நாம் வாழும் பூமி ஒரு நாள் கூட ஓய்வே எடுக்காமல் தினம் தினம் சுற்றிக்கொண்டே இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் தான் இரவு, பகல் போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. கேட்பதற்கு ஒரு சாதாரண விஷயமாக இருக்கும் பூமியின் இந்த செயல் தான் உண்மையில் நாம் உயிர் வாழ ஆதாரமாக இருக்கிறது!
சரி.. பூமி ஏன் சுற்றுகிறது? அப்படி என்ன அவசியம் அதற்கு? தொடர்ந்து பூமியால் எப்படி அசராமல் சுற்ற முடிகிறது? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Also Read: பனி மலைகளால் ஆன புது கிரகம் கண்டுபிடிப்பு!!

பூமி மட்டுமா சுற்றுகிறது?
ஒவ்வொரு 23 மணிநேரம், 56 நிமிடம் மற்றும் 4.09 நொடிக்கும் நமது பூமி அதன் அச்சில் ஒரு முழு சுழற்சியை முடிக்கின்றது. அதாவது பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள எடுக்கும் நேரம் இது. இப்படி பூமி சுற்றுவதால் தான் ஒரு நாளில் ஒரு பகுதியில் காலையில் சூரிய ஒளி பட்டு பகலும், மாலையில் சூரிய ஒளி இல்லாமல் இரவாகவும் இருக்கிறது. பூமியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரம் இருப்பதற்குப் பூமி சுற்றுவது தான் காரணம். இது 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானதிலிருந்து அன்றாடம் நடக்கும் ஒரு விஷயம் தான்.
பூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ வேகத்தில் சுழல்கிறது. அதாவது ஒரு நொடிக்குக் கிட்டத்தட்ட 30 கி.மீ. வேகம்!
சரி பூமி மட்டுமா சுற்றுகிறது என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. உண்மையில் சூரியக் குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கோளும் மாறுபட்ட வேகத்தில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றன. சிறு கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் என எல்லாமே சுழல்கின்றன. மிக மிக வேகமாக ஒரு நொடிக்கு நூறு முறை சுழலக் கூடிய பல்ஸர்களும்(Pulsar) விண்வெளியில் உள்ளன. ஏன் கருந்துளைகள் கூட சுழல்கின்றன. சரி எந்த விசையால் இப்படி இவை எல்லாம் நிற்காமல் சுற்றுகிறது? இதற்குப் பதில் நம் சூரியக் குடும்பம் உருவான விதத்தில் இருக்கிறது.
Also Read: பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மோதல் – உறுதிசெய்த விஞ்ஞானிகள்
பூமி நிற்காமல் சுற்ற காரணம் என்ன?
கிட்டத்தட்ட 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் சூரியக் குடும்பம் ஒரு பெரிய பரந்து விரிந்த தூசி மற்றும் வாயுக்களால் ஆன மேகமாகத் தான் இருந்தது. பின் அந்த மேகம் அதன் அதிக எடை காரணமாக படிப்படியாக உடைந்து சரிந்து பிரிந்து பின் ஒரு ராட்சத சமதள தட்டு (Disk) வடிவத்தில் தட்டையாகி, இதனால் ஏற்பட்ட விசையால் வேக வேகமாகச் சுழல ஆரம்பித்தது. அதன் பிறகு மத்தியிலிருந்த பருத்த பகுதி சூரியனாகவும், மீதம் இருந்த வாயுக்களும் தூசியும் உருண்டு திரண்டு கோள்கள், துணைக் கோள்கள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் என மொத்த அமைப்பும் உருவாகியது என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. இவை எல்லாம் ஏதோ ஒரு நொடியில் நடந்தவை அல்ல. எத்தனையோ மோதல்கள், ஈர்ப்பு விசை, சுழற்சி எனப் பல நிலைகளைத் தாண்டி தான் உருவாகின. இந்த மேகம் சரிவதற்கு முன்பு, வாயு மற்றும் தூசித் துகள்கள் எல்லா இடங்களிலும் நகர்ந்துகொண்டிருந்தன. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சில வாயு மற்றும் தூசிகள் ஒரு குறிப்பிட்ட திசையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக மாறி, அதன் சுழற்சியை ஒரே திசை இயக்கத்தில் அமைத்தன.

இப்படி சுழற்சி இயக்கத்திலிருந்த ஒரு அமைப்பிலிருந்து பூமி போன்ற கோள்கள் உருவானதால் தான் இன்னமும் அதே இயக்கத்தோடு இருக்கின்றன. அடுத்து சுழல ஆரம்பித்தவுடன் இந்த விசையை தடுக்கும் அளவிற்கு விண்வெளியில் பெரிய விசை எதுவும் இல்லை. அதனால் புற விசைகள் பெரிதாகச் செயல்படாத வரையில் இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்! பூமி நிற்காமல் சுற்ற காரணம், அதை தடுக்க எந்த விசையும் இல்லாதது தான்!
பூமி சுழலும் திசை
சுழன்று கொண்டிருந்த ஒரே ராட்சத தட்டிலிருந்து பிரிந்து வந்ததால் தான் பெரும்பாலும் எல்லா கோள்களும் பூமி உட்பட ஒரே திசையில் அதாவது தற்சுழற்சியில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகின்றன. ஆனால் இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக வெள்ளி மற்றும் யுரேனஸ், புளூட்டோ போன்றவை மற்ற கோள்களைப் போல அல்லாமல் எதிர்த் திசையில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகின்றன.
வெள்ளி பூமியைப் போல அல்லாமல் எதிர்த் திசையில் சுழல்கிறது. மற்ற கோள்கள் ஓரளவுக்குச் செங்குத்து நிலையில் சுழல யுரேனஸ் மட்டும் படுத்துக் கொண்டே சுழலும். அதாவது 97.77 டிகிரி சாய்ந்து சுழலும். இந்த கோள்கள் மட்டும் எப்படி இப்படிச் சுழல்கின்றன என்பது பற்றி யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஏதாவது ஒரு பெரிய மோதல் தான் இதற்குக் காரணமாக இருந்திருக்கும் என்கிறார்கள் வானியல் வல்லுநர்கள்.
பூமி சுற்றுவதை ஏன் உணர முடிவதில்லை?
பூமியின் விட்டம் 12,742 கி.மீ., சுற்றளவு 40,075 கி.மீ., நிறை 5.9722 x 10^24 கிலோ கிராம். இவ்வளவு பெரிய பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் அதன் வேகம் எவ்வளவு இருக்கும். கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உள்ளதல்லவா?

பூமி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1674 கி.மீ என்னும் வேகத்தில் சுழல்கிறது. அதாவது ஒரு நொடிக்குக் கிட்டத்தட்ட 30 கி.மீ. வேகம். அடுத்து, இவ்வளவு வேகத்தை நம்மால் ஏன் உணர முடிவதில்லை என்ற சந்தேகம் வரும். அது ஏன் என்றால் காரிலோ, ரயிலிலோ நாம் பயணிக்கும் போது நாம் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோம் என்பதை உணரமாட்டோம். ஜன்னல் வழியே பார்த்தால் கூட வெளியில் இருக்கும் இடம் தான் எதிர்த் திசையில் நகர்வது போலத் தெரியும். அதேபோல் ரயிலின் உள்ளே உள்ள காற்றும் நமக்கு வேகத்தைக் காட்டாது. ஏனெனில் ரயிலின் உள்ளே உள்ள காற்றும் சேர்ந்து ரயிலின் வேகத்துக்குப் பயணிக்கும்.
பூமி 23.5 டிகிரி சாய்ந்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது !
அதே போல நம் வளிமண்டலமும் பூமியோடு சேர்த்து அதன் வேகத்துக்கு நகர்வதால் தான் காற்றின் வேகத்தில் கூட பூமி சுற்றுவது தெரிவதில்லை. பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதால் தான் சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவது போலத் தெரிகிறது. மேடு பள்ளம் இல்லாத சாலையில் நாம் வாகனத்தில் சீரான வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது சிந்தாமல் தண்ணீர் கூட குடிக்க முடியும் அல்லவா? அப்படிதான்! ஆனால் ரயில் வேகம் அதிகமானாலோ வேகம் குறைந்தாலோ அந்த விசையை நம்மால் உணர முடியும். ஆனால் பூமியின் வேகம் உடனடியாக அதிகரிப்பதோ குறைவதோ கிடையாது.
இயற்கையின் அதிசயமான நம் பூமியின் இந்த நிதானமான சுழற்சி தான் உயிரினங்களை இன்று வரை உயிரோடு வைத்திருக்கிறது!