இந்த வருடம் 2020 முடிய சில நாட்களே இருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டின் வண்ணமயமான நிகழ்வாக இது இருக்கலாம். டெலஸ்கோப் போன்ற சாதனங்களின் உதவியில்லாமல், நேரடியாக நம் கண்களினால் பார்க்கக் கூடிய அற்புதமான சில காட்சிகள் விண்வெளியில் இம்மாதம் நிகழ இருக்கின்றன. அதில் ஒன்று எரிகற்கள் மழை. ஆம், எரிகற்கள் மழையாகப் பொழியும் காட்சியை நாம் காணலாம்.
விண்வெளியில் இருந்து, எரிகல் எரிந்து விழுவதை எப்போதாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அரிதான நிகழ்வுதான் அது. ஆனால் எரிகற்கள் மழையாக பொழிவதைப் பார்த்திருக்க மாட்டீர்கள். “வால் நட்சத்திரங்கள் விட்டுச் செல்லும் சிதைவுகள், தூசிமண்டலங்கள் வழியாக பூமி பயணிக்கும் போது, இந்த எரிகற்கள் மழை பொழியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
1983-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட “3200 பேட்டன் என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மண்டல குப்பைகளின் வழியாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் நமது பூமி பயணிக்கும். அப்போது, இந்த எரிநட்சத்திரங்கள் இரவு நேரத்தில் ஒளிமயமான காட்சிகளாக நமக்கு காணக்கிடைக்கின்றன. இவை ஒரு விநாடிக்கு 35 கி.மீ. வேகத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும். அதாவது ஒரு மணிக்கு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. வேகம். டிசம்பர் 1 முதல் 14 தேதி வரை அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 எரிநட்சத்திரங்கள் விழும்.
கும்மிருட்டாக இருக்கும் இடங்களில் இருந்து நாம் இதனை சிறப்பாக கண்டுகளிக்கலாம். பெரும்பாலும் மஞ்சள் நிறங்களில் இவை எரியும். சில நேரங்களில் பச்சை, நீல நிறங்களில் இருக்கும். டிசம்பர் 13 ஆம் தேதி இரவு முதல் 14 ஆம் தேதி முன்னிரவு 2 மணி வரை காணலாம்.