முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி முருக பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதம் இருப்பதற்காக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
சூரசம்ஹார வரலாறு
சூரபத்மன் என்னும் அரக்கனின் அட்டகாசங்கள் எல்லை மீற, அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி சிவன் முருகனைப் படைத்தார். தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப் பொறிகளை படைத்த சிவன் அந்த தீக் கதிர்களை கங்கை ஆற்றில் சேர்க்க வாயுவைப் பணித்தார். அவர்களும் அந்த நெருப்புத் துண்டுகளை கங்கை ஆற்றில் சேர்த்தனர். கங்கை ஆறு அவற்றை சரவணப் பொய்கைக்கு எடுத்துச் சென்றது.
சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக இருந்த முருகனை ஆறு கார்த்திகைப் பெண்டிர்கள் வளர்த்தனர். இந்த ஆறு குழந்தைகளை அன்னை பார்வதி ஒரு குழந்தையாக மாற்றினாள். ஆறு முகங்களுடன் இருந்த அந்த குழந்தைக்கு முருகன் எனப் பெயரிட்டாள்.
இந்த சமயத்தில் சூரபத்மன் அளவிலாத கொடுமைகளை செய்து கொண்டிருந்தான். அவனை வதம் செய்ய முடிவு செய்த சிவனார் முருகனை தனது படைகளுக்குத் தளபதியாக நியமித்தார். அன்னை பார்வதி முருகனுக்கு ஒரு வேலினை அளித்தாள். தனது சக்தியை அதில் உருவேற்றி, அதனை முருகனுக்கு ஆயுதமாக அளித்தாள்.
முருகன் வேலோடும், படையோடும் சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார். முதலில் சிங்கமுகனையும், தாரகாசுரனையும் அழித்தார். இறுதியில், சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாறினான். முருகன் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார்.
இறக்கும் தருவாயில், சூரபத்மன் தனது உடலின் ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவலாகவும் மாறி அவை முருகனின் வாகனமாகவும், கொடியாகவும் திகழ வேண்டும் என வரம் கேட்டான். முருகனும் அவ்வண்ணமே வரம் வழங்கினார்.
இந்தப் போர் நடந்த நாட்களே சஷ்டி விரத தினங்களாக அனுசரிக்கப்பட்டு, முருகன் சூரனை வதம் செய்த நாளன்று முருகன் கோவில்களின் பொம்மை அசுரனை எரிக்கும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது.
படைவீடுகளில் சூரசம்ஹாரம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2 – ஆம் படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. வரும் 13 – ஆம் தேதியன்று கடற்கரை சூரசம்ஹாரம் நிகழ உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3 – ம் படை வீடான பழனியில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா உச்சிகால பூஜையின் போது காப்பு கட்டுதலுடன் தொடங்கியுள்ளது. வரும் 13 – ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடை பெறுகிறது.
சூரனை வதம் செய்த முருகனுக்கு இந்திரன் தனது மகளை மணம் முடித்து கொடுக்கும் நிகழ்வாக நவம்பர் 14 – ஆம் தேதி பழனி மலைக் கோவிலில் சண்முக நாதர் , வள்ளி தெய்வானைக்குத் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மதுரை அழகர்மலையில் முருகனின் 6 – வது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். வருகிற 13 – ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு சூரசம்ஹாரமும், 14 – ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதே போல திருத்தணி தவிர அனைத்து முருகன் ஆலயங்களிலும் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.