நமது பூமியை பொறுத்தவரை ஒரு நாள் என்பது 23 மணி, 56 நிமிடம், 4.0196 நிமிடங்கள் ஆகும். அதாவது பூமி அதன் அச்சில் தன்னைத் தானே சுற்ற ஆகும் கால அளவு. இதே போல் சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு நேரம் என்பது குறித்து நிலவி வந்த குழப்பம் தற்போது நீங்கியுள்ளது. சனி கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கேசினி விண்கலம் அனுப்பியிருந்த தகவல்களை கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுளின்படி அந்த கோளில் ஒரு நாள் என்பது 10 மணி 33 நிமிடங்கள் மற்றும் 38 நொடிகள் (10:33:38) என விஞ்ஞானிகள் தற்போது கணக்கிட்டுள்ளனர். இந்த தரவுகள் கேசினி விண்கலம் 2017 ஆண்டு கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு அனுப்பிய தகவல்கள்.

Credit: AOL
சிக்கல்கள்
ஒரு கோளின் ஒரு நாள் எவ்வளவு நேரம் என்று கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் கிடையாது. சனி கிரகம் அதன் அச்சில் முழு சுழற்சியை முடிக்க ஆகும் நேரத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தனர். ஆனாலும் துல்லியமாக கூற முடியவில்லை. ஏனெனில் சனி கிரகம் ஒரு வாயுக் கோள். இதில் திட மேற்பரப்பு இல்லாததால் விஞ்ஞானிகளால் அதன் மேகங்களுக்கு இடையே ஒரு நிலையான அடையாளத்தை கண்டறிந்து அதன் சுழற்சியை ஆராய முடியவில்லை.
சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது 10 மணி 33 நிமிடங்கள் மற்றும் 38 நொடிகள்
பொதுவாக ஒரு கோளின் சுழற்சி விகிதங்களை அறிய அந்த கோளின் காந்த அச்சை ஆய்வு செய்வார்கள். பூமி மற்றும் ஜூபிடர் கிரகங்களின் காந்த அச்சு, அதன் சுழற்சி அச்சுக்கேற்ப சீராக இருப்பதில்லை. இதனால் கோள்கள் சுழலும் போது காந்த அச்சின் சுழற்சியின் மூலம் ரேடியோ அலைகளை அளவிட்டு அந்த கோளின் சுழற்சி விகிதங்களை கணக்கிடுவார்கள். விஞ்ஞானிகள் சனி கிரகத்தின் காந்த புல சாய்வை வைத்து ஒரு நாளின் நேரத்தை கணக்கிட முயற்சித்தனர். ஆனால் சனி கிரகம் வித்தியாசமானது. அதன் காந்த ஆச்சு அதன் சுழற்சி அச்சோடு சரியாக பொருந்தி இருக்கும். இதனால் ஒரு நாளின் நேரம் 10 மணி 36 நிமிடம் முதல் 10 மணி 48 என தோராயமாக கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த குழப்பத்தை தீர்க்க, சனி கிரகம் தகவல்களை தராத போதும், அதன் வளையங்கள் தருகின்றன என்பதே உண்மை.

Credit: Khadley
வளையங்கள்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் மன்கோவிச் (Christopher Mankovich) என்ற மாணவர் சனி கோளின் வளையங்களில் இருந்த அலை வடிவங்களை ஆராய்ச்சி செய்தார். சனி கோளின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளுக்கு வளையங்கள் ரெஸ்பாண்ட் செய்வது தெரிய வந்தது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் அதிர்விற்கு ஏற்ப நிலநடுக்கமானி (seismometer)செயல்படுவதைப் போலவே வளையங்களும் செயல்படுகின்றன. சனி கிரகத்தின் உள் பகுதி அதிர்ந்து நிலநடுக்கம் ஏற்படும் போது அது அந்த கோளின் ஈர்ப்பு புலத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதன் வளையத்தில் பனித்துகள், தூசி, கற்கள் போன்ற பொருட்கள் உள்ளன. இந்த எல்லா துகள்களும் உதவுவதில்லை. ஆனால் அதிர்வு ஏற்படும் போது ஈர்ப்பு புலத்தில் ஏற்படும் அலைவுகள் வளையங்களுக்கும் பரப்படுவதால் அதிர்வுகளை இவற்றால் உணர முடியும்.
சனி கோளில் ஒரு வருடம் (சூரியனை சுற்ற ஆகும் காலம்) என்பது 29 புவி ஆண்டுகள்
கணக்கெடுப்பு
இந்த வளையங்களில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஈர்ப்பு புலத்தின் அலைவுகள் வளையத்தில் உள்ள துகள்களுக்கு பரவும். இதன் மூலம் படிப்படியாக உருவாகும் ஆற்றல் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இதன் மூலம் சனியின் உள் புற இயக்கத்தையும் அதனால் ஏற்படும் சுழற்சியையும் நம்மால் கண்காணிக்க முடியும். வளையங்களில் ஏற்படும் அலைவுகள் தான் சனியின் ஒரு நாளின் நேரத்தை கணக்கிட பெரும் உதவி புரிகின்றன. உண்மையில் இதுவும் மிக துல்லிய கணக்கீடு இல்லை. ஆனால் நேர அளவு என்பது ஒரு நிமிடம் 52 நொடிகள் அதிகம், ஒரு நிமிடம் 19 நொடிகள் குறைவு என்பதற்கு இடையில் தான் இருக்கும். இது முன்பு இருந்த 12 நிமிட சந்தேகத்தை விட குறைவு என்பதே சிறந்த விஷயம்.

Credit : Wikipedia
முந்தய கணக்கீடுகளை தற்போதய ஒரு நாளின் நேரம் குறைவு. 10:39:22 என்ற கணக்கீடு 1981 ஆம் ஆண்டு வொயாஜெர் விண்கலம் மூலம் பெறப்பட்ட காந்த புல தரவுகள் மூலம் கணக்கிடப்பட்டது. தற்போது சனி கோளை மட்டும் அல்லாமல் அதன் வளையங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இந்த யோசனை 1982 ஆம் ஆண்டே சொல்லப்பட்டிருந்தாலும் அதற்கான தரவுகள் அப்போது கிடைக்கவில்லை.
ஒரு நாள் என்பது பூமியின் நாளில் பாதி நேரம் தான் என்றாலும் இதே முறையில் சனி கோளில் ஒரு வருடம் (சூரியனை சுற்ற ஆகும் காலம்) என்பது 29 புவி ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.