அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2012 ஆம் ஆண்டு கியூரியாசிட்டி என்னும் நடமாடும் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தியது. மனிதர்கள் உயிர்வாழக்கூடிய சாத்தியங்கள், செவ்வாய் கிரகத்தின் இயற்கை அமைப்பு போன்றவற்றை ஆய்வுசெய்து வரும் இந்த ரோவர் பல கோணங்களில் செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது. அப்படி நாசாவிடம் இருக்கும் முக்கியமான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவருகிறது அந்த நிறுவனம்.

அங்கேதான் ஒரு சிக்கல் முளைத்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பறவைபோன்ற ஒரு பொருள் இருப்பது தெரிகிறது. இது நிச்சயம் வேற்றுகிரக வாசிகள் வசிக்கும் இடத்தைச் சார்ந்த பறவையாகத்தான் இருக்கும் எனச் சத்தியம் செய்கிறார் ஸ்காட் சி வாரிங் (Scott C Waring). அன்னார் ஏலியன்கள் விஷயத்தில் அதிதீவிரமானவர். நாசா எப்போது எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் நம்மாள் அதற்கென தனியாக ஒரு காரணத்தை வைத்திருப்பார். ஆனால் வாரிங் அல்லாமல் பலரும் இப்படி நாசாவை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

ஆனால் வாரிங்கிற்கு முன்பாகவே சான்ட்ரா எலேனா ஆண்ட்ராடே (Sandra Elena Andrade) என்பவர் யூடியூபில் நாசாவின் இந்த புகைப்படம் குறித்து குறிப்பிட்டுள்ளார். வாரிங்கிற்கு ஒருபடி மேலேபோய் “அது கழுகுதான் அதன் இறக்கைகளை பார்த்தால் தெரியவில்லையா” என்கிறார் சான்ட்ரா. அதாவது பரவாயில்லை. இந்தப்படமே செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டதில்லை. இது கிரீன்லாந்தில் இருக்கும் தீவு. அங்குள்ள பனியை மறைக்கத்தான் படத்தை கருப்பு வெள்ளையாக வெளியிட்டுள்ளனர் நாசா வாசிகள் என கொப்பளிக்கிறார் சான்ட்ரா.

பல மில்லியன் செலவழித்து செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பும் நாசாவிற்கு இந்த தேவையில்லாத விளம்பரத்தினால் எந்த வருமானமும் கிடைக்கப்போவதில்லை. அதே சமயத்தில் நாசாவின் அந்த முதல் நிலவுப்பயணம் குறித்து எழுந்த எந்த கேள்விக்கும் இதுவரை துல்லியமான விடை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் நாசாவின் மீது வைக்கிறார்கள் இந்த ஏலியன் விரும்பிகள்.