சமீப காலமாகவே அமெரிக்கா விண்வெளியில் வழக்கத்திற்கு அதிகமான ஆர்வத்தைக் காட்டிவருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 9 பெரிய நிறுவனங்கள் நாசாவின் விண்வெளித் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்களுக்கான மதிப்பு சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அத்தோடு அதிபர் ட்ரம்பும் மெக்சிகோ பிரச்சினையை விட்டுவிட்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான Space Policy Directive 1 க்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

எங்கே போகலாம்?
அதிநவீன தொழில்நுட்பங்கள், ஏராளமான அனுபவம் இருந்தாலும் இரண்டு கிரகங்களுக்கு மட்டுமே நம்மால் பயணிக்க முடியும். ஒன்று நிலவு. மற்றொன்று செவ்வாய். தூரம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தக் கோள்களுக்கு ஏற்கனவே பல முறை ஆளில்லா விண்கலங்களை வெற்றிகரமாக அமெரிக்கா ஏவியிருக்கிறது. மேலும் நிலவுப் பயணத்தை 1972 லேயே சாதித்துக்காட்டியவர்கள் அமெரிக்கர்கள் என்பதால் இதில் துணிந்து இறங்குவார்கள்.
குடியேற்றம்
நாசாவின் இந்த ஆராய்ச்சிகள் விண்வெளியில் (நிலவு அல்லது செவ்வாய்) எதிர்கால மனித குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காகத்தான். அப்படியென்றால் அங்கு வசிக்கப்போகும் மக்களுக்கான வீடுகள்? இதற்காகத்தான் பிரம்மாண்ட போட்டி ஒன்றினை நாசா நடத்திவருகிறது.
செவ்வாய் கிரகத்தில் கட்டப்படுவதற்கு ஏற்ற ஒரு வீட்டின் வடிவத்தை தயாரித்துக்கொடுப்பது. இதற்கான பணிகள் 2015 ஆம் ஆண்டே துவங்கிவிட்டன. இந்தப் போட்டியின் மூன்றாம் நிலையில் 11 அணிகள் கலந்துகொண்டன. விண்வெளி வீடு, அதன் உள் மற்றும் வெளிக்கட்டமைப்பு, பயன்பாட்டில் இலகுத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட திட்டம் ஒன்றினை சமர்பிக்குமாறு நாசா கேட்டுக்கொண்டது. அத்தோடு அந்த வீடு இயங்கும் விதம் பற்றி அனிமேஷன் வீடியோ ஒன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல் பரிசு
நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த SEArch+/Apis Cor நிறுவனம் இந்தப் போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்றது. மடிக்ககூடிய மேற்புற கூரை, வெளிச்சத்திற்கான சிறு துளைகள் அடங்கிய இத்திட்டத்தினை நாசா தேர்ந்தெடுத்திருக்கிறது.
Zoperhous என்னும் நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்தது. இந்த நிறுவனம் அளித்த ரோவர் மாதிரியிலான வடிவம் பல ஆராய்ச்சியாளர்களை ஈர்த்தது என்றே சொல்லலாம். இந்த இரு அணிக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
வருகின்ற மே மாதத்தில் அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதில் வீட்டினை முப்பரிமான முறையில் உருவாக்கித் தரவேண்டும் என நாசா அறிவித்திருக்கிறது. இதற்கான பரிசுத்தொகை 8 லட்சம் டாலர்கள்!! எனவே கூறிய விரைவில் செவ்வாயில் நம்மாட்கள் டேரா போடுவார்கள் என நம்பலாம்.