நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் உற்சாகமாகத் தொடங்கி விட்டன. பண்டிகைக் காலங்கள் என்றாலே மக்களுக்குத் தனி உற்சாகம் பிறந்து விடுகிறது. அதிலும் குறிப்பாகப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான்.
தீபாவளி உருவான வரலாறு
தீபாவளி உருவான வரலாறு என்று பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. வரலாறா முக்கியம் கொண்டாட்டம் தானே முக்கியம். என்றாலும், தீபாவளி பற்றிச் சொல்லப்படும் வரலாறுகளில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை இந்து புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகை கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தான் பெரும்பாலான மக்களால் நம்பப்படும் வரலாறு.

இலங்கையை ஆண்ட ராவணன் சீதையைக் கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்தான். பின் சீதையை மீட்டுக் கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியைத் தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.
தீபாவளி பூஜை செய்யும் முறை
தீபாவளி அன்னை மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த நாள். அன்று லட்சுமி பூஜை செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைக்கும் என நம்பப் படுகிறது. அதுசரி பூஜையை எப்படிச் செய்வது?
விநாயகர் மற்றும் அன்னை மகாலட்சுமி மகாவிஷ்ணுவோடு இருக்கும் படத்தைப் பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் பூவையும், மஞ்சளையும் முடிந்து அதைப் படத்துக்கு, அணிவிக்க வேண்டும். அட்சதை, குங்குமம், உதிரிப்பூக்கள் ஆகியவற்றை அர்ச்சனைக்குத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊதுபத்தி, சாம்பிராணியால் நறுமணமூட்ட வேண்டும். குபேரர் படம் அல்லது யந்திரம் இருந்தால் அதையும் பூக்களால் அலங்கரித்து, லட்சுமி படத்துக்கு அருகில் வைக்க வேண்டும். லட்சுமியின் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் குபேரருக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்.
பூஜை முடிந்ததும் பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்புப் பொருளை நிவேதனம் செய்து, குடும்பத்தினர் மட்டுமே உண்ண வேண்டும். லட்சுமி பூஜை செய்தால் மாலை கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும். குறைந்தது 21 விளக்குகள் ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் மகாலட்சுமி, குபேரனுக்கு செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது போல நமக்கும் தருவாள் என்பது ஐதீகம்.
நாம் அனைவரும் செல்வமும், ஆரோக்கியமும் பெற்று வளமாக வாழ்வோம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !