2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் கேப் கானவெரல் ஏர்பேஸிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது பார்க்கர் விண்கலம். கடந்த ஏப்ரல் 4 தேதி இதுவரை எந்தவொரு விண்கலமும் செல்லாத அளவிற்கு சூரியனை நெருங்கியிருந்தது. ஆம், சூரியனை ஆராயச்சென்ற இது எண்ணிக்கையில் முன்றாவது செயற்க்கைகோளாகும். இதற்கு முன்னர் ஜெர்மனியின் துணையோடு Helios 1 மற்றும் Helios 2 எனும் இரண்டு செயற்கைக்கோளை ஜெர்மனியில் இருந்தவாறே நாசா சூரியனுக்கு பாய்ச்சியிருந்தது. இதில் அதிகபட்சமாக 26.55 மில்லியன் மைல்களை (மணிக்கு 2,13 200 மைல்கள் என்ற வேகத்தில்) ஹீலியஸ் 2 சூரியனுக்கு அருகில் சென்றிருந்தது.
என்ன செய்யப்போகிறது பார்க்கர் சோலார் ப்ரோப்?
செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய சாதனையை தானே முறியடிக்கும் பார்க்கர் செயற்கை கோளானது, இதுவரை அறிவியலுக்கு புலப்படாது இருந்த சூரியனை சுற்றியுள்ள மர்மங்களை புலப்படச்செய்யப் போகிறது.
- முக்கியமாக சூரியனுடைய கரோணாவின் தன்மையை ஆராயப்போகிறது.
- சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை மற்றும் தன்மைகள்
- பிளாஸ்மா மற்றும் அதிக சக்தி கொண்ட எலக்ட்ரான் மற்றும் அயனிகள்
- சூரியனின் மின்காந்த புயல்கள் , அதன் மூலம் மற்றும் தாக்கங்கள்
- சூரியனின் வெப்பத்தால் பூமியின் மீதான தாக்கங்கள் என சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலையும் சில புதிரான கேள்விகளையும் உருவாக்கப் போகிறது பார்க்கர்.
அதிநவீன வெப்பம் தணிக்கும் சாதனங்களுடன் சில மெமரி கார்டுகளில் ஒரு கோடி பெயர்களையும் சில அறிவியல் ஆய்வுகட்டுரைகளையும் சுமந்து செல்கிறது
செயல்பாடு
மொத்தம் ஏழு விதமான சுற்றுவட்டப் பாதையில் பயணித்து தனக்கும் சூரியனுக்கும் இடையேயான தொலைவை பார்க்கர் மெதுமெதுவாக குறைத்துக் கொள்ளும். பின்னர் சிலநாட்கள் தனது கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பூமியோடான தனது தொடர்பை துண்டித்துக் கொள்ளும். பின்னர் தானாகவே செயல்படத்துவங்கி ஆய்வுகளை ஆரம்பிக்கும். இறுதியாக 2024 ஆம் ஆண்டு சூரியனின் மேற்ப்பரப்பில் இருந்து 4 மில்லியன் மைல்களில் நிலைகொண்டு கரோணாவையும் சூரியனையும் ஆராயத் துவங்கும்.
கரோணா: த ரிங் ஆஃப் ஃபயர்
பாஸ்ட் அண்ட் பியூரியஸில் வின் டீசல் குடிக்கும் பியரல்ல இது. சூரியனின் கடைசி மற்றும் அயனிக்களால் நிறைந்த வெளிப்புற அடுக்காகும். முழு சூரிய கிரகணத்தின் போதோ அல்லது வானியல் தொலை நோக்கிகள் மூலமாகவோ கரோணாவை காண முடியும். கிரகணத்தின் போது சூரியனை நிலவு மறைக்கும் தருவாயில் நிலவைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றுமே இதுதான் கரோணா..
சூரியனின் மேற்பரப்பு (photosphere) வெப்பநிலையானது 6000 டிகிரி செல்சியஸ். ஆனால் கரோணாவின் வெப்பநிலையோ சில மில்லியன் டிகிரி செல்சியஸ். அதெப்படி சூரியனின் கடைசி அடுக்கு சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்க முடியும்?
காரணமெனில் அணுக்கரு இணைவின் போது வீசியடிக்கப்படும் அதிக அழுத்தம் கொண்ட அயனிகள் (charged particles) கரோணாவில் சென்று படிகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அது பல காரணிகளுள் வெறும் ஒரேயொரு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர். இவ்வளவு வெப்பநிலை கொண்ட கரோணா உண்மையில் மிக மெல்லிய தடிமன் கொண்டது. அதிர்ச்சியடையாமல் இருப்பீர்கள் ஒரு உண்மையை இங்கே சொல்கிறோம். அந்த அதீத வெப்ப கரோணாவில் உங்கள் உள்ளங்கைக்கு கூட பாதிப்பு ஏற்படாது. உண்மைதான், நாம் வீடுகளில் உபயோகிக்கும் மைக்ரோவேவ் ஓவனில் எவ்வளவு வெப்பநிலை வைத்திருந்தாலும் அதனுள் மிக சாதாரணமாக கையை நுழைக்கவும் எடுக்கவும் முடியும். ஆனால் அதன் உட்பக்கத்தை தொடாமல் இருக்கும் பட்சத்தில். இதே அறிவுரை தான் பார்க்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது. பார்க்கர், dont touch the oven! ஆக கரோணாவை தொடாமல் கரோணாவை ஆராயப்போகிறது பார்க்கர். அதாவது மெல்லிய கரோணாவின் மிக மெல்லிய பகுதியில் தான் பார்க்கர் செயல்படப் போகிறது. சூரியனில் இருந்து வெளியேறும் மோசமான பிளாஸ்மாக்கள் கரோணாவில் குறைவாக படியும் இடம். இங்கே ஒட்டுமொத்த வெப்பநிலையும் 1500 டிகிரி செல்சியஸுக்குள் அடக்கம்.