“அல் அமால்” என்று அரபு மொழியில் பெயரிடப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம்தான் நம்பிக்கை (Hope) விண்கலம். இது 1.3 டன் எடை கொண்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதி ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து H-2A ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
‘நம்பிக்கை’ விண்கலமானது 201 நாட்கள் 49 கோடியே 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணம் செய்து கடந்த பிப்ரவரி 9-ம் தேதி செவ்வாய் கிரகத்தைச் சென்று அடைந்தது.
இன்று, நம்பிக்கை விண்கலம் அனுப்பிய முதல் படத்தை எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன் குழு (Emirates Mars Mission team), அறிவித்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 25,000 கி.மீ. உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் செவ்வாயின் எரிமலைகள் இடம்பெற்றுள்ளன. செவ்வாயில் இருக்கும் ஒலிம்பஸ் மோன்ஸ் எரிமலை சூரிய ஒளியில் வெளிவரும்போது இப்படத்தை எடுத்து இந்த விண்கலம் அனுப்பியுள்ளது. இந்த படத்தில் வரிசையில் உள்ள மூன்று எரிமலைகள் அஸ்கிரேஸ் மோன்ஸ், பாவோனிஸ் மோன்ஸ் மற்றும் அர்சியா மோன்ஸ் (Ascraeus Mons, Pavonis Mons, and Arsia Mons).

செவ்வாயிலும் எரிமலைகள் உள்ளன. செவ்வாயில் இருக்கும் ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) என்னும் எரிமலை தான் சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய எரிமலை. இந்த எரிமலை 16 மைல் (25 கி.மீ) உயரமானது. இது எவெரெஸ்டை விட மூன்று மடங்கு உயரமானது. இதன் விட்டம் 324 மைல் (624 கி.மீ.). ஆனால் இது பல மில்லியன் ஆண்டுகளாக வெடிக்க வில்லை. இனியும் வெடிக்க வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
Also Read: பூமியைத் தவிர எரிமலைகள் எங்கெல்லாம் இருக்கின்றன தெரியுமா?