குரு பெயர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

0
255

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வரும் வியாழக்கிழமை (04/10/2018) துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்கிறார். 12 ராசிக்கார்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோம். உங்களுடைய ராசிக்கு குருவின் பலன் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். இந்த குரு பெயர்ச்சியினால் பாதகமான பலன்கள் கிடைக்கும் சில ராசிக்காரர்கள் பரிகாரங்களை மேற்கொள்வது அவர்களின் பாதகத்தை வெகுவாகக் குறைக்கும். இந்தப் பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

 thatchinamoorthy
Credit: Divine Avatars

பொதுவான பலன்கள்

குரு பகவானின் அருளைப் பெற நினைக்கும் அனைத்து ராசிக்காரர்களும் கீழ்க்கண்ட பரிகாரத்தை மேற்கொள்வது சிறந்தது. குரு பெயர்ச்சி அன்று உங்களுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களில் நடைபெறும் குரு வழிபாட்டில் கலந்து கொள்ளவும். குரு பகவான் மஞ்சள் நிறப் பிரியர்.  எனவே மஞ்சள் நிறப்பூக்களை குருபகவானிற்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ளுதல் நல்ல பலன்களைத் தரும்.

kondaikadalai
Credit: HD Torrent

108 வெண் கொண்டைக் கடலைகளை மாலையாகக் கோர்த்து குரு பகவானிற்கு அணிவித்து உங்களுடைய வேண்டுதல்களை பகவானிடம் வைக்கலாம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனங்கள் இருக்கும். குருவிற்கு யானையே வாகனம். உங்களுக்கு அருகில் இருக்கும் கோவில் யானைகளுக்கு ஒருவேளை உணவு அல்லது வாழைப்பழம் போன்ற உணவுகளைப் படைத்தல் எல்லாவித பாதக பலன்களில் இருந்து உங்களைக் காக்கும். வாராவாரம் குருபகவானிற்கு அர்ச்சனை செய்தல் கூடுதல் சிறப்பு. இனி எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த பரிகாரங்களை மேற்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

செவ்வாய்க் கிழமைகளில் முருக வழிபாடு செய்யலாம். கிருத்திகையன்று முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். மேலும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர சுப பலன்கள் கிட்டும். உங்களால் முடிந்த அளவு உடல் ஊனமுற்றோருக்கு உதவுங்கள். சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷிபம்

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சூட்டி வழிபட கணவன் மனைவி மற்றும் நண்பர்களுக்கு இடையே இருந்த கருத்து முரண்பாடுகள் முடிவுக்கு வரும். மேலும் பெருமாள் கோவில்களுக்குச் சென்று 11 முறை வலம் வந்து வழிபாடு நடத்துதல் வீட்டில் சுப காரியங்களை நடக்க வைக்கும். தடைப்பட்டிருந்த திருமண வாய்ப்பு கைகூடும்.

மிதுனம்

இந்தக் குருப் பெயர்ச்சிக்கு தங்களால் முடிந்த அளவு விலங்குகளுக்கு உணவிடுங்கள். அஷ்ட லஷ்மி கோவிலுக்குச் சென்றோ, அல்லது வீட்டில் அஷ்ட லக்ஷ்மி படத்தினை வைத்தோ வழிபடுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலையை சுவாமிக்கு இட்டு 6 முறை வலம் வந்து வேண்டிக் கொள்ளுங்கள்.

கடகம்

துர்க்கையை வழிபடுவது மன தைரியத்தை அதிகரிக்கும். உங்களுக்கு வரும் சோதனைகளை வெற்றி கொள்ளத் தேவைப்படும் வலிமையை துர்க்கை வழிபாடு கொடுக்கும். புதன் கிழமை தோறும் துளசி இலைகளைக் கொண்டு லஷ்மி வழிபாடு செய்யுங்கள். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது தேவையற்ற மனக் குழப்பங்களைக் குறைக்கும்.

perumal
Credit: Lankasee

சிம்மம்

பணவரவுகளை அதிகரிக்க சிவன் கோவிலை 11 முறை சுற்றி வந்து வழிபடவும். வராஹி அம்மனை வழிபடுவது குடும்பத்தில் நல் நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும். பிரதோஷ தினத்தன்று ஸ்ரீ நந்தீஸ்வரரை வணங்குதல் மிகச்சிறந்த பலன்களைத் தரும்.

கன்னி

ஐயப்பனை தினமும் நினைத்து வணங்குதல் உங்கள் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைக் குறைக்கும். ஒவ்வொரு வியாழன் அன்றும் காளி கோவிலுக்குச் சென்று ராகுகாலத்தில் பூஜை செய்வது உங்களைச் சூழ்ந்துள்ள பாவங்களைக் குறைக்கும். செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபடுங்கள்.

துலாம்

குல தெய்வ வழிபாடு அக மகிழ்ச்சியைத் தரும். வெள்ளிதோறும் பத்ரகாளி அம்மனை வணங்குதல் சோதனைகளைத் தாண்டி சாதிக்கும் மன உறுதியைத் தரும். லஷ்மி நரசிம்மரைத் தொடர்ந்து வணங்கிவர பணவரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

முழுமுதற் கடவுளான விநாயகரை அருகம்புல் வைத்து வணங்கிவர காரியசித்தி ஏற்படும். மேலும் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணக்கஷ்டங்கள் நீங்கும்.

 vinayagar arugampul
Credit: Advait

தனுசு

உங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் கோவிலில் உள்ள சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. இதனால் உங்களது பாவம் மற்றும் தீமைகள் குறையும். ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு பரிகாரபூஜை செய்வது சிறந்த பலன்களைக் கொடுக்கும். சனிக்கிழமை அன்று அஞ்சனைச் செல்வனான ஆஞ்சிநேயருக்கு வெற்றிலை மாலையோ அல்லது வடை மாலையோ அணிவித்து வழிபடுவது மன தைரியத்தைக் கொடுக்கும்.

மகரம்

காலக் கடவுள் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் பகிழ்ச்சி பெருகும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சிநேயரை வழிபட்டால் சூழ்ந்துள்ள கஷ்டங்கள் விலகும். புதன் கிழமையன்று ராமனை வழிபடுதல் சிறப்பு.

கும்பம்

விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபடுதல் சாதகமான பலன்களைத் தரும். திங்கட்கிழமை பார்வதி தேவியை வணங்கிவர தேவையில்லாத குழப்பங்கள் தீரும், மனத் தெளிவு கிடைக்கும். பகவத் கீதையைப் படிப்பதும் பகவான் கிருஷ்ணரை வணங்குவதும் நல்ல எதிர்காலத்தினைக் கொடுக்கும்.

 bhagavan krishna
Credit: Swaha

மீனம்

வெள்ளிக் கிழமைகளில் லட்சுமி தேவியை வழிபடுதல் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும். பணவரவுகளை அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை மாயோன் முருகனை வழிபட்டு வந்தால் குடும்பப் பிரச்சனைகள் அகலும். சஷ்டி தினத்தன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது ஏராளமான நல்ல பலன்களைத் தரும்.