அமெரிக்காவின் முதல் நிலவுப்பயணம் ரஷியாவின் மீதான பொறாமையின் காரணமாக நிகழ்ந்தது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்கைப் பார்த்து முகம் சிவந்த அமெரிக்க தன பங்கிற்கு நிலவுப் பயனத்தினை நிகழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கடைசியில் அதில் வெற்றியும் பெற்றது. அதேபோல் சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு விண்வெளிக்கென தனி ராணுவப்படையை உருவாக்க, மறுபடியும் அமெரிக்க அரசாங்கத்திற்கு பொறாமை பொத்துக்கொண்டு வந்தது. அமெரிக்காவின் தேர்தல் காலங்களில் வெகுகாலமாக பேசப்பட்டு வந்த விண்வெளிப்படை 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார். அதற்கான பணியில் அந்நாட்டு அரசாங்கம் முழுவீச்சில் உழைத்து வருகிறது.

அமெரிக்கா மட்டும் இப்படி அல்ல. ரஷியா, சீனா போன்ற வளர்ந்த நாடுகள் உலகில் நடைமுறையில் பயன்படுத்தப்படும் ஆயுதத்தையோ, பாதுகாப்பு நடைமுறையையோ உடனடியாக தம் நாட்டிலும் ஏற்படுத்திக்கொள்வது இயல்புதான். மேலோட்டமாக பார்த்தால் இது பொறாமை எனலாம். ஆனால் இது எதிர்கால நலன் சார்ந்தது. இதை இப்படிச் சொல்லலாம். எது எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக இருக்குமோ? எதைப்பார்த்து மாற நாடுகள் நம்மிடம் வாலாட்டுமோ? அதை நிறுவுவது.
சோவியத் யூனியன் உடைந்தவுடன் உக்ரேன் நிலப்பகுதியில் பெட்ரோல் கிணறு தோண்டியது, எண்ணெய் பொருட்களின் விலையேற்றத்தால் சிக்கித்தவித்த அமெரிக்கா எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்தது, பிரேசில் மாற்று எரிபொருளுக்குத் தாவியது எல்லாமே இப்படி நடந்தவைதான். இந்தியா மிஷன் ஷக்தியை ஏற்படுத்தியதும் இதன் காரணமாகத்தான்.

பலமும் பலவீனமும்
ஒரு நாட்டை அழிக்க என்னவெல்லாம் செய்யலாம்? தீவிரவாதிகள் அதிகம் இருக்கிறார்கள் என ஒரே போடாக போட்டுவிட்டு குண்டு போடலாம். மக்களுக்கு எதிரான ஆட்சி நடக்கிறது என சொல்லிக்கொண்டு ஆட்சிக் கட்டிலில் சொகுசாக படுத்துக்கொள்ளலாம். இதெல்லாம் நம்பியார் காலத்து டெக்னிக். அப்போ புது வழி என்ன? நாட்டை அழிக்க அதைத் தனிமைப்படுத்தினாலே போதும். அதாவது அதன் தகவல் தொடர்புகளைத் துண்டிக்கவேண்டும். இதை செய்தாலே பாதி வெற்றி உறுதி.
சரி, எப்படி மொத்த நாட்டினுடைய தகவல் தொடர்பையும் ஒரே நேரத்தில் துண்டிப்பது? இருக்கவே இருக்கிறது செயற்கைக்கோள். இப்போது புரிகிறதா? ஒவ்வொரு நாட்டின் விவசாயம், தொழில்துறை என அனைத்துமே பகவான் செயற்கைக்கோளால் தான் இயங்கிவருகிறது. அந்த இணைப்பில் கைவைத்தால் பொருளாதாரம் பாதாளத்திற்குள் படுத்துவிடும்.
உலகம் அதனை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் தமது செயற்கைக்கோள்களை காப்பற்றவாவது இம்மாதிரியான திட்டங்கள் அவசியம். மேலும் பயனின்றி பூமியைச் சுற்றுவரும் காலாவதியான செயற்கைக்கோள்கள், பயன்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோளை மோதி செயலிழக்கச் செய்துவிடும். இதனைக் கருத்தில்கொண்டே மிஷன் ஷக்தியை இந்தியா உருவாக்கியது.

மிஷன் ஷக்தி
சுமார் 300 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றிவரும் செயற்கைக்கோளை அழிப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. இரண்டு முறைகளில் செயற்கைக்கோள் அழிப்பை நிகழ்த்தலாம். முதலாவது செயற்கைக்கோளுக்கு அருகே சென்றதும் வெடிக்கும் வகையிலான ஏவுகணைகளைப் பயன்படுத்துவது. இரண்டாவது நேரிடையாக செயற்கைக்கோள் மீதே ஏவுகணையை மோதச் செய்வது. ஷக்தி இரண்டாம் வகையினைச் சேர்ந்தது. எனவே துல்லியம் மிக முக்கியம்.
முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 18 டன் எடையுள்ள ஏவுகணையைக் கொண்டு 300 கிமீ உயரத்தில் பறந்த இந்திய செயற்கைக்கோளை ராணுவ விஞ்ஞானிகள் முதல் முயற்சியிலேயே துல்லியமாக தாக்கியது விண்வெளி பாதுகாப்பின் இமாலய சாதனை.

நான்காம் இடம்
செயற்கைக்கோள் எதிர்ப்புத் தொழில்நுட்பம் இதுவரை அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருந்தது. மிஷன் ஷக்தி மூலம் இந்தியா இந்தப் பட்டியலில் நுழைந்த நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.