- செர்னோபில் அணு உலையில் செழித்து வளரும் கிளாடோஸ்போரியம் ஸ்பேரோஸ்பெர்மம் (Cladosporium Sphaerospermum) என்ற பூஞ்சை வகை ஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.
- இந்த பூஞ்சைகளால், கதிர்வீச்சானது சராசரியை விட 2.4 சதவீதம் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு
என்ன தான் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் விண்வெளிக்குச் செல்வது என்பது கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைப்பது போன்றது தான். அதனால் தான் அங்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். விண்வெளியில் மனிதர்களை எப்படியாவது கொல்ல காத்திருக்கும் பல சிக்கல்களில் வீரர்களின் ஆரோக்கியத்திற்கு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கும் முக்கியமான விஷயம் தான் ஆபத்தான கதிர்வீச்சுக்கள்!!

சர்வதேச விண்வெளி நிலையம்
நாம் பூமியில் இருக்கும் போது பூமியின் காந்தப்புலமும் வளிமண்டலமும் மோசமான கதிர்வீச்சிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. அதுவே நாம் விண்வெளிக்குச் செல்லும் போது, நமது பூமியில் நமக்குக் கிடைக்கும் பாதுகாப்பு போர்வை இருக்காது. விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளைச் செய்வதற்காகவே இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) தங்கும் விண்வெளி வீரர்கள் ஒரு வருடத்தில், பூமியில் இருப்பவர்கள் பெறுவதை விட 20 மடங்குக்கும் அதிகமான கதிர்வீச்சுக்கு ஆளாகின்றனர்!
எக்ஸ்-ரே எடுப்பது கூட நமது உடல் நலத்திற்கு ஆபத்து தான்!
கதிர்வீச்சுகளைத் தடுக்க விண்வெளி வீரர்கள் பிளாஸ்டிக், அலுமினியம் அல்லது எஃகால் செய்யப்பட்ட பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்தப் பொருட்களைப் பூமியிலிருந்து விண்வெளிக்குக் கொண்டு செல்வது கடினம் மற்றும் விலை உயர்ந்தது கூடவே விரைவில் பாதிப்படையக் கூடியவை. மனிதர்கள் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்றால் முதலில் பாதுகாப்பு அவசியம்.
Also Read: இவ்வளவு ஸ்பெஷலான விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது?
2018 ஆம் ஆண்டு North Carolina School of Science and Mathematics ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் Graham K. Shunk and Xavier R. Gomez ஆகியோரால் வழி நடத்தப்பட்ட குழு இந்த பிரச்சினைக்கு நம்பகமான ஒரு தீர்வை முன் வைத்துள்ளனர்.
கிளாடோஸ்போரியம் ஸ்பேரோஸ்பெர்மம் என்ற பூஞ்சை, கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்கின்றன!
செர்னோபில் அணு கதிர்வீச்சு
1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட மோசமான விபத்தை பற்றி நமக்கு தெரியும். அந்த அணு உலையின் சில பகுதிகளில் இருக்கும் கதிர்வீச்சின் அளவு மனிதனை சுமார் 60 வினாடிகளில் கூட கொல்லும்!
Also Read:விண்வெளிக்குச் செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

இயற்கையின் அதிசயம்
செர்னோபில் அணு உலையில் பல வகையான பூஞ்சைகள் வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டன. விஞ்ஞானிகள் இந்த பூஞ்சைகள் கதிர்வீச்சுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசமாகச் செயல்பட உதவுமா என்று ஆராய்ச்சி செய்தனர்.
ஆராய்ச்சியின் விளைவாக கிளாடோஸ்போரியம் ஸ்பேரோஸ்பெர்மம் (Cladosporium Sphaerospermum) என்ற பூஞ்சை வகை, எப்படி தாவரங்கள் சூரியஒளியைக் கிரகித்துக் கொள்ளுமோ அது போலவே ஆபத்தான கதிர்வீச்சுகளை எடுத்துக் கொள்கின்றன என்பது தெரிய வந்தது. இந்த பூஞ்சை, அதன் நிறமிகள் மூலம் அயனியாக்கும் காமா கதிர்வீச்சை உறிஞ்சி, வேதியியல் சக்தியாக மாற்றி அதன் சொந்த உயிரியலுக்குப் பயன்படுத்துகிறது. இந்த Radiosynthesis செயல்முறை விண்வெளி பயணிகளுக்குக் கதிர்வீச்சு எதிர்ப்பு கவசமாகச் செயல்பட்டு உதவியாக இருக்கும்.

ஆராய்ச்சி
இந்த ஆராய்ச்சிக்காகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 30 நாட்களுக்குப் பூஞ்சைகளை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இரண்டு பக்கங்களுடன் கூடிய ஒரு பெட்ரி டிஷ் (நுண்ணுயிரிகளை வளர்க்கப் பயன்படும் அமைப்பு) அமைத்தனர். ஒரு பக்கத்தில், எதுவுமே இல்லாமலும், மறுபுறம், கிளாடோஸ்போரியம் ஸ்பேரோஸ்பெர்மம் பூஞ்சையையும் வைத்தனர். பெட்ரி டிஷ் அடியில் இரு பக்கங்களுக்கும் இரு கதிர்வீச்சு டிடெக்டர் (Radiation detector) வைக்கப்பட்டு அவை ராஸ்பெர்ரி பை(Raspberry Pi) சாதனங்களுடன் இணைக்கப்பட்டன. தொடர்ந்து 30 நாட்களுக்கு, ஒவ்வொரு 110 வினாடிக்கும் ஒரு முறை வெளிப்படும் கதிர்வீச்சை அளவிட்டனர்.
Also Read:விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் இந்திய விண்கலம் ககன்யான்

ஆய்வின் முடிவில், பூஞ்சைகள் மைக்ரோ கிராவிட்டியிலும் செழித்து வளர்ந்ததும், சராசரியை விட 2.4 சதவீதம் வெளிப்படும் கதிர்வீச்சு குறைந்ததும் தெரிய வந்தது. அதாவது பூஞ்சைகள் வளர வளர, கதிர்வீச்சின் அளவு குறைந்தது. 21 சென்டி மீட்டர் அடர்த்தி பூஞ்சை இருந்தால் அது செவ்வாய் கிரகத்தில் மனிதனுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கும் என்றும், ஒரு பக்கம் மட்டும் என்றில்லாமல் எல்லா பக்கமும் சூழ்ந்து பூஞ்சை இருக்கும் போது கதிர்வீச்சு 5 சதவீதமாகக் குறையும் என்றும் கண்டறிந்துள்ளார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
முக்கியத்துவம்
இந்த பூஞ்சைகள் மனிதர்களின் விண்வெளி பயணத்தைப் பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இதற்கு அதிக அளவு பூஞ்சை தேவை இல்லை. நுண்ணிய அளவுகளில் இருந்து கூட பூஞ்சை தன்னை தானே பெருக்கிக் கொள்கிறது என்பதால் செய்ய வேண்டியதெல்லாம் அதற்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்பது மட்டுமே. அதுவே வளர்ந்து பெருகி கதிர்வீச்சுக்களை உறிஞ்சி விடும். விண்வெளி வீரர்கள் தற்போது பயன்படுத்தும் துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்ட பாதுகாப்பு கவசங்களுடன் ஒப்பிடும் போது இந்த செயல்முறை மிகவும் எளிதானது.
இந்த செயல்முறை நடைமுறைக்கு வரும் போது மனிதர்கள் விண்வெளியில் வேறு கிரகங்களிலும் தொடர்ந்து தங்கி ஆராய்ச்சி செய்யவும் முடியும்! அதனால் விண்வெளியின் புதிர்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் தீர்க்கவும் படலாம்!