சூரியக் குடும்பத்தின் ஆறாவது கோளான சனி தனது பிரத்யேக வளையங்களை இழக்க இருக்கிறது. இங்கே பொழியும் அபரிமிதமான மழைப்பொழிவு தான் வளைய அழிவிற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது. சுமார் 400 கோடி வருடங்களுக்கு முன்பு சனி கிரகம் தோன்றியது. அதன்பின்னால் வெகுகாலம் கழித்தே இந்த வளையம் தோன்றியது. பனித்துகள், தூசி, கற்கள் போன்ற பொருட்கள் வளையத்தில் உள்ளன. சனியின் வலிமையான ஈர்ப்பு விசையினால் இந்த வளையமானது கோளின் வெளிப்பரப்பை நோக்கி ஈர்க்கப்படுகிறது. அதன்பின்னர் மழைப்பொழிவு தொடங்குகிறது. இந்த செய்முறை தொடர்ந்து நடைபெறுவதால் வளையத்தில் உள்ள பொருட்கள் மழைப்போழிவின் போது சனியின் பரப்பில் வந்து சேர்கின்றன. இதனால் வளையம் சுருங்க ஆரம்பித்திருக்கிறது.

தொடர் மழை
சூரியக் குடும்ப உருவாக்கத்தின் போதே இந்த வளையங்கள் இருந்ததாக பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். டன் கணக்கில் குவிந்துள்ள ஐஸ் கட்டிகள் மற்றும் தூசுப்பொருட்கள் தவிர மீத்தேன், கார்பன் மோனோ ஆக்சைடு, அம்மோனியா, நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களும் அதிகளவில் உள்ளன. சனியின் ஈர்ப்பு விசையினால் இவை ஒன்றோடு ஒன்று மோதி அமில மழையாக சனியின் பரப்பில் கொட்டுகின்றன. இப்படி வளையத்தில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் மழை மூலமாக சனிகிரகத்தினுள் விழுந்துவிடுவதால் இதன் பரப்பு எதிர்பார்த்ததை விட அதிகமான வேகத்தில் குறைந்து வருகிறது.
ஒலிம்பிக் நீச்சல்குளத்தினை நிரப்பும் அளவிற்கான மழை வெறும் அரை மணிநேரத்தில் இங்கே பெய்கிறது என்றால் இத்தனை ஆண்டுகளாக எவ்வளவு மழை இங்கே பொழிந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
கேசினி விண்கலம்
சனி கிரகத்தில் உள்ள வளிமண்டலம் குறித்தும், காற்றில் கரைந்திருக்கும் அமிலங்கள் பற்றியும் ஆராய நாசா அனுப்பிய கேசினி விண்கலம் (Cassini spacecraft) தான் இதனைக் கண்டுபிடித்தது. கடந்த 2017 – ஆம் ஆண்டு சனியின் வளிமண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும்போது தன் கட்டுப்பாடுகளை இழந்து கிரகத்தின் பரப்பில் போய் விழுந்துவிட்டது.
கேசினி அனுப்பிய கடைசித் தகவல்கள் சனி கிரகத்தில் பெய்துவரும் மழையினைப்பற்றிதான். காற்றில் உள்ள அமிலங்கள் அயனியாக்கப்பட்டு உருவாகும் நிறப்பிரிகைகளை ஆய்வு செய்துகொண்டிருந்த கேசினி விண்கலம் சனி கிரகத்தின் மேற்பகுதி தொடர்ந்து விரிவடைவதயும் விளக்கியது. ஈர்ப்பு விசையினாலும், மழையினாலும் வினாடிக்கு 10,000 கிலோகிராம் அளவுள்ள ஐஸ் கட்டிகள் மற்றும் தூசுக்கள் சனியின் வளையத்திலிருந்து கிரகத்திற்கு வருகின்றன.

இன்னும் 100 மில்லியன் வருடங்களில் சனி தன்னுடைய மொத்த வளையத்தையும் இழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிரகங்களில் இப்படி வளையங்கள் தோன்றுவதும் பின்னர் அழிவதும் வழக்கமான ஒன்றுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.