நிலவின் மீதான அமெரிக்காவின் ஆசை மீண்டும் ஒருமுறை துளிர்விட்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வானியல் ஆராய்ச்சிக்கு மகுடம் கூட்டிய அப்போல்லோ திட்டம் நிறைவேறியது. அந்த பிரம்மாண்ட திட்டத்திற்கு அமெரிக்கா செலவு செய்த தொகை 25 பில்லியன் டாலர்கள். இப்போதைய மதிப்பிற்கு 150 பில்லியன் டாலர்கள் வரும்!! ரஷ்யாவுடனான பனிப்போர் உச்சத்தில் இருந்த நேரம் ரஷியாவிற்கு சவால் விடுவதற்கான மற்றொரு காரணமாக இந்த நிலவு ஆராய்ச்சி இருக்கவேண்டும் என அமெரிக்கா நினைத்தது தனிக்கதை.

ஆனால் தற்போது ட்ரம்ப் தலைமையிலான அரசு நிலவுப்பயணம் குறித்து அதீத அக்கறை காட்டிவருகிறது. 2028 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த நிலவுப்பயனத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்கும்படி அமெரிக்க மேலிடம் நாசாவிற்கு அழுத்தம் கொடுத்துவருகிறது. இதற்கான நிதித்தேவை எவ்வளவாக இருக்கும் என நாசாவின் சார்பில் கணிப்பு நடத்தப்பட்டது. இது குறித்துப்பேசிய நாசாவின் தலைமை அதிகாரி ஜிம் பிரைடென்ஸ்டைன் (Jim Bridenstine)”ஆர்டேமிஸ் (Artemis) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்மூலம் ஒரு ஆண் மற்றும் பெண் ஆராய்ச்சியாளர்கள் நிலவிற்கு அனுப்பப்படுவார்கள். வரலாற்றில் முதன்முறை நிலவிற்கு பெண்ணை அனுப்பும் முயற்சி இதுதான். இந்த திட்டத்திற்கு 20 முதல் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 4 முதல் 6 பில்லியன் வரை நிதியானது தேவைப்படும்” என்றார்.
ஆர்டேமிஸ் (Artemis) என்பது கிரேக்க புராணங்களில் வரும் நிலவு கடவுள் ஆவார்.
அமெரிக்கா இந்த திட்டம் மூலம் நிலவில் நீண்டகால ஆராய்ச்சியை மேற்கொள்ள இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் இந்த திட்டத்திற்கென மிகப்பெரிய தொகையை அமெரிக்க காங்கிரஸ் வழங்க நேரிடும். அமெரிக்காவின் தேசிய வானியல் ஆராய்ச்சி மையம் இந்த நிதியை காங்கிரஸ் ஒதுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஓடம்
நிலவிலிருந்து ஆராய்ச்சியாளர்களை மீண்டும் பூமிக்கு அழைத்துவர திறமையான விண்வெளி ஓடம் வேண்டும். நாசா, கார்கான்டன் (gargantuan) என்னும் ராக்கெட்டை 9.7 பில்லியன் செலவில் உருவாக்கி வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு இதுவரை 12 பில்லியன் டாலர்களை செலவழித்துவிட்டது நாசா. அதேபோல் ஓரியான் விண்கலமும் பல மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆர்டேமஸ் திட்டத்தினை செயல்படுத்த எந்த ராக்கெட்டை நாசா பயன்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
அமெரிக்காவில் நாசாவிற்கு போட்டியாக பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். தேவைப்படுமாயின் நாசா ஸ்பேஸ்எக்சிடம் குறுகிய கால ஒப்பந்தம் ஒன்றினையும் அமைத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.