வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடைக்கு (Space Walk) நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 விண்வெளி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அன்னி மெக்கிளைன் (Anne McClain) மற்றும் கிறிஸ்டினா கோச் (Christina Koch) என்ற இரு வீராங்கனைகளும் விண்வெளியில் நடக்க உள்ளனர்.

இருவரும், விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இருந்து வெளியே வந்து மார்ச் 29-ம் தேதியன்று விண்வெளியில் நடப்பார்கள் என நாசா அறிவித்துள்ளது.
மேலும் இரு பெண்கள் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவர்களுக்கு உதவுவார்கள். வின்வெளி ஓட இயக்குனர் மேரி லாரன்ஸ் மற்றும் விண்வெளி ஓட கட்டுப்பாட்டு நிபுணர் ஜாக்கி காகி மற்றும் கிறிஸ்டன் ஃபசிகோல் ஆகியோரால் தரையிலிருந்து அவர்கள் வழிநடத்தப்படுவார்கள்.
I just found out that I’ll be on console providing support for the FIRST ALL FEMALE SPACEWALK with @AstroAnnimal and @Astro_Christina and I can not contain my excitement!!!! #WomenInSTEM #WomenInEngineering #WomenInSpace
— Kristen Facciol (@kfacciol) March 1, 2019
இத்தகவலை நாசாவின் செய்தி தொடர்பாளரான Stephanie Schierholz எனும் ஒரு பெண் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும், இந்நிகழ்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த திட்டமும் தீட்டப்படவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
விண்வெளி நடை என்பது என்ன?
நாசாவின் தகவலின்படி, ஒரு விண்வெளி நிலையத்துக்கு வெளியே அல்லது விண்வெளி ஓடத்துக்கு வெளியே செலவழிக்கப்பட்ட எந்தவொரு நேரமும் விண்வெளி நடையாக கருதப்படும். விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வெளியே , பரிசோதனைகள் நடத்தும் போதும், பழுது பார்க்கும் போதும் விண்வெளி வீரர்கள் வெளியே வந்து விண்வெளியில் நடந்து அப்பணியை செய்யவேண்டும்.
கோச் மற்றும் மெக்லெய்ன் இருவரும் நாசாவின் 21 ஆம் விண்வெளி வீரர்களின் உறுப்பினர்களாக 2013 இல் தேர்வு செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டில் பயிற்சியையும் முடித்துக் கொண்டனர். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மெக்லெய்ன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வருகிறார். ஆனால், கோச் வரும் மார்ச் 14 ம் தேதியன்று பூமியிலிருந்து பயணித்து விண்வெளி நிலையத்தை அடைவார்.
மேலே காண்பது 10 நிமிட விண்வெளி நடை பயண காணொளி. பொதுவாக விண்வெளி நடை என்பது 7 மணி நேரம் வரை இருக்கும்.
விண்வெளியில் நடந்த முதல் பெண் யார்?
இரண்டாவது பெண் விண்வெளி வீரராக இருந்த ரஷ்ய விண்வெளி வீராங்கனை ஸ்விட்லானா சாவிட்ஸ்கயா (Svetlana Savitskaya) 1984 ஆம் ஆண்டில் பழுதுபார்க்கும் முறையை பரிசோதிக்கும் போது, விண்வெளியில் நடந்த முதல் பெண் ஆளுமை ஆனார். இப்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெண்கள் விண்வெளியில் நடக்கப்போகிறார்கள்.
நாசாவில் பெண்கள்
1978 ஆம் ஆண்டில் நாசா முதன் முதலில் பெண் விண்வெளி வீராங்கனைகளை தேர்ந்தெடுத்தது. இப்போது, நாசாவில் சுமார் 34 சதவீத விண்வெளி வீரர்கள் பெண்கள் உள்ளனர். இந்தியாவில் 33% இட ஒதுக்கீட்டுக்கே போராட வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாணியில் நேரடி ஒளிபரப்பு
வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வை எழுத்தாணி நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. ஒளிபரப்பு நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.