ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருக்கும் துளை மெதுவாகச் சரியாகி வருவதாக ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓசோன் படலம்
சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஒசோன் படலம் ஆகும். சுருக்கமாகச் சொன்னால், இது சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது.
1970-ம் ஆண்டுகளில் இருந்து ஓசோன் வாயுப் படலத்தில் துளை விழுந்துள்ளது என்று ஹாலந்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான, பால் குருட்சன் (Paul Crutzen) என்பவர் தான் முதலில் கண்டறிந்தார். குறிப்பாக குளிர்பதனப் பெட்டிகளில் இருந்து வெளிப்படும் ‘குளோரோ புளூரோ கார்பன்‘ (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் தான் ஓசோன் படலம் அதிகமாக பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.
பின்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில இயந்திரங்கள் ஓசோனைப் பாதிக்கும் வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதிகப்படியான கார்பன் வெளியேற்றம், குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் CFC வாயுக்கள் ஆகியவையே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கியக் காரணம் ஆகும்.
2030 – க்குள் சரி ஆகும்
ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருக்கும் துளை, உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. அந்தத் துளை மேலும் அதிகரித்து ஓசோன் சேதாரம் அடைந்தால், புறஊதாக் கதிர்களை நாம் நேரடியாகச் சந்திக்க நேரிடும்.
இந்நிலையில் ஒசோன் படத்தில் உண்டான துளை மெல்ல மெல்லச் சரியாகி வருவதாக ஐ.நா சபை தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஒசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அதன்படி, வரும் 2030 – ஆம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் தனது பழைய நிலைக்கு வந்து விடும் எனவும் இப்போது கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.