நிகழ்வு 1: பூமிக்கு அருகில் செவ்வாய் கோள்
சூரியக்குடும்பத்தில் சூரியனிடமிருந்து நான்காவதாக இருக்கும் கோள் செவ்வாய். இந்த செவ்வாய் கோள் வரும் ஜூலை 25-ந்தேதி (இன்று) முதல் 31-ந்தேதி வரை, பூமிக்கு மிக அருகில் அதாவது, பூமியில் இருந்து 57.6 மில்லியன் கி.மீ தொலைவிற்கு வருகிறது.
- புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு: 149.6 மில்லியன் கி.மீ. அல்லது 14.96 கோடி கி.மீ (1 மில்லியன் = 10 லட்சம்)
- புவிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு: 3,84,400 கி. மீ.
இந்த நிகழ்வு நடக்கும் போது, பூமியில் இருந்து நாம் வெறும் கண்களால் பார்த்தாலே செவ்வாய் கோள் நன்றாக தெரியும். ஏனெனில், சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.
எப்போது காணலாம்?
இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கோள் வந்தது.
நிகழ்வு 2: சந்திர கிரகணம்
மேலும், அதே நாளில் அதாவது, ஜூலை 27 அன்று முழுமையான, இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இம்முறை சந்திரன், பூமி, மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்திக்கவிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் சந்திரன் சரியான நேர்கோட்டில் வராததால் முழுமையான சந்திர கிரகணம் நிகழாது. ஆனால் இந்த முறை சந்திர கிரகணமானது முழுமையாக நிகழ உள்ளது. இதையும் வெற்றுக்கண்ணாலே பார்க்க இயலும்.

பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூலை 27-ம் தேதி இரவு 10.30 மணியிலிருந்து, மறுநாள் சூரிய உதயம் வரை மற்றும் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதலும் செவ்வாய் கோளைப் பார்க்கலாம் என்றும், இதை வெற்றுக்கண்ணாலே காண முடியும் என்றும் தெரிவித்துள்ளது. செவ்வாய் கோளை தொலைநோக்கி உதவியுடன் காண, ஜூலை 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வானம் மேகமூட்டம் ஏதுமில்லாமல் தெளிவாக இருந்தால், சந்திர கிரகணத்தை ஜூலை 27-ம் தேதி இரவு 11.30 மணி முதல் ஜூலை 28-ம் தேதி அதிகாலை 4.00 மணி வரை தொலைநோக்கி உதவியுடன் பார்க்க பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.