சூரியனை பூமி சுற்றுவருவது போலவே விண்கற்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சில நேரங்களில் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் விண்கற்கள் பூமியின் பரப்பில் வந்து மோதுவதுண்டு. பூமியின் பெரும்பான்மையான பரப்பு கடல்கள் தான் என்பதால் விண்கற்கள் அதில் விழுந்துவிடும். ஆனால் அரிதினும் அரிதாக நிலப்பரப்பில் இவை வந்து மோதும். விண்களின் எடை மற்றும் அதன்வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் சேதம் கடுமையாக இருக்கும்.
ரகசிய வெடிப்பு
சென்ற ஆண்டு ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) தீபகற்பப் பகுதிக்கு அருகே உள்ள பேரிங் (Bering) கடலின் வான் பரப்பில் ஒரு விண்கல் வெடித்துச் சிதறியுள்ளது. இது நடந்தது டிசம்பர் 18 ஆம் தேதி. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே மூன்று மாதம் கழித்தே வெளியில் தெரியவந்திருக்கிறது. விண்கல் வெடித்த நேரத்தில் ஜப்பானின் வானிலை செயற்கைக்கோளான ஹிமாவரி-8 அதனைப் புகைப்படம் எடுத்துள்ளது. அதுவும் தற்செயலாக. நாசா இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் படத்தை வெளியிட்டது. ஜப்பானின் ஹிமாவரி போலவே டெரா என்னும் செயற்கைக்கோளும் இந்த வெடிப்பை படம் பிடித்திருக்கிறது.
பத்து அணுகுண்டுகள்
1500 டன்கள் எடையும் 26 அடி சுற்றளவும் கொண்ட இந்த பிரம்மாண்ட விண்கல் மணிக்கு 1,15,200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று மண்டலத்திற்கு உள்ளே நுழைந்திருக்கிறது. கடற்பகுதிக்கு மேலே சுமார் 25 கிலோமீட்டர் உயரத்தில் இந்த விண்கல்லானது வெடித்துச் சிதறியிருக்கிறது.

இந்த வெடிப்பின்போது வெளியான ஆற்றல், 173 கிலோ டன் TNT வெடிப்பின் பொது வெளியாகும் ஆற்றலுக்குச் சமம் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். இந்த சக்தி சுமார் பத்து அணுகுண்டுகளுக்குச் சமம். நல்ல வேளையாக வானத்தில் வெடித்திருக்கிறது.
வெடிப்பு நிகழ்ந்த இடம் விமானங்கள் பயணிக்கும் பாதை என்பதால் இன்னும் சில நாட்களில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் என நாசா தெரிவித்திருக்கிறது.