நிலவின் பரப்பு நாம் இரவில் பார்ப்பதைப் போல இருக்காது. முழுவதும் மேடு, பள்ளங்கள், மலைகள் தான் அங்கே அதிகம். சமவெளி பரப்புகள் நிலவில் மிகவும் குறைவு. இந்த பள்ளங்கள் எப்படி உருவாகியுள்ளன? என்று கண்டுபிடிக்கப்போன நாசா மற்றொரு அதிர்ச்சியான விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. நிலவு முழுவதும் விரிசல்கள் காணப்படுகிறதாம். லேசான விரிசல்கள் இல்லை இவை. சுமார் 12 கிலோமீட்டர் ஆழம் வரை இந்த விரிசல்கள் காணப்படுவதாக நாசா அறிவித்திருக்கிறது.

தரவுகள் சேகரிப்பு
பார்க்கவே குண்டும் குழியுமாய் இருக்கும் நிலவின் ஈர்ப்புவிசை, பொருட்களின் அடர்த்தி ஆகியவற்றை தெரிந்து கொள்ள நாசா ஆசைப்பட்டதன் விளைவுதான் GRAIL (Gravity Recovery and Interior Laboratory) என்னும் திட்டம். அதாவது இரண்டு ஆளில்லா விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்குள்ள பாறைகள், மண், தூசுக்கள் போன்ற பொருட்களை சேகரித்து ஆய்வு செய்வது. அதன் அடிப்படையில் அப்பொருட்களின் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே தன் பரப்பில் வந்துவிழும் பொருட்களினால் அதிக பாதிப்பை அடைகிறது நிலவு.
இன்னும் எளிதாகச் சொன்னால் ஒரு கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். சாதாரண மண் தரையில் அதனை எறியுங்கள். கல் மோதிய இடத்தில் குழி ஏற்பட்டிருக்கும். அதனை அளந்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அதே கல்லை மணலின் மீது எறிந்து அது ஏற்படுத்தும் குழியை கணக்கெடுங்கள். இந்த வித்தியாசம் தான் பூமியின் பரப்பிற்கும் நிலவின் பரப்பிற்கும் உள்ள வித்தியாசம்.
கல்லெறி சோதனை
ஏற்கனவே எடுக்கப்பட்ட தரவுகளை வைத்து கணினி மூலமாக நிலவின் தரைப்பரப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அப்படியென்றால் நிலவின் வளிமண்டல, ஈர்ப்பு விசை, பொருட்களின் அடர்த்தி ஆகியவற்றை கணினிக்கு உள்ளீடாக கொடுத்து செயற்கையாக நிலவின் தரைப்பரப்பை உருவாக்குவது. பின்னர் 3 அடி உயரமுள்ள பொருளினால் நிலவினை மோதச்செய்வர். இதனால் நிலவின் பரப்பில் ஏற்படும் மாற்றத்தை கணக்கெடுப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
இப்படி பொருள் நிலவை நோக்கி எறியப்படும் தூரத்தைப்பொறுத்து விரிசல்கள் ஏற்படுவதில் மாற்றம் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக 1 கிலோமீட்டர் விட்டத்திற்கு பள்ளம் உருவானால் 20 கிலோமீட்டருக்கு விரிசல்கள் ஏற்படும் எனவும் இதுவே 10 கிலோமீட்டருக்கு பள்ளம் உருவானால் உண்டாகும் விரிசல் 300 கிலோமீட்டர் வரையும் நீடிக்கும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏன் இப்படி?
விண்கற்கள் மற்றொரு கோளின் மீதோ, துணைக்கோளின் மீதோ அல்லது விண்கல்லின் மீதோ கூட மோதுவது இயற்கையே. பூமியின் பரப்பில் உள்நுழையும் விண்கல் வளிமண்டலத்திற்கு உள்ளே நுழைந்தவுடன் உராய்வின் காரணமாக தீப்பிடித்து எரிந்து விடும். மேலும் பூமியில் பெரும்பான்மையான பகுதிகள் கடல் என்பதால் 9௦% கற்கள் கடலில் விழுந்துவிடும். இதையும் மீறி தரைப்பகுதிக்கு வருபவை தான் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் வின்கல்லினால் பூமியின் மீது ஏற்படும் சேதத்தை விட நிலவில் ஏற்படும் சேதம்தான் மிக அதிகம். அதற்கு ஒரே காரணம் தான். இங்குள்ள புவிஈர்ப்புவிசை.
ஆகவே ஈர்ப்புவிசை அதிகமாக இருந்தால் விண்கல்லினால் ஏற்படும் மோதல்கள் குறைவான பள்ளங்களையும் விரிசல்களையுமே ஏற்படுத்தும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே நிலவில் இப்படியான நில அமைப்பும் இருக்கின்றது. ஆனால் நிலவில் தொடர்ந்து இப்படியான விரிசல்கள் அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நாசா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.