புளூட்டோ கிரகத்திற்கு அப்பால் உள்ள விண்கற்களைப் பற்றி ஆராய கடந்த 2006 ஆம் ஆண்டு விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 400 கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் புளூட்டோ கிரகத்தின் வளிமண்டலத்தை அடைய அந்த விண்கலத்திற்கு 9½ ஆண்டுகள் தேவைப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் குய்ப்பர் பெல்ட் எனப்படும் நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் குட்டைக் கோள்கள் அதிகம் இருக்கும் பகுதியைத் தாண்டியது.

சூரியக் குடும்பத்தின் கடைசிக் கோளான புளூட்டோவிற்கும் அப்பால், அதாவது சூரியக்குடும்பத்தின் விளிம்பில் உள்ள வான்பொருட்களை ஆராய தொடங்கியத்போது தான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்திருக்கிறது. புளூட்டோவிலிருந்து சுமார் 2,200 தொலைவில் மிகப்பெரிய ஒரு விண்கல்லை விண்கலம் படம் பிடித்திருக்கிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள ஒரு விண்பொருளை முதன்முதலில் புகைப்படம் எடுத்த நிகழ்வு நிகழ்ந்தது புத்தாண்டு அன்று. விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையாகக் கொண்டாடப்படும் இந்த வெற்றிக்கான செய்தி புதிய ஆண்டின் முதல் நாளில் கிடைத்ததால் விண்கலத் திட்டத்தை நிர்வகிக்கும் நியூ ஹரிசான் ஆராச்சியகம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. நாசாவின் தலைமையின் கீழ் இயங்கும் நியூ ஹரிசான் ஆராய்ச்சிப் பிரிவு கடந்த 13 ஆண்டுகாளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறது.
அல்டிமா துலே (Ultima Thule)
இந்தப் புதிய விண்கல்லிற்கு அல்டிமா துலே என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அல்டிமா என்பது இத்திட்டத்தை வடிமைத்த நியு ஹரிசானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயராகும். துலே என்பதன் பெயர்க்காரணம் சற்றே விசித்திரமானது. இடைக்கால வரலாற்றில் பெரும்பான்மையான மக்களால் நம்பப்பட்ட ஒரு விஷயம் துலே தீவின் இருப்பிடம். உலகின் வடக்கு எல்லையில் அமைந்திருப்பதாக நம்பப்பட்ட இத்தீவு உண்மையில் ஒரு கற்பனை மட்டுமே. ஏனெனில் இதற்கான எவ்வித வரலாற்று, பூகோள சாட்சியங்களும் இல்லை.

சரி, இந்தப் பெயரை ஏன் புளூட்டோவிற்கு அப்பால் உள்ள விண்கல்லிற்கு வைக்கவேண்டும்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு தான் இந்த விண்கல் இருப்பதற்கான ஆதாரமே கிடைத்தது. ஆனாலும் கிடைத்த புகைப்படங்களில் தெளிவு இல்லாமல் இருந்தது பல குழப்பங்களைக் கொண்டுவந்தது. புளூட்டோவின் சுற்றுவட்டப்பாதையில் இருப்பதைத்தவிர வேறு எந்த உறுதியான தகவல்களும் இல்லை. அடுத்தடுத்த தொடர் ஆராய்ச்சிகளின் விளைவால் ஒருவழியாக இந்தக் கல் அகப்பட்டது.
இந்தக் கல் சூரியக் குடும்பத்தின் தோற்றத்திற்கு முன்பே இருந்திருக்காலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்துவதன் மூலம் சூரியக்குடும்பம் தோன்றிய காலத்திற்கு முன்னால் இந்தப் பிரபஞ்ச நிலைமையைக் கண்டுபிடிக்கலாம். அதனாலேயே இத்திட்டம் (flyby of Pluto) முக்கியமானதாக கருதப்படுகிறது.
அந்த ஆறு மணிநேரம்
புத்தாண்டு பிறந்த நாளில் இந்தக் கல்லின் படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது விண்கலம். உடனே அதனை பூமிக்கு அனுப்பியபோதும், மிக அதிக தூரம் காரணமாக புகைப்படமானது ஆறு மணிநேரம் ஆறு நிமிடங்களுக்குப் பிறகே பூமியை அடைந்திருக்கிறது. இருப்பினும் முந்தையதை விடத் தெளிவாக இருக்கும் இந்தப்படத்தை நாசா வெளியிட்டிருக்கிறது.

13 வருட கடும் ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த வெற்றியை ஈட்டியுள்ளது நாசா. ஏற்கனவே வாயேஜர் விண்கலம் சூரியக்குடும்பத்தின் எல்லையைக் கடந்து பயணித்துவரும் நிலையில் நியு ஹரிசான் விண்கலத்தின் இந்தப் புதிய சாதனை குய்ப்பர் பெல்ட்டிற்கு அப்பால் உள்ள பல மர்மங்களை வெளிக்கொண்டுவருதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.