ஜாதகத்தினைப் பொறுத்தவரை சிறப்பான கிரக நிலைகள் இருக்கும் போதும் சிலருக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடைபெறவில்லை என்ற எண்ணம் இருக்கும். ராசிக்கு அதிபதி, சுப கிரகங்கள் ராசியினைப் பார்க்கும்போதும் சில முன்னேற்றங்கள் தாமதமாகலாம். அதனைச் சரி செய்ய சில வழிகள் உள்ளன. நம்மைச் சுற்றியுள்ள நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பதன் மூலம் நம் வாழ்வில் சிறப்பான இடங்களை அடைய முடியும். அப்போது நல்ல கிரக நிலையும் உதவி புரியுமானால் பல சாதனைகளை நம்மால் நிகழ்த்த முடியும். சரி, நேர்மறை எண்ணத்தினை எப்படி உருவாக்குவது? இதற்காகவே ராசிக்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒவ்வொருவருடைய ராசிக்கு ஏற்ப மாறக்கூடியவை. இவற்றை அணிவதன் மூலமாக ராசியினுடைய நற்பலன்களை நாம் எளிதில் அடையலாம். எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த நிறக் கற்களை அணியவேண்டும் என்பதை கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம். அவர் அளித்த விபரங்களைக் கீழே காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் பவளம். இது மனதிலுள்ள தீய எண்ணங்களை அழிக்கும். தெய்வ சிந்தனையைத் தரும். மேலும் செவ்வாய் திசை உள்ளவர்களும் இதனை அணியலாம். தேவையற்ற கோபங்கள் மறைந்து அனைவரிடமும் அன்பு ஊற்றெடுக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
ரிஷிபம்
ரிஷிப ராசிக்காரர்கள் வைரம் அணிய வேண்டும். இதனால் தோற்றப்பொலிவு உண்டாகும். மனம், மெய் ஆகிய இரண்டினுக்குமே வளம் சேர்க்கும் வைரம். கணவன் – மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் விருத்தி நடைபெரும். சுக்கிர திசை பெற்றவர்கள் தாராளமாக வைரத்தினை அணியலாம்.
மிதுனம்
மரகதம் மிதுன ராசிக்காரர்களுக்கு உரிய ராசிக்கல் ஆகும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். பேச்சில் கவனமும் சாமர்த்தியமும் அதிகரிக்கும். இதனால் எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றி நிச்சயம். இது அதிர்ஷ்டத்தையும் நல்ல எண்ணங்களையும் உருவாக்கும். மரகதத்தை புதன் திசை நடப்பவர்களும் அணியலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் முத்து அணிய வேண்டும். மனதில் எழும் தேவையில்லாத சந்தேகங்களை நீக்கும். உறவினர் நண்பர்களிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். லக்ஷ்மி கடாக்ஷத்தினைக் கொடுக்கும். தொழில் விருத்தி, தன, தானிய விருத்தி உண்டு. தன்னம்பிக்கை வளரும். முத்து, சந்திர ராசிக்காரர்களுக்கும் நற்பலன்களைக் கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டிய கல் மாணிக்கம். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை இது கட்டுப்படுத்தும். வீணான பேச்சுவார்த்தைகள் குறையும். தீய நண்பர்களின் தொடர்புகள் நின்றுபோகும். நல்ல உடல் நலத்தைக் கொடுக்கும். சூரிய திசை நடப்பவர்கள் மாணிக்கம் அணிவது சிறந்தது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மரகதக் கல்லை அணிவதன் மூலம் துர் தேவதைகளின் பிடியிலிருந்து தப்பிக்கலாம். பிறர் செய்த செய்வினைகளை நீக்கி வளமான வாழ்வினைக் கொடுக்கும். குடும்ப விருத்தி நடக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சுக்கிர திசைக்காரர்கள் மரகதம் அணிவது மனவலிமையை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வைரத்தினை அணிய வேண்டும். குடும்ப சிக்கல்களைத் தீர்க்கும். மன திடத்தை அதிகரிப்பதன் மூலமாக காரணமறியா பயங்களைக் குறைக்கும். நா வன்மையைத் தரும். வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். பிறரிடம் உங்களுடைய மதிப்பு உயரும். நல்ல உடல் பலத்தைக் கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பவளம் அணிய வேண்டும். மனதில் உள்ள வெறுப்பு எண்ணம் மறைந்து அன்பு பெருக்கெடுக்கும். பேச்சாற்றல் அதிகரிக்கும். தெய்வ அனுகூலங்கள் கிட்டும். குழந்தைகளின் அறிவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயர்ந்து செயல்களில் வெற்றி கிடைக்கும். கேது திசை நடப்பவர்கள் பவளம் அணிவது உயர்பதவி கிடைக்க வழிவகுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்ற கல் கனக புஷபராகம். குரு திசை உள்ளவர்கள் இதனை அணிவது நல்ல செல்வ விருத்தியைக் கொடுக்கும். ஆரோக்கியமான உடல் மற்றும் மனதினை வழங்கும். பூர்வீக சொத்துக்கள் வந்துசேரும். புது வீடு கட்டும் யோகம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் தீரும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நீலக்கல் அணிவது சிறப்பு. செல்வாக்கு உயரும். சமுக அந்தஸ்து கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் தரும். நல்ல குண நலன்கள் கிட்டும். தெய்வீக சிந்தனை பெருகும். மனத்தெளிவு பிறக்கும். குடும்ப உறவுகள் வலுப்படும்.
கும்பம்
நீலக்கல் கும்ப ராசிக்காரர்களுக்கு நன் மதிப்பினைப் பெற்றுத் தரும். வம்ச விருத்தி உருவாகும். பழைய வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் அமையும். வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பேச்சாற்றல் பெருகும். திருமணத் தடைகள் நீங்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கனக புஷ்பராகம் அணிய வேண்டும். இது கோபத்தைக் குறைத்து ஆழ்மன அமைதியைத் தரும். பணவரவு அதிகரிக்கும். வாகன, வீடு வாங்கும் யோகம் கிட்டும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு பெருகும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். கம்பீரமான தோற்றம் கிடைக்கும்.