்டையும் குறித்தே அமைந்து இருக்கிறது.

ஒரு மனிதன் என்பவன் உடல் மற்றும் மனம் ஆக இரண்டையும் கொண்டு உருவாக்கப்படுகிறான். அதாவது ஒருவன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உருவாக்கப் படுகிறான். எப்பொழுது ஒரு மனிதன் தன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒன்றுப்பட்டு வாழ்கிறானோ, அவனே வாழ்வில் சிறந்து விளங்குகிறான். உடல் நோய் மற்றும் மன நோய் இல்லாமல் வாழ்கிறான்.

Christianity-thoughts

இயேசு கிறிஸ்துவை நாம் உடல் ரீதியாக பார்த்தோம் என்றால், அவர் சிலுவையை சுமர்த்து, இரத்தம் இழந்து, பல கொடுமை அனுபவித்து, சிலுவை அறைந்து அடக்கம் செய்யப்பட்டார் என்பதை நாம் உணர முடிகிறது. அப்போது மரணத்தின் முன்பு இரத்தம் இழந்ததால் தாகமாய் இருக்கிறது என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். அதைப்போல், தாம் மரிக்கப்போகும் தருவாயில் எல்லாம் முடிந்தது என்று கூறுகிறார். இவை அனைத்தையும் கிறிஸ்தவர்களாய் நாம் அறிய முடிகிறது. மேலும் நாம் இதை பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம். ஒரு சிலர் அந்த சிலுவையின் காட்சியை பார்த்தும், பாடுகளைப் பார்த்தும் இன்றும் கண் கலங்குகிறோம்.

அதைப்போல் இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியின் ரீதியாக பார்த்தோமேயானால், இங்கு அவர் தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லுவது, இன்று நாம் பாவம் செய்து அவருக்கு மனரீதியாக தாகத்தை உண்டு பண்ணுகிறோம்.  அதாவது நாம் வேத வாக்கியங்களை பின்பற்றாமலும், அவர் வார்த்தைக்கு செவிகொடுக்காமலும், பாவம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நாம் செய்யும் பொழுது, அவருக்கு ஆவி ரீதியாக தாகம் ஏற்படுகிறது.

நாம் அவருக்கு நமது பாவத்தின் பாரத்தை அதிகப்படுத்தி, அவரை நாம் இரத்தம் சிந்தச் செய்து, அவரை ஆவியின் ரீதியாக சிலுவையில் அறையச் செய்கிறோம். அப்போது நமது பாவத்தை சிலுவையில் சுமக்கும் பொழுது, அவருக்கு ஆவியின் ரீதியாக மனவேதனை அடைந்து தாகமாய் இருக்கிறார். ஏவாள் அன்று செய்த தவறைப்போல், நாம் இன்று கிறித்துவர்களாய் மட்டும் பிறந்து வாழ்வோம் என்றால், அவருக்கு நமது பாவத்தினால் பாரத்தின் நிமித்தம் தாகம் ஏற்படுகிறது என்பதை நாம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதுவே நாம் எல்லாரும் அவரின் வார்த்தையைக் கேட்டு, விவிலயத்தை பின்பற்றி வாழும்போது, அனைத்து மனிதனும், உயிரினங்களும், உலகமும் அழியாமல் பாதுகாக்கப் படுகிறது என்று சந்தோஷத்தோடு,“முடிந்தது” என்று சொல்லுகிறார். அதாவது நாம் அனைவரும் மரியாளை போலவும், ஆபிரகாமை போலவும் ஆசிர்வதிக்கப்பட்டு, நாம் பாவத்தின் பிடியில் இல்லாமல் வாழ்கிறோம் என்று சந்தோஷத்துடனே அவர் இவ்வுலகின் வந்த காரியம் “முடிந்தது” என்று சொல்லுகிறார்.

அன்பான கிறிஸ்தவர்களே! இன்று நமக்கு கர்த்தர் அனைத்து காரியங்களையும் பூர்த்திசெய்கிறார். நமது ஜெபங்களுக்கு செவிசாய்க்கிறார். அதை போல நாமும் அவருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, அவருடைய வார்த்தையை பின்பற்றி, மரியாள் அவர்கள் ஆபிரகாம் அவர்கள் கடவுளிடம் பெற்ற ஆசிர்வாதம் போல நாமும் பெற்று வாழ்வோம்.

ஒரு காலத்தில் விவிலியம் கிறிஸ்தவ போதகரிடம் மட்டும் இருந்தது என்ற நிலையை மாற்றி மார்ட்டின் லூதர் மற்றும் பலர், பல மொழிகளில் மொழி பெயர்த்து, ஏன் இன்று இந்தியாவிலும் பலர் மொழிபெயர்த்து நமக்கு இயேசு கிறிஸ்துவினிடம் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அதற்காக பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எவ்வாறு நமக்கு கர்த்தரின் ஆசிர்வாதத்தை பெற்று கொடுத்து இருக்கிறார்களோ மற்றும் உறவை வளர்த்து கொடுத்து இருக்கிறார்களோ, அதை போல் நாமும் பிறருக்கு செய்வோம்.

நம் முன்னோர்கள் எவ்வாறு நமக்கு கர்த்தரிடம் ஆசிர்வாதம் பெற்று தந்தார்களோ, அதைபோல் நாமும் நம் பிள்ளைகளுக்கும் நம் வாரிசுகளுக்கும் கர்த்தரின் ஆசிர்வாதத்தை பெற்று தந்து அவரின் வார்த்தையின்படி கீழ்ப்படிந்து வாழ்வோம். ஆமென்.

Also Read: இயேசு கிறிஸ்துவின் இந்தியப் பயணம் – நூற்றாண்டுப்புதிரின் விடை இதோ!!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!