குரு பெயர்ச்சி 2018 : உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது ?

Date:

நவ கிரகங்களில் சுப கிரகம் என்று அழைக்கப்படும் குரு வரும் அக்டோபர் 4 – ஆம் தேதி துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். சஞ்சாரம் செய்யும் ராசிக்கு உரியவர்களுக்கு பல நன்மைகளைக் கொடுப்பவர் குரு பகவான். குருவின் பார்வையே அனைத்து தோஷங்களையும் நீக்கிவிடும். இந்தவருடம் நிகழ இருக்கும் குரு பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை விளையும் என்பதைக் கீழே பார்க்கலாம்.

 guru peyarchi
Credit: Kalabam

மேஷம்  (70/100)

மேஷ ராசியைப் பொறுத்தவரை 7 ஆம் இடத்திலிருந்து 8 ஆம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறது. மேஷ ராசியின் 12, 2, 4 ஆகிய இடங்களைக் குரு பார்ப்பதால் அதிக அளவு நன்மை ஏற்படும். செலவுகள் அதிகரித்தாலும் அவை சுபச் செலவுகளாகவே அமையும். நீண்ட காலமாகவே இருக்கும் மனக்குழப்பம் முடிவிற்கு வரும். மிக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவை நல்ல பலன்களைத் தரும்.

12 ஆம் இடத்தை ஐந்தாம் பார்வையால் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் வாய்ப்பு அமையும். 7 ஆம் பார்வையாய் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்ப்புகளை மீறி வெற்றிவாகை சூடுவீர்கள். நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் கருத்து முரண்பாடுகளுடன் இருந்தவர்கள் உங்களுடன் இணக்கம் காட்டுவார்கள். 4 ஆம் இடத்தை குரு 9 ஆம் பார்வையால் பார்ப்பதால் குடும்பங்களில் சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். வெகுநாளாய் முயற்சி செய்யும் வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல நினைப்போருக்குத் தக்க நன்மைகள் நடக்கும்.

புதிய புதிய முயற்சிகளை வியாபாரத்தில் புகுத்துவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வந்து நீங்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பணிச்சுமை அதிகமாகலாம். உங்களைப்பற்றிய அவதூறுகள் கிளம்பும். வார்த்தையில் கவனம் காக்க வேண்டும்.

ரிஷிபம் (85/100)

அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருக்கும் ரிஷிப ராசிக்காரர்கள் புத்துணர்வு அடையும் காலம் இது. 6 ஆம் இடத்திலிருந்து 7 ஆம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறது. மனதில் குடிகொண்டிருந்த இனம்புரியாத சோகம் நீங்கும். புது உற்சாகம் பிறக்கும். எதிர்ப்படும் சவால்களைத் திறமையுடன் எதிர்த்து வெற்றி காண்பீர்கள். உடல்நிலை தொடர்பான பயங்கள் அகலும். ஆரோக்கியம் பெறுவீர்கள்.

ஐந்தாம் பார்வையால் குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். திறமையைப் பாராட்டி புதிய பொறுப்புகள் தேடிவரும். ராசியினை 7 ஆம் பார்வையால் குரு பார்ப்பதால் குடும்ப உறவுகள் வலுப்படும். தடைபட்ட திருமணங்கள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். குரு 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் புத்திக்கூர்மை அதிகமாகும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். ஆளுமைத்திறன் அதிகரிப்பதால் உங்கள் புகழ் ஓங்கும்.

மிதுனம் (50/100)

மிதுன ராசிக்கு ஐந்தாம் இடத்திலிருந்து 6 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறது குரு. கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கான வழி என்பதை உணர்வீர்கள். இரட்டைவேடம் போடும் போலி நண்பர்களை இனம் கண்டுகொள்வீர்கள். ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

5 ஆம் பார்வையால் 10 இடத்தைக் குரு பார்ப்பதால் விரும்பிய வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி செய்வோர் அதிக கவனம் செலுத்தவேண்டும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையலாம். ஆனால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது. 12 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையால் குரு பார்ப்பதால் நீண்ட நாளாக போக நினைக்கும் ஆலயங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். இயன்றவரை சிக்கனமாக இருத்தல் நன்று. 9 ஆம் பார்வையால் 2 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பண வரவைக் கொடுக்கும். மகிழ்ச்சி பெருகும்.

வீடுகளில் கருத்து வேறுபாடுகள் வரும். கணவன் மனைவி இடையே பிணக்குகள் நடைபெறும். பூர்வீக நிலங்களை விற்கவேண்டிய நிலை வரலாம். மனஇறுக்கம் அதிகமாகும். மூத்த பதவிகளில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.

கடகம் (75/100)

கடக ராசிக் காரர்களுக்கு மனத்தெளிவு ஏற்படக்கூடிய நேரம் இது. கிடப்பில் போடப்பட்ட பல முன்னேற்ற நடவடிக்கைகளை நம்பிக்கையுடன் செயல்படுத்துவீர்கள். கொடுத்த கடன் வீடு வந்துசேரும். வீடு கட்ட இடம் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்திலிருந்து 5 ஆம் இடத்திற்கு குரு இடம்பெயர்கிறார்.

5 ஆம் பார்வையாய் 9 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு பகவான் புதிய முன்னேற்றங்களைத் தருவார். வெகுநாளாய் தேடிய வேலை கைகூடும். வியாபாரத்தில் அதிக லாபம் வரும். தந்தை வழியில் இருந்து எதிர்பாராத பணவரவுகள் இருக்கும். 7 ஆம் பார்வையால் 11 ஆம் இடத்தை குரு பார்ப்பதனால் புகழ் தேடிவரும். பாராட்டு மழையினால் நனைவீர்கள். உங்கள் ராசியினை 9 ஆம் பார்வையால் பார்க்கும் குரு உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தினைக் கொடுப்பார். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

வீண் சந்தேகங்களின் விளைவால் நண்பர்களிடையே கசப்பான நிகழ்வுகள் நடக்கும். துணைவியின் உடல்நலத்தில் குறைபாடுகள் தோன்றும். வாகனப் பயணங்களில் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம் (50/100)

மூன்றாம் இடத்தில் இருந்த குரு பகவான் தற்போது நான்காம் இடத்திற்கு வருகிறார். உங்களுடைய அறிவாற்றலை நிரூபிக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். செலவுகள் துரத்தினாலும் அனைத்தும் எதிர்காலத்திற்கான முதலீடாகவோ அல்லது சுபச் செலவுகளாகவோ இருக்கும். ஆதாயத்துடன் கூடிய அலைச்சல் வரும்.

5 ஆம் பார்வையாய் 8 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு கடன் பிரச்சனையிலிருந்து தீர்வைத் தருவார். வேலை நிமித்தமாக இருந்த சங்கடங்கள் மறையும். புதிய வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். உடல்நலம் முன்னேறும். 10 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையாய் குரு பார்ப்பதினால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். தொழில் சார்ந்த முன்னேற்றம் இருக்கும். அலுவகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 12 ஆம் இடத்தை 9 ஆம் பார்வையாய் குரு பார்ப்பதினால் புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். நற் செலவுகள் அதிகரிக்கும்.

மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுதல் அவசியம். பணப்பற்றாக்குறை ஏற்பட்டு கடன்வாங்கும் சூழ்நிலை ஏற்படும். பணிச்சுமையின் காரணமாக மனக்குழப்பம் வரலாம். வீண்பழி வந்துசேரும். புது நட்புகளினால் பிரச்சனை உருவாகும்.

கன்னி (80/100)

கன்னி ராசியைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார். தந்தை வழிச் சொத்துக்கள் கைக்கு வரும். புதிய வாகனங்கள், வீடு வாங்கக்கூடிய சூழல் உண்டாகும்.

ஐந்தாம் பார்வையாய் 7 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பார். கணவன் மனைவிக்குள்ளே பிணக்குகள் வந்தாலும் உடனே சரியாகும். திருமணத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கும். ராசிக்கு ஏழாம் பார்வையாய் 9 ஆம் இடத்தைக் குரு பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் நலம் பெறும். வெளிநாட்டு வேலைக்குத் தைரியமாக விண்ணப்பிக்கலாம். 11 ஆம் இடத்தை 9 ஆம் பார்வையாய் குரு பார்ப்பதினால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராக்கடன் வந்துசேரும்.

கடும் முயற்சிக்குப் பிறகே காரியம் கைகூடும். வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும். தாயாருக்கு உடல்நிலைக் குறைப்பாடுகள் வரலாம். பொது இடத்தில் நாவினைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.

துலாம் (95/100)

துலாம் ராசிக்காரர்களுக்கு இனி ஒரு பொற்காலம் அமையக் காத்திருக்கிறது. இதுவரைக் கண்டிராத பெரும் வெற்றிகளை சுலபமாக பெறுவீர்கள். உங்களுடைய ராசிக்கு ஜென்ம இடத்திலிருந்து தன லாப இடமான இரண்டாம் இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.

5 ஆம் பார்வையாய் 6 ஆம் வீட்டைக் குரு பார்ப்பதினால் பண வரவு மிக அதிகமாயிருக்கும். தடைக்கற்களை எல்லாம் உடைத்து தூளாக்கி விட்டு முன்னேறுவீர்கள். எப்பணி எடுத்தாலும் அதில் ஜெயித்துக்காட்டுவீர்கள். 8 ஆம் இடத்தை 7 ஆம் பார்வையாய் குரு பார்ப்பது தன்னம்பிக்கையை உயர்த்தும். சவால்களைத் தைரியமாக எதிர்கொள்வீர்கள். ராஜ கிரகங்களான குரு மற்றும் சனி உங்களுக்கு எல்லையற்ற நன்மைகளைத் தர இருக்கிறது. 10 இடத்தை பார்க்கும் குரு பதவி உயர்வு, இடமாற்றம், பணப்புழக்கம் ஆகியவற்றை அதிகரிப்பார். வேலை சார்ந்து இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

சிறிய சிறிய உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டாலும் குணமாகிவிடும். பணத்தைச் சரியான துறையில் முதலீடு செய்வது முக்கியம். உங்களுக்கு ஏற்பட இருக்கும் பண வரவால் பொறாமை கொண்டு சிலர் செயல்படுவர். அவர்களிடமிருந்து விலகியிருத்தல் நல்லது.

விருச்சிகம் (45/100)

அரசாங்கத்தினால் கிடைக்க இருந்த பலன்கள் கிடைக்கும். 12 ஆம் இடத்திலிருந்து ஜென்ம ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். வேலை பார்க்கும் இடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும். குரு ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் மனத்தெளிவு ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். 7 ஆம் இடத்தில் குருவின் பார்வை குடும்ப பிணக்குகளை முடித்துவைக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய ராசிக்கு 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தைக்கு நீண்ட நாளாக இருந்த உடல்நிலைக் குறைபாடு நீங்கும்.

கோபம் அதிகமாகும். மேலதிகாரிகளுடன் சுமூகமாகச் செல்வது நல்லது. சளித்தொல்லையால் தொண்டை, மார்பு வலி ஏற்படலாம். தனிமையை நினைத்துக் கவலைப்படுவீர்கள். இரவு உறக்கம் குறையும். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம். புதிய நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு (60/100)

தனுசு ராசிக்கார்களுக்கு 12 ஆம் இடத்திற்கு பெயர்கிறார் குரு. வளர்ச்சி நிச்சயம் இருக்கும். உத்தியோகத்தில் பத்தி உயர்வு கிடைக்கும். 4 ஆம் இடத்தைப் பார்க்கும் குரு வீடு, வாகன யோகத்தைத் தருவார். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் வல்லமை பெருகும். தாயார் வழி உறவுகளால் பணவரவு அதிகமாகும். குரு 6 ஆம் இடத்தைப் பார்ப்பதினால் பெரிய மனிதர்களுடன் அறிமுகம் ஆவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு சாதகமான சூழல் உருவாகும். குருவின் 8 ஆம் இடத்தின் பார்வை தாயாரின் உடல்நிலையை மேம்படுத்தும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

தொடர் செலவுகளால் பிரச்சனை ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். புதிய வாக்குறுதிகளால் மனக்கஷ்டம் ஏற்படக்கூடும். மனதில் தோன்றும் எண்ணங்களை பொதுவெளியில் பேசி சிலரின் வெறுப்பிற்கு உள்ளாவீர்கள். புதிய நபர்களை நம்பி எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம்.

மகரம் (85/100)

உங்கள் ராசியின் லாப வீட்டினில் அமர இருக்கும் குருவினால் எண்ணற்ற பலன்களைப் பெற இருக்கிறீர்கள். குறிப்பாக குடும்ப விடயங்களில் மகிழ்ச்சி பிறக்கும். இதுவரை ஏற்பட்டுவந்த எல்லா தடைகளும் நீங்கும்.

ராசிக்கு மூன்றாம் இடத்தைக் குரு பார்ப்பதினால் பயணங்கள் ஏற்படலாம். உங்களுடைய தனித்தன்மை வெளிப்படும் வகையினில் சூழல் அமையும். வெளிநாடு சென்று உயர்கல்வி மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 5 ஆம் இடத்தின் குரு பார்வையானது புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை, மனக்குழப்பம் ஆகியவை குருவின் 7 ஆம் இடத்தின் பார்வையால் மறையும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பெருகும்.

கும்பம் (50/100)

தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்களுக்கு நன்மை செய்யும் கிரகமான சனி 11 ஆம் இடத்தில் இருப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 10 இடத்திற்கு வந்திருக்கும் குருவால் புதியதொழில் ஆரம்பிக்கும் சூழல் ஏற்படும்.

உங்களுடைய ராசிக்கு தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் கைகூடும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். 4 ஆம் இடத்தை குரு பார்ப்பது தாயாரின் உடல்நலத்தை மேம்படுத்தும். வாகனயோகம் ஏற்படும். வெளிநாடு சென்று உயர்கல்வி பெற நினைப்போர் தாராளமாக விண்ணப்பிக்கலாம். கடன்தொல்லை, வியாபாரத்தில் இருந்துவந்த தடை ஆகியவை நீங்கும்.

தர்ம சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக்கூடும். நீங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இயலாமல் தவிப்பீர்கள். சிலர் உங்களை ஏணியாய்ப் பயன்படுத்துவார்கள். உறவினர்களால் வீண்வம்பு வரும். உங்களைப் பற்றிய வதந்திகள் பரவும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.

மீனம் (95/100)

மீன ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலங்கள் அமோகமான பலன்களை தரவிருக்கின்றன. 9 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாவது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். அந்த அபூர்வ நிகழ்வு நீங்கள் நினைக்கும் எல்லா நன்மைகளையும் உங்களுக்கு அளிக்கும். புதிய வாழக்கை உங்களுக்கு அமையும்.

3 ஆம் இடத்தை குரு பார்ப்பது தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தரும். பயணங்கள் ஏற்பட்டாலும் அவை லாபத்தையே விளைவிக்கும். தடைகளைத் தகர்த்து வெற்றிக்கொடி கட்டுவீர்கள். தந்தை வழிச் சொத்துக்கள் வந்துசேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பீர்கள். குரு உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பது உங்களுடைய பிரச்சனைகளை முடிவிற்குக் கொண்டுவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

வீடு, வாகன, ஆபரணங்கள் வாங்குவது சுலபமாகும். உங்களுடைய அனுபவ அறிவைக்கண்டு பலர் உங்களைப் பாராட்டுவார்கள். விருதுகள், பதவி உயர்வு ஆகியவை தேடிவரும். உங்களுடைய பொற்காலம் அக்டோபர் 4 ஆம் தேதியிலிருந்து ஆரம்பம் ஆகிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!