அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2011 ஆம் ஆண்டு வியாழன் கோளிற்கு ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த ஆய்வு விண்கலம் சுமார் ஐந்து வருட விண்வெளிப் பயணத்தை முடித்து ஒருவழியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வியாழன் கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. கோளின் காலநிலை, நில அமைப்பு, கிடைக்ககூடிய தனிமங்கள், வளிமண்டலத்தில் இருக்கும் காற்று போன்ற பல விஷயங்களைப் பதிவு செய்ய இருக்கும் ஜூனோ முதற்கட்டமாக வியாழன் கோளினை நெருக்கமாக புகைப்படம் எடுத்து அனுப்பியிருக்கிறது. அது தான் பல கேள்விகளை ஆராய்ச்சியாளர்களிடையே எழுப்பியுள்ளது.
வியாழனும் கோடுகளும்
ஜூனோ விண்கலம் வியாழன் கோளிற்கு மேலாக 11,400 முதல் 31,700 க்கு இடைப்பட்ட உயரத்தில் பறந்து இந்த புகைப்படத்தினை எடுத்திருக்கிறது. இதில் தெரியும் கோடுகள் உண்மையில் எப்படி உருவானவை என்பது பற்றித் தகவல்கள் இல்லை. இந்நிலையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது.

வரும் டிசம்பர் 21 – ஆம் தேதி ஜூனோ விண்கலம் ஆய்வினை துரிதப்படுத்த இருப்பதனால் வியாழன் கோளினைப் பற்றிய பல மர்மங்கள் வெளியே வரும் என ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது.
தீர்க்கப்படாத சில மர்மங்கள்
வியாழன் அதன் அளவினைப்போன்றே மிகப்பெரும் மர்மங்களைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் கோளாகும். பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்த வியாழனின் வளையத்தையே வாயேஜர் தான் கண்டுபிடித்தது. அதேபோல் இங்குள்ள புயல் பிரதேசம் மிகுந்த ஆபத்தானது. பூமியின் அளவில் இருக்கும் சிவப்புப் பிராந்தியமான இது Great Red Spot என்று அழைக்கப்படுகிறது.

எனவே வரும் புத்தாண்டில் இதுவரை தெளிவில்லாமல் இருந்த வியாழனின் பல தியரிகள் ஆராய்ச்சியாளர்களால் மாற்றி எழுதப்பட இருக்கின்றன. அவை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.