நியுட்டனின் விதிப்படி எந்த ஒரு பொருளும், வெளிப்புற விசை செயல்படாதவரை தொடர் இயக்கத்தை மேற்கொள்ளும். அணு முதல் அண்டம் வரை இந்த விதி பொருந்தும். இந்த இயக்கம் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். உதாரணமாக சூரியனின் ஈர்ப்புப்புலத்தின் காரணமாக கோள்கள், சூரியனைச் சுற்றிவருவதைச் சொல்லலாம். இப்படி ஒவ்வொரு கோள்களின் நிறையைப் பொறுத்து சிறிய பொருட்களை அதனைச் சுற்றிவரத் துவங்குகின்றன. நிலவு இப்படித்தான் பூமியையும், சூரியனையும் சுற்றுகிறது.

சூரியனை மையமாக வைத்து ஏராளமான விண்கற்களும் சுற்றுவதால் சிலநேரங்களில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மோதும் இரு பொருட்களின் அளவைப் பொறுத்து சேதமும் இருக்கும். பூமியில் விண்கல் விழுவது மிகுந்த சேதத்தினை ஏற்படுத்துவதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? இதுவே இரண்டு அண்டங்களும் ஒன்றோடொன்று மோதினால் என்ன ஆகும்? அப்படி மோதுமா என்ன? மோதும். அதற்கான தேதியையும் குறித்துவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குறையும் ஆயுள்
ஐரோப்பிய யூனியன் சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட கயா விண்கலம் இதுகுறித்த பல்வேறு தகவல்களைச் சேகரித்து அனுப்பிவருகிறது. நம் சூரியக்குடும்பம் இருக்கும் பால்வழி அண்டமும், நமக்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமேடா (Andromeda) அண்டமும் 4.5 பில்லியன் வருடத்திற்குப்பின் மோதும் என ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் தற்போதைய தரவுகளின்படி இந்த மோதல் முன்கூட்டியே நடக்க இருக்கிறது. அதாவது இன்றிலிருந்து சுமார் 3.9 பில்லியன் வருடங்களுக்குள் இந்த மோதலானது நடக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்.
2013 ஆம் ஆண்டு விண்வெளியில் வீசப்பட்ட கயா விண்கலம், பால்வழி அண்டத்தின் இயக்கம், நகர்வு, விரிவாக்கம் போன்ற பல்வேறு நுட்பமான தகவல்களை சேகரித்தது வருகிறது. இதுவரை 100 கோடி நட்சத்திரங்களை புகைப்படமெடுத்து கயா பூமிக்கு அனுப்பியிருக்கிறது. அத்தனை படங்களும் முப்பரிமான வடிவத்தில் தயாரிக்கப்பட்டு துல்லியம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கயா பால்வழி அண்டத்தில் இருக்கும் பெரும்பான்மையான நட்சத்திரங்களை ஆய்வு செய்திருக்கிறது. மேலும் ஆண்ட்ரோமேடா அண்டத்திலிருக்கும் சில கோடி நட்சத்திரங்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அண்ட நகர்வுகளின் வேகத்தை கணக்கில் கொண்டே இந்த மோதலும் உறுதி செய்யப்பட்டிருகிறது.
மூன்றாம் அண்டம்
நமக்கு அருகில் இருக்கும் மற்றொரு அண்டமான M33 யும் பால்வழி நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த அண்டம் 2.5 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் தற்போது அமைந்துள்ளது. பால்வழி அண்டம், ஆண்ட்ரோமேடா மற்றும் M33 ஆகியவை ஒன்றியோன்று சந்திக்க இருக்கின்றன. அதிலும் பால்வழி அண்டத்தின் ஆண்ட்ரோமேடா மீதான மோதல் கடுமையானதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டிருகிறது.

மோதலுக்குப்பின்..
இந்த மூன்று வித்தியாசமான அண்டங்கள் மோத இருப்பதால், முழுவதும் வித்தியாசமான நீள்வட்ட புது அண்டம் ஒன்று தோன்றும் என்கிறார்கள் ஆராய்ச்சியார்கள். இந்த மோதல் அண்டங்களின் நட்சத்திரங்களை சிதறடிக்கும். அதாவது அண்டத்தின் நட்சத்திரங்களின் அமைவிடம் மாறும். அதற்கு மில்கிமேடா என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ஐரோப்பிய யூனியனின் ஆராய்ச்சியாளர்கள். இந்த நிகழ்வு நடக்க பல்லாண்டு காலம் ஆகும் என்றாலும், அண்டைய அண்டங்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருவது மிகமுக்கியம் என்கிறார்கள் கயா விண்கலத்தின் தலைமை ஆராய்ச்சியாளர்கள்.