அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் வானியல் ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்வெளித் துறையில் புதிய பரிணாமத்தினைத் திறந்து வைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள வென்டென்பர்க் ஏவுதளத்தில் (Vandenberg Air Force Base) இருந்து 64 செயற்கைக்கோள்களை ஃபால்கான் 9 என்னும் ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் விண்ணில் ஏவி சாதனை படைத்திருக்கிறது SpaceX நிறுவனம். கடைசி நேரத்தில் கடுமை காட்டிய வானிலை மாற்றங்களை எல்லாம் புறந்தள்ளி வெற்றிக்கொடி கட்டியிருக்கிறது ஃபால்கான் 9 ராக்கெட்.

64 செயற்கைக் கோள்கள்
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக 64 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டிருக்கின்றன. SSO-A எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மட்டும் 19 முறை ராக்கெட் ஏவுதல் நடைபெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு இதே திட்டத்தின் மூலம் 18 முறை ஏவுதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
17 நாடுகளில் உள்ள 37 தனியார் நிறுவனங்களின் சிறு செயற்கைக்கோள்கள் இந்த நிறுவனத்தின் மூலமே விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் தொலைத்தொடர்பு சேவைகளுக்காக அனுப்பப்படுபவையாகும்.
ராக்கெட்டின் பகுதிகள்
ஃபால்கன் 9 ராக்கெட்டினைப் பொறுத்தவரை Fairing எனப்படும் ராக்கெட்டின் முன் பகுதி, இரண்டாம் நிலைப் பகுதி மற்றும் முதன்மை நிலைப் பகுதியுடன் கூடிய வெப்ப உமிழ் கலன் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். இதில் முன்பகுதியில் தான் செயற்கைக்கோள்கள் வைக்கப்படும். முதன்மைப் பகுதியில் மொத்தம் இருக்கும் 9 எஞ்சின்களின் இயக்கத்தினால் ராக்கெட்டானது விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறது.

லித்தியம் மற்றும் அலுமனிய உலோகக் கலவையால் உருவாக்கப்பட்ட என்ஜினில் திரவ ஆக்சிஜனும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெயும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 229.6 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்ட இந்த ராக்கெட்டானது 300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டதாகும்.
மறு சுழற்சி
பிரம்மாண்டமான இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதன் வெப்ப உமிழ்கலன் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாகும். இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இதே கலனானது இதற்குமுன்னர் இரண்டு முறை ராக்கெட் ஏவுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. மேலும் ராக்கெட்டின் முன் முனைப்பகுதியையும் மறுசுழற்சி செய்யும் திட்டம் அந்த நிறுவனத்திடம் இருந்தது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இம்மாதிரியான திட்டங்கள் மறுசுழற்சியைப் பயன்படுத்துவதன்மூலம் செலவினங்களைக் குறைக்கமுடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்தமுறை பூமிக்குத் திரும்பும் முனைப் பகுதி பசிபிக் கடலில் விழும் என்று கணிக்கப்பட்டு அதனை பத்திரமாக மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் முனையானது நேரிடையாகக் கடலில் விழுந்துவிட்டது. சுமார் 60 லட்சம் டாலர் மதிப்புள்ள அப்பகுதியை கடலில் இருந்து எடுத்து சரிசெய்த பின்னர் மறுபடியும் ஏவுதலுக்குப் பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இம்மாதிரியான திட்டங்கள் மறுசுழற்சியைப் பயன்படுத்துவதன்மூலம் செலவினங்களைக் குறைக்கமுடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஸ்பேஸ் எக்ஸின் இந்தத் திட்டம் இம்முறை தோல்வியைச் சந்தித்தாலும் எதிர்காலத்தில் ராக்கெட் இயங்குபொருள் மறுசுழற்சியில் புது சகாப்தம் ஒன்றினைப் படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.