செவ்வாயின் மேற்பரப்பில் ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ வெற்றிகரமாக தரையிறங்கிய செய்தி உறுதி செய்யப்பட்ட பின், கலிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
அமெரிக்காவின் நாசா, பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) என்ற இயந்திரத்தை, ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் ஒரு ஆழமான பள்ளத்தில் தரையிறக்கி உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் உயிரினங்கள் அங்கு வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களை தேடுவதுமான பணியை இது செய்யும்.
கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கோளின் வேறொரு பள்ளத்தில் தரையிறக்கியது நாசா. தற்போது, பெர்சவரன்ஸ் ரோவர் நேற்று (பிப்ரவரி 18) இரவு (20.55 GMT) இந்திய நேரப்படி (பிப் 19) அதிகாலை 2:25 AM அளவில் செவ்வாயில் தரையிறங்கியது. சற்று நேரத்திலேயே செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர்.
பெர்சவரன்ஸ் ரோவர் அனுப்பிய முதல் படம்

இரண்டாவது படம்

கொரோனா காலத்திலும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட பணியாளர்களின் இடையறாத உழைப்பு போற்றத்தக்கது. இந்த திட்டத்தினை தலைமையேற்று வழிநடத்திய Dr. ஸ்வாதி மோகன் அவர்களுக்கும் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
செவ்வாய் கோளில் ஒரு நாள் என்பது, பூமியின் ஒரு நாளுடன் 40 நிமிடங்கள் கூடுதலாகும். நாசாவின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் போது பூமியிலிருந்து செவ்வாய் கோள் 127 மில்லியன் மைல் (205 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும். “இந்த தூரத்தில், பூமியில் செவ்வாய் கோளில் இருந்து சிக்னல் பெறுவதற்கான ஒளி நேரம் 11 நிமிடங்கள், 22 வினாடிகள் ஆகும்” என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.