28.5 C
Chennai
Monday, February 26, 2024

குருப்பெயர்ச்சி 2019: உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது?

Date:

இந்த வருடம் ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி (29 10 2019) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி 48 நிமிடத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை நமது ஜோதிடர் ஹரிகிருஷ்ணன் கீழே தொகுத்து அளித்திருக்கிறார்.

குரு சுபகிரகம் என்பதால் இதன் பார்வையைப் பெரும் ராசிக்காரர்கள் மிகுந்த செல்வாக்கையும், பண வரவையும் அடைவார்கள். அதே நேரத்தில் குருப்பெயர்ச்சியினால் எந்த ராசிக்காரர்களுக்கும் தீமை ஏதும் விளையாது. அது அவர்களது தவறுகளை அவர்களுக்கே சுட்டிக்காட்டும். இதனால் எவரும் பயம் கொள்ளத் தேவையில்லை. இனி ஒவ்வொரு ராசிக்கும் வர இருக்கும் குருப்பெயர்ச்சி எப்படியான பலன்களை அளிக்க இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

மேஷம் (85/100)

உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்துவந்த குரு இப்போது 9 ஆம் இடத்திற்குச் செல்ல இருக்கிறார். பொதுவாக எட்டாம் இடம் என்பது அஷ்டம ஸ்தானம். இதனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், செல்வம், நிம்மதி ஆகியவற்றில் தடங்கல்கள் இருந்திருக்கலாம். அவை இப்போது நீங்கப்போகின்றன. உடல் உற்சாகமும், புது தெம்பும் பெரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிட்டும். மனம் தெளிவடையும். குடும்பத்தில் நிலவிவந்த சண்டைகள், மனக்கசப்புகள் மறையும். புதுவீடு, வாகனம் வாங்க வாய்ப்பு வரும். நல்லவர்களின் நட்பு கூடி வரும். ஆனால் பிறருடைய சச்சரவுகளில் தலையிடாதீர்கள். யாருக்காகவும் பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுக்க வேண்டாம். அதீத மகிழ்ச்சியில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

 ரிஷபம் (60/100)

ரிஷப ராசிக்காரர்களைப் பொறுத்தவரை ராசிக்கு எட்டாம் இடத்திற்கு குரு பகவான் விஜயம் செய்கிறார். இதனால் விடாமுயற்சி மூலம் உங்களுடைய வெற்றியை தீர்மானிக்கும் காலம் வர இருக்கிறது. பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து புதியதை வாங்குவீர்கள். வெகுநாளாக இழுத்தடிக்கும் வீட்டு வேலைகள் முடியும். ஆதாயத்துடன் கூடிய அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத மனக்குழப்பங்கள் / பயம் வரலாம். மனைவியோடு மனம்விட்டு பேசுவது நல்லது. உடல்நிலை மீது அக்கறை காட்டுவது நல்லது. திடீர் பிரயாணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் சச்சரவுகள் வந்தாலும் பொறுமை காத்து அதிலிருந்து வெளியேறுவீர்கள். தீய நண்பர்களை இனம் காண்பீர்கள். பேச்சில் நிதானமும், செயலில் விடா முயற்சியும் தேவைப்படும் காலமாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும்.

மிதுனம் (80/100)

வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர இருக்கும் மிதுன ராசிக்காரர்களே இதுவரை உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த குரு பகவான் தற்போது ஏழாம் இடத்திற்கு பெயர்கிறார். இதனால் பல நன்மைகள் உங்கள் வீட்டுக்கதவை தட்ட இருக்கிறது. நீண்டகாலமாகவே இருந்துவந்த உடற்பிணிகள் நீங்கும். பண வரவு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும். கிடப்பில் கிடந்த வீட்டு வேலை சுமுகமாய் முடியும். உங்களின் மூலமாக உங்களுடைய இல்லத்தினர் மகிழ்வர். மனதில் எப்போதும் உற்சாகம் ததும்பும். அன்பு இழையோடும் வார்த்தைகளால் அனைவரின் மதிப்பையும் பெறுவீர்கள். சில நேரங்களில் கடன் வாங்கி கடமையை நிறைவேற்றும் நிலை வரலாம். தூர தேசத்து பிரயாணங்கள் ஏற்படும். இளைய சகோதரர்களின் வழி நன்மை உண்டாகும். கல்யாணம் கூடிவரும். குழைந்தை பாக்கியம் உண்டு.

கடகம் (75/100)

உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து நன்மை செய்துகொண்டிருந்த குரு தற்போது ஆறாம் இடத்திற்கு அதாவது சகட குருவாக நிலைபெற இருக்கிறார். சகட குரு சங்கடங்களைத் தருவார் என பயப்பட வேண்டாம். நன்மைகள் குறையுமே தவிர தீமைகள் உங்களை அணுகாது. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருந்து உதவிகள் வராமல் போகும். நெருங்கிய நண்பர்களே கடைசி நேரத்தில் கைவிரிப்பார்கள். இதனால் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். முன்கூட்டிய திட்டங்கள் அவசியம். வரும்முன் காப்போம் என்ற ரீதியில் உங்கள் உடல் நலத்தை பாதுகாக்கவும். புது வாகனம் வாங்கவும், வீடு மாறவும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்திலோ வீட்டிலோ விட்டுகொடுத்துப்போனால் வாழ்க்கை கெட்டுப்போகாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளும் காலமிது.

சிம்மம் (90/100)

அதிரடி மாற்றங்களை வாழ்வில் சந்திக்க இருக்கும் சிம்ம ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு குரு பெயர இருக்கிறார். வாழ்க்கையை வேறு ஒரு கோணத்திலிருந்து பார்ப்பீர்கள். இதுவரை குடைச்சல் கொடுத்துவந்த பூர்வீக நிலப் பிரச்சினை உங்களுக்கு சாதகமாக தீர்வாகும். சுப நிகழ்சிகளால் இல்லம் மகிழ்ச்சியில் தத்தளிக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். புதிய நிலம்/வீடு வாங்கும் யோகம் கைகூடும். நீண்டகாலமாக தட்டிப்போன திருமண ஏற்பாடுகள் நிறைவாகும். நண்பர்கள் வாயிலாக நன்மைகள் உண்டாகும். உங்களுடைய மதிப்புக்குரியவர்களுக்கு பரிசுகள் வாங்கிக்கொடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றுவர வாய்ப்பு கிட்டும். உங்களுடைய வாழ்வில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் நேரத்தை குருபகவான் அமைத்து தர இருக்கிறார்.

கன்னி (70/100)

எந்த விஷயத்தையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயலாற்ற இருக்கும் கன்னி ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்திற்கு வருகிறார் குரு. இது தொழில் சார்ந்த நற்பலன்களை உங்களுக்குக் கொடுக்கும். கணிசமான பணவரவு இருக்கும். இதுவரை கனவுகண்ட பல செயல்களை செய்து சாதிப்பீர்கள். பெரிய இடத்தில் வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாவதால் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் வீட்டில் கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்திற்குள் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு வெளிநாட்டு வேலைகள் தேடிவரும். குடும்பத்துடன் தொலைதூர புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றுவர வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

துலாம் (60/100)

துலாம் ராசியைப்பொருத்தவரை இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு குரு பகவான் இடம்பெயர இருக்கிறார். இதனால் இதுவரை இருந்து வந்த பணப்புழக்கம் குறையும். விடா முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நீங்கள் உணரும் காலமிது. கருத்து வேறுபாட்டின் காரணமாக வீட்டில் தேவையற்ற சண்டைகள் வரலாம். வார்த்தைகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது. முக்கிய முடிவெடுக்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்தல் நலம். பணம் விரையம் ஏற்பட்டாலும் ஒருபுறம் தேவையான வரவு இருக்கும். பசுந்தோல் போர்த்திய புலிகளை இனம் கண்டுகொள்வீர்கள். மனைவி வகையில் நம்பிக்கை கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். புறக்கணிப்புகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வீர்கள். வாழ்வின் முக்கிய அத்தியாயங்களை விடாமுயற்சியுடன் எழுத இருக்கும் காலம் இது.

விருச்சிகம் (85/100)

தொடர் சறுக்கல்களை சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களே நிமிர்ந்து உக்காரும் நாள் வந்துவிட்டது. இதுவரை உங்களுடைய ஜென்ம குருவாக இருந்தவர் இரண்டாம் இடத்திற்கு  பெயர்கிறார். மிக மகிழ்ச்சியான காலமாக இது இருக்கும். உறவினர்களின் வழி சந்தோஷ தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும். புதிய வீடு/வாகனம் வாங்குவீர்கள். ஜவ்வாக இழுத்த பழைய கடன்களை கட்டி முடிப்பீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பணவரவு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். செலவுகளை திறமையாக சமாளிப்பீர்கள். உங்களுடய கனிவான குணம் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியைக் கொடுக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு கிடைக்கும். விலையுயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்றுவர வாய்ப்பு கிட்டும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்டகால ஆசைகளை நிறைவேற்றும் காலமாக இது இருக்கப்போகிறது.

தனுசு (65/100)

இதுவரை உங்களுடைய ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருந்த குரு பகவான் தற்போது உங்களுடைய ஜென்ம குருவாக பெயர இருக்கிறார். இதனால் உங்களுடைய கடமைகள் அதிகரிக்கும். வேலையில் அதிக சுமைகளை சந்தித்து வெற்றிபெறுவீர்கள். வீண் அலைச்சல் இருக்கும். இருப்பினும் குரு பகவான் 5,7,9 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். பொருளாதார நிலை உயரும். பூர்வீக இடத்தை விற்று நகர்ப்புறங்களில் வீடு வாங்குவீர்கள். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். புதிய பங்குதாரர்களை கவனமாக தேர்ந்தெடுப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரணையாகச் செல்வது நலம். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களின் மூலம் வீட்டில் சச்சரவு வரலாம். மூன்றாம் நபரின் தலையீட்டை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளிடம் பிடிவாதம் அதிகரிக்கும். தடைகளை சவாலாக ஏற்று முடிக்கும் காலம் இது.

மகரம் (60/100)

உங்களுடைய ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்திற்கு பெயர இருக்கும் குரு பகவான் மனவலிமையை உங்களுக்குத் தர இருக்கிறார். வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ளும் புதுப்புது யுக்திகளை கண்டுகொள்வீர்கள். அலைச்சல் ஆதாயம் தருவதாய் இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வசதிகளுடன் கூடிய புதுவீடு மாறும் நிலை வரும். தேக நிலையில் முன்னேற்றம் கிடைக்கும். தாய் வழிச் சொந்தம் மூலமாக ஆதரவு கிடைக்கும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிதாக வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் பேசும்போது வார்த்தையை கவனமாக உபயோகிக்கவும். முன்கோபம் அறவே ஆகாது. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். பிறருடைய கடனுக்கு ஜாமீன் வழங்காதீர்கள். மன உளைச்சல், குழப்பங்கள் அவ்வபோது வந்து நீங்கும். தடைகள் வரினும் அதனை எதிர்கொள்ளும் வித்தைகளை கற்றுக்கொள்ளும் நேரம் இது.

கும்பம் (80/100)

எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் உயர்வு இல்லை என நினைக்கும்படிச் செய்த பத்தாம் இட குரு தற்போது நல்ல இடமான 11 ஆம் இடத்திற்கு பெயர்கிறார். இது உங்களுடைய வாழ்வில் பல நல்ல மாற்றங்களைத் தர இருக்கிறது. பழைய கடனிலிருந்து மீண்டு வருவீர்கள். தொழிலில் புதிய புதிய வழிகளில் லாபம் கிடைக்கும். கைகூடாமல் இருந்த தொழில் வாய்ப்புகள் உங்களைத்தேடி வர இருக்கின்றன. வெகுநாள் கனவான சொந்தவீடு தற்போது சாத்தியமாகும். குடும்ப சிக்கல்களை திறம்பட சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்பச்சுற்றுலா செல்வீர்கள். சுபச்செலவுகள் வரும். திருமணம், வளைகாப்பு என வீடு களைகட்டும். உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீண்டகால சேமிப்புத் திட்டத்தில் இணைவீர்கள். நடக்குமா என ஏங்கிக்கொண்டிருந்த பல விஷங்களை சாதித்துக்காட்டும் காலமாக இது இருக்கப்போகிறது.

மீனம் (70/100)

மீன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு குரு வருகிறார். உங்களால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதிகம் ஆதாயம் அடைவார்கள். ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். வெளியூர் பிராயணங்கள் அடிக்கடி நிகழலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு கருத்துவேறுபாடு வரும். நீங்கள் செய்த வேலைக்கான பயனை அடுத்தவர்கள் அனுபவிப்பார்கள். பண வரவு கணிசமாக அதிகரிக்கும். உங்கள் தலைமையில் குடும்ப சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். புது ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு வரன் தேடுவதில் கவனமாக இருக்கவும். நண்பனாவே இருந்தாலும் கடன் வாங்கித்தராதீர்கள். சக்திக்கு ஏற்றபடி செலவுகளைத் தீர்மானியுங்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். எந்தவொரு செயலுக்கும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய காலமாக இது இருக்கப்போகிறது

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!