2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே தெளிவாக தெரிகிறது. இது இந்தியாவிலும் தெரியத் தொடங்குகிறது. நாசாவின் NEOWISE (Near Earth Object Wide-field Infrared Survey Explorer) தொலைநோக்கி கண்டுபிடித்ததால், இதற்கு NEOWISE C/2020 F3 என்று பெயரிடப்பட்டுள்ளது.

NEOWISE C/2020 F3 வால்நட்சத்திரம் தற்போது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 200 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரவு நேரத்தில் தெளிவான வானத்தில் காணக்கூடிய அளவுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது. இருப்பினும், ஜூலை 12-15 க்குப் பிறகு இந்தியாவில் தெளிவாக காணமுடியும். மேலும், இது ஆகஸ்டு மாதம் பாதி வரை தெரியும்.
NEOWISE ஜூலை 22-23 தேதிகளில் பூமிக்கு மிக நெருக்கமான வரும். அப்போது இது பூமியிலிருந்து 100 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். இது நம் நிலவு இருக்கும் தொலைவை விட 200 மடங்கு அதிக தொலைவாகும்.

வால்நட்சத்திரம் / வால்மீன் என்பது என்ன?
வால்நட்சத்திரங்கள் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் உறைபனி மற்றும் வாயுக்கள் கொண்ட மிகப்பெரிய பொருட்கள் ஆகும். வால்நட்சத்திரங்களுக்கு சொந்தமாக ஒளி இல்லை. இவை விண்வெளியில் சுற்றிக்கொண்டே சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது அதன் பரப்பு சூடாகி வெப்பமடைந்து அதன் வாயுக்களை வெளியிட தொடங்குகிறது. இதன் மூலம் வால்நட்சத்திரங்களில் வால் உருவாக தொடங்குகிறது. இந்த வாயு மற்றும் தூசிகள் பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு வீசி எறியப்படும். பூமிக்கு அருகில் வால்நட்சத்திரங்கள் வரும் போது வெறும் கண்களால் காணமுடியும்.
வெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்!
எப்போது, எங்கே தெரியும்?
இந்தியாவில் இது இரண்டு வேளைகளில் தெரியும்.
- அதிகாலை 4 மணி முதல் சூரிய உதயம் வரை – வடகிழக்கு அடிவானில் தெரியும்.
- மாலை சூரியன் மறைந்த பிறகு 7 மணி வரை – வடமேற்கு அடிவானில் தெரியும்.
இதை இருண்ட வானத்தில் வெறும் கண்களால் NEOWISE வால்நட்சத்திரத்தை பார்க்க முடியும். மேகமூட்டம் இருந்தால் பார்க்கமுடியாது.
பூமியின் பரப்பில் வெடித்துச் சிதறிய வால்நட்சத்திரம் – அழிந்தது எந்த நகரம் தெரியுமா?
புகைப்படங்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) தங்கியிருந்த விண்வெளி வீரர்கள் இந்த வானியல் அற்புதத்தை புகைப்படம் எடுத்திருந்தனர்.

இது நாசாவின் பார்க்கர் விண்கலம் எடுத்த புகைப்படம்!
இந்த அரிய நிகழ்வை தவறாமல் காணுங்கள்! இல்லையேல், இதே வால்நட்சத்திரத்தை மீண்டும் பார்க்க இன்னும் 6500 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதாவது, 8786-ம் ஆண்டு தான் இது மீண்டும் தெரியும்.