மற்றொரு கோளில் அடுத்தடுத்து பல சாதனைகளை செய்து வருகிறது NASA. செவ்வாய் கோளுக்கு தனது பயணத்தைப் பூமியிலிருந்து தொடங்கிய பெர்செவரன்ஸ் ரோவர் பல்வேறு குட்டி குட்டி சாதனங்களையும் தன்னுடன் எடுத்து சென்றது. கடந்த சில நாட்களாக ஒவ்வொன்றாக அவற்றை சோதனை செய்து பார்த்து வருகிறது நாசா. சில நாட்களுக்கு முன் இன்ஜெனியூட்டி என்ற குட்டி ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க செய்து புதிய சாதனை செய்தது நாசா. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மகத்தான சாதனையாகும். மேலும் நேற்று, பெர்செவரன்ஸ் ரோவரோடு அனுப்பப்பட்டிருந்த “மாக்ஸி” (MOXIE) எனும் சாதனத்தை சோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறது NASA.
செவ்வாயின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவானது மிக மிகக் குறைவு. செவ்வாய் வளிமண்டலம் 95% கார்பன் டை ஆக்ஸைடால் நிறைத்திருக்கிறது. மீதமுள்ள 5 சதவிகிதத்தில் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்கள் நிறைந்திருக்கிறது. நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவருடன் இணைக்கப்பட்ட ஒரு டோஸ்டர் அளவிலான அறிவியல் கருவி, செவ்வாய் சுற்றியுள்ள வளிமண்டலத்திலிருந்து சிறிது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனாக மாற்றியது.
வரும் காலங்களில் செவ்வாய் பயணத்தின்போது மனிதர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் காற்று இருக்க வேண்டியது அவசியம். மேலும் ராக்கெட் எரிபொருள்களுக்கும் ஆக்ஸிஜன் அவசியம். செவ்வாய் கிரகத்தில் மிக அதிக அளவில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க முடியும் என்ற நிலையில், எதிர்காலத்திற்கு இது உதவும்.
மாக்ஸி எனும் ஆக்ஸிஜன் வள பயன்பாட்டு சோதனை (MOXIE) கருவி, கார் பேட்டரியின் அளவுள்ள ஒரு தொழில்நுட்ப கருவியாகும். “இது செவ்வாய் கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றுவதற்கான முக்கியமான முதல் படியாகும்” என்று நாசாவின் விண்வெளி தொழில்நுட்ப மிஷன் இயக்குநரகத்தின் (எஸ்.டி.எம்.டி) இணை நிர்வாகி ஜிம் ரியூட்டர் (Jim Reuter) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மாக்ஸி
இதன் எடை பூமியில் 37.7 பவுண்டுகள், செவ்வாய் கிரகத்தில் 14.14 பவுண்டுகள். இது ரோவரின் உள்ளே வலது முன் பக்கம் அமைந்துள்ளது. MOXIE ஒரு மரத்தைப் போல ஆக்ஸிஜனை உருவாக்குகிறது. இது கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றும்.
“ஆக்ஸிஜன் என்பது நாம் சுவாசிக்கும் பொருள் மட்டுமல்ல,” என்று அவர் கூறினார். “ராக்கெட் புரொப்பலண்ட் இயக்கம் ஆக்ஸிஜனைப் பொறுத்தது. மேலும் எதிர்கால ஆய்வாளர்கள் செவ்வாய் கிரகத்தில் உந்துசக்தியை உற்பத்தி செய்வதைப் பொறுத்தது.
செவ்வாய் கிரகத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட குழுவை அனுப்ப, சுமார் 15,000 பவுண்டுகள் ராக்கெட் எரிபொருள் மற்றும் 55,0000 பவுண்டுகள் ஆக்ஸிஜன் தேவைப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. மூச்சு விட, MOXIE இன் முதன்மை புலனாய்வாளர் மைக்கேல் ஹெக்டின் கூற்றுப்படி, ஒரு ஆண்டு முழுவதும் நான்கு பேர் கொண்ட குழுவினருக்கு ஒரு மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் தேவைப்படும்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வழியெல்லாம் ஆக்ஸிஜனைக் குறைப்பது சிக்கலானது மற்றும் விலை உயர்ந்ததாக இருக்கும். அதனால் தான் செவ்வாயில் ஆக்ஸிஜனைப் பிரித்தெடுப்பதை விஞ்ஞானிகள் பரிசீலித்து வருகின்றனர்.
MOXIE கார்பன் டை ஆக்சைடு வாயுவை சுமார் 1,470 டிகிரி பாரன்ஹீட்டிற்கு வெப்பப்படுத்த வேண்டியிருந்தது. இதன் மூலம் சுமார் ஐந்து கிராம் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடிந்தது. இது 10 நிமிடங்கள் மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவாகும். இது ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறது.
முதலாவதாக, நாசாவின் ஹெலிகாப்டர் இன்ஜெனியூட்டி மற்றொரு கிரகத்தின் மேற்பரப்பில் முதன் முதலில் பறந்து சாதனை நிகழ்த்தியது.