சாகச விரும்பிகளால் தான் இன்றைய உலகின் அனைத்து அதிசயங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தேடலின் தீவிரவாதிகளால் மட்டுமே கற்பனைகளாக இருந்தவற்றை மனிதனின் கைகளில் தர முடிந்திருக்கிறது. அந்த வகையில் வரலாறு மற்றுமொரு சாதனையை நிகழ்த்த இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஓரியான் ஸ்பேன் நிறுவனம் விண்வெளியில் தங்கும் விடுதி ஒன்றினை வடிவமைத்திருக்கிறது. ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியை இந்த விடுதி சுற்றிவரும். இதனால் விருந்தினர்கள் ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் நிகழும் சூரிய உதயத்தினை விண்வெளியிலிருந்து கண்டுகளிக்கலாம். 2022 ஆம் ஆண்டுமுதல் இந்தசேவை துவங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

12 நாள் பயணம்
ஆறு விருந்தினர்கள் மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் எட்டு பேர் இவ்விடுதியில் தங்கியிருப்பர். புவியீர்ப்பு விசை இல்லாத இடம் என்பதால் விருந்தினர்கள் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவர். பூமியில் உள்ள குடும்ப மற்றும் நண்பர்களுடன் நேரிடியாக வீடியோ காலில் பேசும் வசதியும் இங்கே இருக்கிறது. மேலும் உள்ளே சில விளையாட்டுகளும் இடம் பெற்றிருக்கின்றன. 12 அடி அகலமும் 35 மீட்டர் நீளமும் கொண்ட இந்த விடுதியில் அதிநவீன தூங்கும் அறைகள், விண்வெளிக்கு ஏற்ற பிரத்யேக உணவுகள் போன்றவை வழங்கப்படும்.
பயிற்சி
விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பாக ஓரியான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கும். மூன்று மாதம் நடைபெறும் இந்த விண்வெளி பயிற்சியின் இறுதியில் Orion Span Astronaut Certification (OSAC) என்னும் தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். முன்னாள் விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு இந்தப் பயிற்சியை வழங்க இருக்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதலில் விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்படுவர். பின்பு அங்கிருந்து ஓரியனின் விடுதிக்கு அந்த நிறுவனமே அழைத்துச் செல்லும். இந்த நீண்ட பயணத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்வெளி சுற்றுலா இதற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. Virgin Galactic நிறுவனம் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் சேவையை சென்ற ஆண்டு துவங்கியது. ஒரு நபருக்கு 2,50,000 டாலர்கள் இதற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த Axiom Space நிறுவனமும் இதே தொழில் இறங்கியுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு தனது முதல் பயணத்தை அந்த நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இனிவரும் காலங்களில் விடுமுறை நாட்களுக்கு விண்வெளியிலும் வாய்ப்பு இருக்கிறது என்பதயே இந்தச் செய்திகள் உணர்த்துகின்றன.