புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட இருக்கின்றன. அடுத்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றிய ஆச்சரியமும், எப்படி இருக்க வேண்டும் என பல திட்டங்களும் இந்நேரம் பலரால் வகுக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அடுத்த ஆண்டை எதிர்கொள்ளத் தயாராவதற்கு முன் உங்களுடைய ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கபோகிறது? என்பதை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

1மேஷம் (70/100)
மேஷ ராசியைப் பொறுத்தவரை 8- ல் குருவும், ஒன்பதாம் வீட்டில் சனியும், மார்ச் 6 ஆம் தேதிக்குப் பிறகு மூன்றில் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். குருவின் பார்வை இருப்பது மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். தடைகள் இருப்பினும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கனியை எட்டிப்பிடிப்பதில் எவ்வித தடங்களும் இருக்காது. உங்களுடைய ராசிக்கு பாக்கியபதியான குருபகவான் ராசிக்கு எட்டாம் இடத்திற்குச் செல்வது வரவு செலவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
இந்த அஷ்டமகுரு காலத்தில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது தேவையில்லாத சிக்கல்களில் இருந்து உங்களைக் காக்கும். வேலைப்பளு மற்றும் அலுவலகத்தில் கருத்துவேறுபாடுகள் உருவாகலாம். பொறுமையே பெருமை என்பதை நீங்கள் பின்பற்ற வேண்டிய காலம் இது.
திடீர் பயணங்களும், அலுப்பூட்டும் வேலைப்பளுவும் இருந்தாலும் அதிலிருந்து ஆதாயம் நிச்சயம் உண்டு. பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பாக சிக்கல்கள் வரக்கூடும்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் வாய்ப்பு சிலருக்கு தேடிவரும். பணவரவு அதிகமாகும் அதே சமயத்தில் திடீர் செலவுகளும் இருந்தபடியே இருக்கும். தாயாருக்கு நீண்ட நாளாக இருந்துவந்த உடல் அசவுகரியம் தீரும். பூரண குணமடைவார்கள். தந்தை வழியில் செலவுகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் தன்னம்பிக்கையும் பொறுமையும், விவேகமும் இருந்தால் அடுத்த வருடம் உங்களுடைய வருடம் தான்.
2ரிஷபம் (65/100)
அஷ்டமச்சனி நடந்துகொண்டிருக்கும் இப்போது ராகு மூன்றாம் இடத்திற்கும் கேது ஒன்பதாம் இடத்திற்கும் சஞ்சாரம் செய்கிறார்கள். கஷ்டங்கள் வந்தாலும் அடுத்த வினாடியே அதற்கான தீர்வும் வந்துசேரும்.
வருடம் முழுவதும் வேலையில் கவனமாக இருப்பீர்கள். மேலும் கடினமாக உழைத்து உங்களது வேலையில் தனித்துவமான இடத்தைப் பிடிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். உங்களது பொருளாதார நிலை உயர்ந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைப்பது நல்லது.
இதுவரை உங்கள் ராசிக்கு 3,9 ல் இருந்து நல்ல பலன்களை,சுப பலன்களை வாரி வழங்கிய ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் மார்ச் ஆறாம் தேதியன்று உங்கள் ராசிக்கு 2, 8 ஆம் இடத்திற்கு நகர்கிறார்கள். பொதுவாக 2,4,7,8,12 ல் பாவக்கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. இதனால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
யாருக்கும் முன்ஜாமினோ, பிறர் வாங்கிய பணத்திற்கு உத்திரவாதமோ அளிக்கவேண்டாம். குடும்பத்தில் பிறருடைய ஈடுபாட்டை கட்டுப்படுத்துங்கள். அனைவரிடமும் அன்பாகப் பேசுங்கள். பிரச்சனை ஏற்படுமாயின் ஆரம்பத்திலேயே மானது விட்டு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். வளரவிடுதல் ஆபத்து.
பணவரவுகள் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கும். அதேநேரத்தில் உடல்நிலையை சரியாக பாதுகாத்தல் அவசியம். மூன்றாம் நபரிடம் உங்களுடைய குறைகளைச் சொல்ல வேண்டாம். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இந்தப் புதுவருடம் அமோக மகிழ்ச்சியை உங்களுக்குத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
3மிதுனம் (80/100)
ராசிக்கு 5-ல் சந்திரனும் சுக்கிரனும் இருக்கும் நேரத்தில் புதுவருடம் பிறக்க இருப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். புதிய திட்டங்கள் நிறைவேறும்.
குரு பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் வேலை தொடர்பாக இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். ஏற்கனவே பணிபுரியும் மிதுன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்தபடி பணிமாற்றம் நிகழும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான பண வரவு ஏற்படும்.
உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியான சனி ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பது நல்ல பலன்களைத் தரும். பொருளாதார மற்றும் மதிப்பு உயர்வு நடைபெறும். உங்களுடைய சொல்லிற்கு மரியாதை கூடும். வழக்குகளில் தீர்ப்பு தாமதமாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் அதேவேளையில் கண்டகச் சனி இருப்பதால் உறவுகளில் விரிசல் விழவும் வாய்ப்புண்டு.
பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். வாகன, வீடு வாங்கு திட்டத்தை நன்கு யோசித்து இறங்குதல் அவசியம். மனக்குழப்பங்கள் இருந்தாலும், அன்பால் அவற்றை வெல்லும் வருடமாக 2019 இருக்கும்.
4கடகம் (90/100)
ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து குரு ராசியைப் பார்ப்பது நற்பலன்களைக் கொடுக்கும். உங்கள் மீதான மரியாதை உயரும். தன்னம்பிக்கை அதிகரிப்பதை கண்கூடாக உணர்வீர்கள். இதுவரை தவிர்த்துவந்த பல கடமைகளை செய்து முடிப்பீர்கள். குரு, சனி, ராகு ஆகிய கிரகங்களின் இருப்பு உங்களுக்கு நன்மையையே தர இருக்கிறது.
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை வெகுநாட்களாக பிரிந்திருந்த கணவன் – மனைவி கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். இத்தனை நாள் ஏங்கிய குழந்த பாக்கியம் கிடைக்கும்.
பதவி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு என இந்த வருடம் உங்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி தரத்தக்க விஷயங்களை அளிக்கப் போகிறது. சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இந்த வருடம் காரியம் சித்தியாகும். வாகன மற்றும் வீடு வாங்க உத்தேசிப்பவர்கள் தாங்கள் நினைத்ததை செய்து முடிக்கும் காலம் அடுத்த ஆண்டு என்பதை மறக்காதீர்கள்.
வருடம் முழுவதும் ராசிக்கு 6-ல் சனி இருப்பதால், எதிரிகளும் நட்பு பாராட்டுவார்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். மொத்தத்தில் அடுத்த வருடம் உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஆண்டாக மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இருக்கப் போகிறது.
5சிம்மம் (80/100)
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஏற்படும் ராகு பெயர்ச்சியினால் 11 ஆம் இடத்தில் ராகுவும், 5 ல் கேதுவும் வர இருக்கிறார்கள். பாவ கிரகங்களைப் பொறுத்தவரை 3,6,11 ஆகிய இடங்களுக்கு வரும்போது நல்லா பலன்களைத் தரும்.
உங்களுடைய ராசியைப் பொறுத்தவரை 11 ஆம் இடத்திற்கு ராகு வருவது, உடன்பிறப்புகள் இடையே நல்ல புரிதலையும், ஆதாயத்தையும் தரவல்லது. பணவரவுகள் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் ஏற்படும்.
புதிய தொழில் தொடங்க வாய்ப்பு நெருங்கிவரும். எதிர்பார்த்த இடத்தில் வேலை கிடைக்கும். கல்வி செலவினங்கள் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு சூரியனின் பார்வை மிகப்பெரிய பலத்தை உங்களுக்குக் கொடுக்கும். உயர்பதவியில் இருக்கும் முக்கிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்க வழி பிறக்கும்.
பணவரவுகள் எதிர்பார்த்தபடி அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அடுத்த வருடம் மகிழ்ச்சி தரத்தக்க ஆண்டாக இருக்கப்போகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
6கன்னி (65/100)
கன்னி ராசிக்காரர்கள் தங்களது பேச்சு திறனால் வெற்றியை ருசிப்பார்கள். உங்களது பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். புத்தாண்டு பிறக்கும்போது 7 ல் செவ்வாய் இருப்பதால் கணவன் மனைவி இடையே தேவையில்லாத சந்தேகங்கள் வரலாம். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை மூலம் அவற்றை சமாளிப்பது அவசியம்.
பூர்வீகச் சொத்துகளில் சிக்கல்கள் வரலாம். உடன் பிறந்தவர்களின் மூலம் மனச்சோர்வு அதிகரிக்கும். முன்கோபத்தை குறையுங்கள். தாயாரின் உடல்நிலையில் பதிப்புகள் வரலாம். மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும்.
திருமணம், புது வீடு போன்ற சுப காரியங்கள் தள்ளிப்போகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். லாபம் தரக்கூடிய திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அலுவலகங்களில் சக ஊழியரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். யாரிடமும் அளவிற்கு அதிகமாய் சிநேகம் பாராட்டவேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தை முடியும். லாபம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு செலவுகளும் இருக்கும் கலவையான பலன்கள் அடுத்த ஆண்டு உண்டு.
7துலாம் (70/100)
இனிமையாகப் பேசி உங்களைச் சூழ்ந்த பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். இந்த ஆண்டுத் துவக்கத்தில் புதிய மன உற்சாகம் பிறக்கும். வாழ்க்கைத் துணை வழியாக ஆதாயங்கள் வந்து சேரும். வெகுநாட்களாக மனதை நெருடி வந்த கடனில் இருந்து விடுபடுவீர்கள்.
உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்துசேரும். உங்களுடைய பேச்சிற்கு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அரசு மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதுவீடு கட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக ஹெல்மெட் அணியுங்கள். முன்பின் தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுக்க வேண்டாம். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்துதல் அவசியம். சிறிய சிறிய வாக்குவாதங்கள் வந்து அகலும்.
ஆதாயத்துடன் கூடிய அலைச்சல் இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கலாம். அடிக்கடி ஏற்படும் மனக்குழப்பங்களின் போது கவனமாக இருக்கவேண்டும். முன்கோபத்தை கைவிடுங்கள். திடீர் பண வரவுகள் இருக்கும். சோதனைகள் வந்தாலும் விடாமுயற்சியாலும், நா வன்மையாலும் சாதனையாக மாற்றக்கூடிய ஆண்டாக 2019 அமையும்.
8விருச்சிகம் (75/100)
சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெகுநாட்களாக ஒதுங்கியிருந்த உறவினர்கள் தேடிவந்து சேர்வார்கள். குழந்தை பாக்கியம் உண்டு. புதுவீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
புதிய நபர்களிடம் வீட்டு விஷயங்களைப் பேசவேண்டாம். வீண் கோபங்கள் ஏற்படும். மன அமைதி பாதிக்கக்கூடும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். உடலில் சில பாதிப்புகள் ஏற்படலாம். அதனை உதாசீனம் செய்ய வேண்டாம், கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
உத்தியோகத்தில் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களிடையே போட்டிகள் அதிகரிக்கலாம். மனஸ்தாபங்களை ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயலுங்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
வீட்டில் தந்தையிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் குறித்த நேரத்தில் கிடைக்கும். முன்பின் தெரியாதவர்களை நம்பவேண்டாம். முன்னெச்செரிக்கையுடன் இருந்து பல மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் ஆண்டாக 2019 இருக்கும்.
9தனுசு (70/100)
ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் இருக்கும்போது வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். ஆண்டின் முதல் மாதத்தில் சில உடல் நலக்குறைவுகள் ஏற்படலாம். பயணத்தில் களைப்பு தோன்றும். வேலையை பொறுத்த வரை கலவையான பலன்களை இந்த வருடம் பெறுவீர்கள். ஏற்றமும் இறக்கமும் நிறைந்த வருடமாக இது இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவீர்கள். பொருளாதார நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களது கைக்கு வந்து சேரும்.
பிப்ரவரி வரை ராசிக்கு 2 ல் கேது, 8-ல் ராகு இருப்பதால் சிறிய மனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் மிக கவனத்துடன் செல்வது நல்லது.
குடும்பத்தில் கணவன் – மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இனம் தெரியாத சின்னச் சின்ன கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள்கூட உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.
தொலை தூர பயணங்களால் ஓரளவிற்கு அனுகூலங்கள் இருக்கும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும். திட்டமிடல், வீண் கோபத்தைத் தவிர்ப்பது, பழைய கசப்பான நினைவுகளில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்கும் ஆர்வம் போன்றவைகளால் அடுத்த ஆண்டு நிச்சயம் இன்பமயமானதாய் இருக்கும்.
10மகரம் (80/100)
2019 ஆண்டில் பொருளாதார நெருக்கடி நிலை நீங்கும். இவ்வளவு நாட்கள் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வெகுநாளாக எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
பணிமாற்றம், சம்பள உயர்வு ஆகியவையும் குறித்த நேரத்தில் நடைபெறும். மனக்குழப்பங்களில் இருந்து விடுதலை பெற்று புத்துணர்வை அடைவீர்கள். வீடு வாங்குவது மற்றும் பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். கனவு வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் பணவரவு கிடைக்கும்.
பொது இடங்களில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவி மிக நெருக்கமாய் இருப்பார்கள். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.
திருமண தகவல்கள் நல்ல முடிவுகளைத் தரும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து மன மகிழ்ச்சியை அடைவீர்கள். மொத்தத்தில் அடுத்தவருடம் உங்களுக்கு இன்பமாய் அமைய இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
11கும்பம் (85/100)
நீண்ட நாளாக இருந்துவந்த ஒரு சிக்கல் அடுத்த வருடம் தீர்ந்து போகும். பல பொருள் வரவுகளை கொடுக்கும். உங்களது பொருளாதார நிலையை அது உறுதியாக்கும். வருடம் முழுவதும் சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து குவியும், இதனால் உற்சாகமாக வளைய வருவீர்கள்.
பிப்ரவரி வரை கேது 12-ல் தொடர்வதால், நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். சில நாள்களில் தூக்கம் குறையும். உங்களுடைய மரியாதை போது இடங்களில் உயரும். பழைய நண்பர்களின் உதவி தேவையான சமயத்தில் கிடைக்கும்.
சுபச்செலவுகளுக்காக கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சனி லாப வீட்டில் தொடர்வதால், வசதி வாய்ப்புகள் பெருகும். அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும்.
குடும்ப உறுப்பினர்களால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். தொலைதூர பயணங்களால் ஆதாயம் உண்டு. அடுத்த வருடம் உங்களுக்கு வாகை சூடும் வருடமாக இருக்கும்.
12மீனம் (95/100)
சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் வருடம் பிறப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உங்களை விட்டு விலகி சென்றவர்களும் உங்களிடம் வலிய வந்து நட்பு பாராட்டும் நிலையை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும்.
கடின உழைப்பு, அர்பணிப்பு மற்றும் நேர்மையான பணியாளராக மற்றவரால் மதிக்கப்படுவீர்கள். காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுதல் மற்றும் இரவில் சரியான நேரத்துக்கு உறங்க செல்லுதல் ஆகியவற்றை கடைபிடித்தல் அவசியம். போதிய உறக்கம் உடலை ஆரோக்கியமாக வைக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். மனதை நிலைப்படுத்த தியானம் செய்யலாம்.
புண்ணிய தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் அனைவருடனும் அன்புடன் பேசுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர் உங்களைப் புகழ்வார்கள். சரியான முடிவுகளால் ஆதாயம் கிடைக்கும். மனம் வலுப்படும். மொத்தத்தில் அடுத்த வருடம் பல ஆச்சர்யங்களை அள்ளித்தரும் வருடமாக இருக்கப் போகிறது.