செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் இன்றும் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அங்குள்ள நில அமைப்பு, நீர் இருப்பு, வீசும் காற்று என ஓயாமல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. செவ்வாயில் தண்ணீர் இருந்ததற்கான பல நம்பத்தகுந்த சாட்சிகள் கிடைத்திருந்தாலும், ” இப்போது இருக்கிறதா? என்ற கேள்விக்கு பல ஆராய்ச்சியாளர்களிடத்தில் பதிலில்லை. ஆனால் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து கிடைத்திருக்கும் புகைப்படங்கள் அவர்களை துள்ளிக் குதிக்கவைத்திருக்கிறது. ஆமாம். செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறை
ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.
வட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ்.
15 ஆம் ஆண்டு நிறைவு
Mars Express mission தொடங்கி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன. செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் தடம் பதித்த குறிப்பிட்ட சில முயற்சிகளில் Mars Express mission ம் ஒன்றாகும். கடந்த ஜூன் 2003 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் டிசம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது. Mars Express High Resolution Stereo Camera மூலம் எடுக்கப்பட்ட இதன் புகைப்படம் மனிதகுல வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பதிவு செய்யவேண்டிய சாதனைகளுள் ஒன்றாகும்.