28.5 C
Chennai
Tuesday, February 27, 2024

நிலவிற்கு மனிதன் ஏன் மீண்டும் செல்லவில்லை?

Date:

1969 ஆம் ஆண்டு மனிதன் முதன் முதலில் நிலவில் காலடி வைத்தான். பின்பு 1972 ல் தான் மனிதன் கடைசியாக நிலவிற்குச் சென்றது. அதன் பிறகு இத்தனை ஆண்டுகளாக ஏன் மனிதன் நிலவிற்கு செல்லவில்லை? சொல்லப்போனால் இப்போது எல்லா துறைகளிலும்  எத்தனையோ புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனாலும் ஏன் நிலவிற்கு செல்லவில்லை தெரியுமா?

போட்டி

2007 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனமும் XPRIZE என்ற நிறுவனமும் நிலவிற்கு சென்று வரும் முதல் அரசு சாரா அமைப்பு அல்லது குழுவிற்கு 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்தன. போட்டியில் (Google Lunar Xprize) மூன்று முக்கிய பணிகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதாவது, நிலவின் பரப்பில் ஒரு ரோபோடிக் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க வேண்டும். விண்கலமோ அல்லது மனிதனோ நிலவின் பரப்பில் குறைந்தது 500 மீட்டர் பயணம் செய்ய வேண்டும். நிலவிலிருந்து HD வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுத்து பூமிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியின் முடிவு தேதி அடிக்கடி மாற்றப்பட்டு இறுதியாக மார்ச் 31, 2018 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெற்றி பெற்றவர்கள் யார் என கேட்டால் யாரும் இல்லை என்பது தான் பதில். ஆம். போட்டி அறிவிக்கப்பட்ட கால இடைவெளியில் நிலவுக்குச் சென்ற விண்கலங்கள் எல்லாமே சம்பத்தப்பட்ட நாடுகளின் அரசால் அனுப்பப்பட்டவை தான். பல தனியார் நிறுவங்கள் முயற்சித்த போதும் அவை எதுவுமே நிலவை அடையவில்லை!

இது குறித்து போட்டியை நடத்திய அமைப்பை சேர்ந்த Chanda Gonzales-Mowrer , “2007 ல் நாங்கள் கணக்கிட்ட மதிப்பை விட உண்மையில் நிலவிற்கு செல்ல ஆகும் செலவு அதிகம். 20 மில்லியன் டாலர்கள் என்பது நிலவிற்கு செல்ல ஆகும் செலவை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு” என்கிறார்.

Spacecraft
Credit: Spacefacts de

பனிப்போர்

இரண்டாம் உலகப்போர் முடிந்து பனிப்போர் தொடங்கிய சமயத்தில், அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் இடையில் பலத்த ஆயுதப் போட்டி நிலவியது. 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் சோவியத் யூனியன் அதன் முதல் விண்கலத்தை நிலவிற்கு வெற்றிகரமாக அனுப்பியதும், அடுத்து அமெரிக்கா அதன் பலத்தை நிரூபிக்க ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. விளைவு? எப்படியோ அமெரிக்கா அதன் முதல் நிலவு பயணத்தை நிகழ்த்தியது. அப்போது, நாசா (NASA) நிலவை சீக்கிரம் சென்றடைவதற்கான வழியை கண்டறிந்து சென்றது. இந்த அவசர நிலவு பயணம், நிலவைப் பற்றிய ஆராய்ச்சிகளை விட ரஷ்யாவுடன் இருந்த போட்டியால் தான் நடந்தது என்பதே உண்மை. இதனால் எதிர்கால நிலவு பயணங்களுக்கான திட்டத்தை நாசா அப்போது சரியாக வடிவமைக்கவில்லை.

இது குறித்து Lunar Station Corporation (LSC) ன் தலைமை நிர்வாக அதிகாரி  Blair DeWitt “மனிதர்கள் நிலவிற்கு சென்று வந்த பின்பு,  மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான இயற்பியல், மற்றும் தொழில்நுட்ப கட்டுமானங்கள் காலப்போக்கில் மறையத் தொடங்கின. நிலவிற்கு செல்லும் விண்கலங்களுக்கு தேவையான உபகரணங்கள், பொருட்களை தொடர்ந்து பெறுவதற்கான வழிமுறைகள் இப்போது இல்லை” என்று கூறியுள்ளார்.”இப்போதும் அதே போன்ற அமைப்பை தான் தயாரிக்கவேண்டும். ஆனால் தயாரித்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் இல்லாதது தான் இந்த இடைவெளிக்கு காரணம்” என்றும் கூறியுள்ளார்.

அஸ்ட்ரோபோடிக் என்ற  தனியார் நிறுவனம் 2020 ல் நிலவு பயணத்தை திட்டமிட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை

இப்போதைய காலத்தில் விண்வெளிக்கு செல்லுவதற்கான செலவு முன்பை விட குறைவு தான் என்றாலும், உண்மையில் நிலவிற்கு செல்வதற்கு ஆகும் செலவு அதிகம் தான். நிலவிற்கான பயணம் நிகழ்ந்த காலத்தில் நாசாவால் உபயோகிக்கப்பட்ட சாட்டர்ன் V -ன் தற்போதைய மதிப்பு சுமார் 1.16 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த அளவு நிதியை அரசிடம் இருந்து பெறுவதே பெரிய சவால் என்பதால் சாட்டர்ன் V போன்ற புவி ஈர்ப்பு விசையை தகர்க்கும் திறன் கொண்ட ராக்கெட்டுகள் நாசாவிடம் இப்போது இல்லை. SpaceX நிறுவனம் அதன் தயாரிப்பான Falcon Heavy Rocket மூலம் 90 மில்லியன் டாலர்களில் நிலவு பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று கூறியிருந்தாலும் அந்த திட்டமும் இதுவரை நடக்கவில்லை. அதே சமயம் ஒரு தனியார் நிறுவனம் நிலவு பயணத்தை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இல்லை.

Saturn V
Credit: NASA

முயற்சிகள்

நாசாவும் சாட்டர்ன் V அளவு திறனுள்ள ராக்கெட்டை தயாரிக்க இதுவரை முயற்சித்து தான் வருகிறது. இதற்கான செலவு பில்லியன்களில் இருக்கும் என்பதால் அதற்கு எப்படியும் பல ஆண்டுகள் ஆகும். காரணம் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை மிகவும் மெதுவாக தான் நடக்கின்றன. எனவே இது குறித்து ஆக்கபூர்வமாக செயலாற்ற வேண்டும். மேலும் பல நிறுவங்கள் முன் வந்து நிதி அளித்தால் மட்டுமே மனிதனின் நிலவு பயணம் சாத்தியமாகும். இந்த Google Lunar Xprize போட்டி பல தனியார் அமைப்புகளை தூண்டியுள்ளது மட்டும் உண்மை. இதன் மூலம் வரும் காலங்களில் மனிதன் நிலவிற்கு செல்வான்  என எதிர்பார்க்கலாம். ஏனெனில் அஸ்ட்ரோபோடிக் Astrobotic என்ற  தனியார் நிறுவனம் 2020 ல் நிலவு பயணத்தை திட்டமிட்டுள்ளது. அதே போல் Lunar Station Corporation நிறுவனம் நிலவின் வானிலை முன்னறிவுப்புகளை வழங்குகிறது. மேலும் பல செயற்கைகோள்கள் மூலம் இன்னும் அதிக தகவல்களை பெறவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புடினும் நிலவு மற்றும் செவ்வாய் பயணங்களுக்கு அவர்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் நமது இந்தியாவும், சீனாவும் கூட பல நிலவு சம்பத்தப்பட்ட  திட்டங்களை நிகழ்த்தியுள்ளன. இது போன்ற தொடர் முயற்சிகளால் எப்படியும் வரும் ஆண்டுகளில் மனிதனின் நிலவு பயணம் நடக்க வாய்ப்புள்ளது.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!