செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் சார்பில் அனுப்பட்ட ஆளில்லா விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி செவ்வாயின் பரப்பில் தரையிறங்கியது. பல சிக்கல்களுக்கு இடையே வெற்றிபெற்ற இன்சைட் விண்கலத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் ஒருபகுதியாக அங்குள்ள காற்றின் வேகம் அளவிடப்பட்டுள்ளது. சென்சார்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட இந்த ஒலியானது செவ்வாய் கிரகத்தின் காற்றின் வேகத்தினால் உருவானவையாகும். இதன்மூலம் வெளி கிரகம் ஒன்றின் சப்தத்தினை முதன்முதலில் பூமிக்கு அனுப்பிய விண்கலம் என்ற பெருமையை இன்சைட் பெற்றிருக்கிறது.

இன்சைட் விண்கலம்
வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலான செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் முயற்சி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த மாதம் பரபரப்பான வெற்றியைப் பெற்றது. தற்போது செவ்வாயின் பரப்பில் தரையிறங்கியிருக்கும் இன்சைட் விண்கலம் தனது ஆராய்ச்சியினைத் துவங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக சீஸ்மோமீட்டர் என்னும் நிலநடுக்க மற்றும் அதிர்வு மானியை இயக்கச் செய்திருக்கிறது ஆய்வுக்குழு. அதனோடு பொருத்தப்பட்ட காற்றழுத்த சென்சாரும் இந்த ஆய்வின் போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சீஸ்மோமீட்டர் மற்றும் காற்றழுத்த சென்சார் மூலமாக செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஒலி நாசாவிற்கு அனுப்பட்டிருக்கிறது. டிசம்பர் முதல் தேதியன்று கிடைத்த செவ்வாய் கிரகத்தின் ஒலியலைகள் தான் முதன்முதலில் மனிதர்கள் கேட்கும் வேற்றுகிரகத்தின் சப்தங்கள் ஆகும்.

காற்றின் வேகம்
தற்போது செவ்வாய் கிரகத்தில் காற்றானது வட மேற்குத் திசையிலிருந்து வீசிவருகிறது. மேலும் காற்றின் வேகம் மணிக்கு 15 முதல் 24 கிலோமீட்டர்கள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கிளை மையமான ஜெட் புரொபல்ஷன் லேபரேட்டரியின் (Jet Propulsion Laboratory) ஆராய்ச்சியாளரான ப்ரூஸ் பெனர்ட் (Bruce Banerdt) இதுகுறித்து தெரிவிக்கும்போது செவ்வாய் கிரகத்தின் இந்த ஒலிகள் இந்தத் திட்டத்திற்காக உழைத்த ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்த பரிசு என்றார். மேலும் இந்த ஒலி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்தின் நில அதிர்வுகள் குறித்து இன்சைட் விண்கலம் ஆராய உள்ளது. மேலும் அங்கே அடிக்கடி ஏற்படும் புழுதிப் புயல் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.