எரிமலை (Volcano) என்றவுடனேயே நமக்கு இந்தோனேஷியா,மெக்ஸிகோ போன்ற நாடுகள் தான் நினைவிற்கு வரும். எரிமலை ஓரிடத்தில் வெடிக்கும்போது அது பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இவற்றால் சில நன்மைகளும் இருக்கின்றன.
ஆம்! பூமிக்கு வெகு ஆழத்தில் இருக்கும் வளமான கனிம சத்துக்கள் நிறைந்த மண்ணையும் கற்களையும் இவை தான் நிலப்பரப்பிற்கு கொண்டு வருகின்றன. அதோடு எரிமலைகள் சூடான உருகிய நிலையில் இருக்கும் பாறைக் குழம்பை மேற்பரப்பிற்கு செலுத்துவதன் மூலம் பூமியில் புதிய நிலபரப்புகளையும் உருவாக்குகின்றன.இப்படி கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் கொண்டு வந்த பாறை குழம்புகள் தான் ஹவாய் தீவை உருவாக்கியுள்ளன. அதே போல வளிமண்டலத்தின் அமைப்பையும் எரிமலைகள் தான் மாற்றுகின்றன. காற்றில் பசுமை வாயுக்களை வெளியேற்றுவதன் மூலம் எரிமலைகள் பூமி உறைந்து விடாமல் பாதுகாக்கின்றன.
ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) என்னும் எரிமலை தான் சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய எரிமலை. இது 16 மைல் (25 கி.மீ) உயரமானது. அதாவது எவெரெஸ்டை விட மூன்று மடங்கு உயரமானது!
சரி, எரிமலை என்ற வார்த்தை மனிதர்கள் வாழும் பூமிக்கு மட்டும் சொந்தமா என்றால் கிடையாது. சூரியக் குடும்பத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் எரிமலைகள் பல கோள்களிலும், துணைக்கோள்களிலும் இருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. சில கிரகங்களில் எரிமலைகள் பல மில்லியன் வருடங்களாக வெடிக்கவே இல்லை என்றாலும் பல எரிமலைகள் இன்னும் பூமியில் இருப்பது போலவே வெடிக்கும் நிலையில் உள்ளன.
Credit: NASA
புதன்
புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளாகும். பார்ப்பதற்கு சாம்பல் நிறப் பாறை போல இருக்கும் இதில் எண்ணிலடங்காத எரிமலைகள் இருக்கின்றன. எரிமலைகளால் அங்கு இப்போது எதுவும் நடக்கவில்லை என்றாலும் ஆனால் கடந்த காலத்தில் எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்ததுக்கான தடயங்கள் இருக்கின்றன. அதன் பரப்பில் உள்ள பிளவுகள் உருகிய எரிமலைக்குழம்பு புதன் கோளின் பரப்பில் பரவி அதன் பிறகு குளிர்ந்து இறுகியுள்ளன என்பதை தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது புதனில் உள்ள எந்த எரிமலையும் இயங்கும் நிலையில் இல்லை. அதன் உட்புறத்தில் எரிமலை வெடிப்பிற்குத் தேவையான அளவு ஆற்றல் இல்லை.
வெள்ளி
வெள்ளி கோள் கொஞ்சம் பயங்கரமான கோள். அது முழுவதுமாக அடர்த்தியான மேகங்களால் சூழப்பட்டுள்ளது. அந்த மேகங்களில் பூமியில் உள்ளது போல் தண்ணீர் இருக்காது. தண்ணீருக்குப் பதில் கடுமையான சல்பியூரிக் அமிலங்கள் தான் இருக்கும். இதனால் அதன் பரப்பில் என்ன உள்ளது என்று நேரடியாகக் கண்டறிவதே சவாலாக உள்ளது. அங்கு நிலவும் உச்சபட்ச வெப்பமும் அதன் அதிக வளிமண்டல அழுத்தமும் அங்கு தரை இறங்கிய விண்வெளி ஓடங்களை அழித்துவிட்டன. ஆனால் வெள்ளி கோளில் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் மட்டும் இருக்கின்றன.
அங்கு இருக்கும் எரிமலைகளில் “மாட் மோன்ஸ்” (Maat Mons) தான் பெரியது. அது தரை பரப்பிலிருந்து 5 மைல் (8 கி.மீ ) தூரம் உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட எவரெஸ்ட் அளவு உயரமானது. இப்போது அது இயங்கும் நிலையில் உள்ளதா என்பது மட்டும் விடை தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதே போல் இடுன் மோன்ஸ்( Idunn Mons) என்ற எரிமலை மற்ற பாறைகளை விட உஷ்ணமாக இருப்பதால் அதனுள் எரிமலைக்குழம்பு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஐரோப்பிய விண்கலம் Venus Eexpress வெள்ளியின் சுற்று பாதையில் 9 ஆண்டுகள் தங்கி இருந்தது. அது வெள்ளி கோளில் சில இடங்களில் வெப்பநிலை திடீரென அதிகமாவதும் குறைவதுமாக இருப்பதைக் கண்டறிந்து தகவல்களை அனுப்பியது. இது ஒருவேளை எரிமலைக்குழம்பின் இயக்கமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
நிலா
புதன் கோளைப் போலவே நமது பூமியின் துணைக்கோளான நிலவிலும் ஒரு காலத்தில் எரிமலைகள் இருந்திருக்கின்றன. ஆனால் கொஞ்ச காலம் தான் அவை இயங்கியிருக்கின்றன. அதற்கான முக்கிய அடையாளம் அங்கிருக்கும் மரியா (maria) என அழைக்கப்படும் பரந்த இருண்ட சமவெளிகள் தான். மரியா என்றால் லத்தீன் மொழியில் கடல்கள் என்று அர்த்தம். நிலவில் கருப்பாக தெரியும் பல பகுதிகள் நிலவில் பாய்ந்து ஓடிய எரிமலைக் குழம்பின் மிச்சம் தான்.
Credit: Modulo universe
நிலவில் Lunar domes என அழைக்கப்படும் பல கிலோமீட்டருக்கு இருக்கும் சிறு குன்று போன்ற பகுதிகளும் உள்ளன.சில இடங்களில் கொத்தாகவும் இருக்கின்றன. இவை கூட உருகிய எரிமலைக்குழம்பு வெடித்து, மெதுவாகக் குளிரும் போது உருவாகியவை என கருதப்படுகிறது.
ஒரு கோளின் ஈர்ப்பு விசையால் அக்கோளைச் சுற்றி வரும் கோள் அல்லது பொருள் தான் துணைக்கோள் எனப்படுகிறது.
செவ்வாய்
செவ்வாயிலும் எரிமலைகள் உள்ளன. செவ்வாயில் இருக்கும் ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) என்னும் எரிமலை தான் சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய எரிமலை.
Credit: Science daily
இது 16 மைல் (25 கி.மீ ) உயரமானது. அதாவது எவெரெஸ்டை விட மூன்று மடங்கு உயரமானது. இதன் விட்டம் 324 மைல் (624 கி.மீ). ஆனால் இது பல மில்லியன் ஆண்டுகளாக வெடிக்க வில்லை. இனியும் வெடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பனி எரிமலைகள் எளிதில் ஆவியாகிற நீர்,அம்மோனியா,மீத்தேன் போன்றவற்றை மட்டுமே உமிழ்கின்றன!
ஐஓ
சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளான வியாழனின் நான்கு துணைக்கோள்களில் ஒன்று தான் ஐஓ (Io). இங்கு தான் மொத்த சூரிய குடும்பத்திலேயே அதிக செயல்மிகுந்த (Active) எரிமலைகள் உள்ளன. இவை வெளியிடும் சல்பரஸ் ரசாயனங்கள் விண்வெளி வரை செல்கின்றன. இந்த எரிமலைகளுக்கு சக்தி தருவது வியாழன் கோள் தான். ஐஓ துணைக்கோள் வியாழனுக்கு மிக அருகில் சுற்றுவதால் அந்த விசையால் இதன் உட்புறம் தொடர்ந்து இழுக்கப்பட்டும் தள்ளப்பட்டு கொண்டும் இருக்கும். இதனால் ஐஓ-வின் உட்புறம் அதிக வெப்பமாக இருக்கிறது. இந்த வெப்பம் வெளிவந்தே ஆகவேண்டும் என்பதால் அது எரிமலைகள் மூலமாக வெளிவருகிறது.
டைட்டன்
டைட்டன் (Titan) என்பது சனி கிரகத்தின் பெரிய துணைக்கோளாகும். இந்த துணைக்கோளில் தான் மிக மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ளது. அதாவது அங்கு நம்மால் சுவாசிக்க கூட முடியாது. அதே போல பூமியை தவிர சூரிய குடும்பத்தில் ஏரிகளை கொண்ட துணைக்கோளும் இது தான். ஆனால் ஏரியில் நீருக்குப் பதிலாக ஹைட்ரோகார்பன்களால் ஆன திரவங்கள் மட்டுமே இருக்கும். இங்கு ஒரு வகையான கிரையோவோல்கனோ (cryovolcanoes) எனப்படும் எரிமலைகள் உள்ளன. அதாவது பனி எரிமலை. ஆம். இவை எந்த நெருப்பு குழம்பையும் உமிழ்வதில்லை. எளிதில் ஆவியாகிற நீர், அம்மோனியா, மீத்தேன் போன்றவற்றை மட்டுமே உமிழ்கின்றன. இவை டைட்டனில் இருப்பதாக சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
Credit: Extreme tech
என்சிலாடஸ்
என்சிலாடஸ் (Enceladus) சனிக் கோளின் மற்றொரு துணைக்கோள். செயல் மிகுந்த கிரையோவோல்கனோ டைட்டனில் நிஜமாகவே உண்டா என்ற விவாதங்கள் இருக்கின்றன. ஆனால் கிரையோவோல்கனோ நிச்சியமாக என்சிலாடஸில்உள்ளன. சுமார் 100 வெந்நீர் ஊற்றுகள் அவ்வப்போது வெடித்து நீரையும் ராசாயனங்களையும் என்சிலாடஸின் உறைந்த பரப்பு வரைக்கும், ஏன் விண்வெளி வரைக்கும் கூட பரப்புகின்றன.இதனை கேசினி விண்கலம் 2005 ல் கண்டறிந்தது. இந்த நீர் ஒருவேளை என்சிலாடஸில் உறைந்த பரப்பிற்கு அடியில் உள்ள பெருங்கடல்களில் இருந்து வரலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ட்ரைடான்
நெப்டியூனின் மிகப்பெரிய துணைக்கோளான ட்ரைடான் (Triton) சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவைப் போல 30 மடங்கு தூரத்தில் உள்ளது. இவ்வளவு தொலைவில் இருந்தாலும் கூட இதனை ஆராய்ச்சியாளர்கள் விட்டுவைக்கவில்லை.1989 ஆம் ஆண்டு வாயேஜர் 2 விண்கலம் இங்கும் சென்றது. அது அனுப்பிய புகைப்படங்களில் இருந்து அங்கும் நமது நிலவைப் போலவே பள்ளமான இடங்கள் இருந்தது தெரியவந்தது. அதன் மூலம் அங்கும் எரிமலைகள் உள்ளது நிரூபணமானது. அதே போல இங்கு உள்ள எரிமலைகள் வெளியிடும் பொருட்கள் விண்வெளியில் 5 மைல் (8 கி.மீ) வரை கூட செல்லுமாம். என்சிலாடஸ் போலவே இங்கு இருக்கும் எரிமலைகளும் லாவாவிற்குப் பதிலாக பனியை தான் உமிழ்கின்றன. இங்கு காணப்படும் பெரும்பான்மையான மலைகளும் முகடுகளும் பாறைக்கு பதிலாக பனியால் ஆனவையாகத்தான் இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.
மொத்தத்தில் பூமியை போன்ற சூழல் பிற கோள்களில் இல்லை என்றாலும் எரிமலைகள் மட்டும் எல்லா கோள்களுக்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கின்றன.