இயற்கை அழகு மிக்க கோள்கள், சூரியன், நிலவு, விண்கற்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் என அனைத்திலும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கோள்களில் செவ்வாய் கோள் முக்கிய இடம் வகிப்பதால், அதை நோக்கி செயற்கைக்கோள்கள் முழு வீச்சில் பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
சூரியனுக்கு அருகில் செவ்வாய்!
கடந்த அக்டோபர் 6, 2020 அன்று பூமி – செவ்வாய் இடையேயான மிக நெருக்கமாக சந்திப்பு ஆராய்ச்சியாளர்களால் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது. இதைப் பற்றி நமது நியோதமிழ் தளத்திலும் எழுதியிருந்தோம். இதற்கு அடுத்தபடியாக, வரும் அக்டோபர் 13 ஆம் தேதி செவ்வாய் கோள் மற்றும் சூரியன் இடையேயான ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது.
அக்டோபர் 13 – Opposition நிகழ்வு!
அப்படியென்ன நிகழ்வு என்கிறீர்களா? செவ்வாய் கோள் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது பூமியானது செவ்வாய் கோளுக்கும் சூரியனுக்கும் இடையில் காணப்படும். இந்நிகழ்வானது, ஒவ்வொரு 26 மாத இடைவெளியிலும் நிகழும். இது Opposition என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, சூரியன் பூமியில் மறையும் போது செவ்வாய் கோள் கிழக்கு அடிவானத்தில் உதிக்கும். சூரியன் பூமியில் உதிக்கும் போது செவ்வாய் மறையும். இந்த நாளில், வானத்தில் சிவப்பு கோளினை கண்டறிவதற்கு மிகவும் ஏற்ற காலம் ஆதலால், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்த நிகழ்வின் போது, செவ்வாய் கோள் மிகவும் வெளிச்சமாகவும், பெரிய அளவிலும் தெரிவதால் தொலைநோக்கி உதவியின்றி வெறும் கண்களால் கண்டுகளிக்க முடியும்.
கடந்த அக்டோபர் 6 அன்று செவ்வாய் கோள் பூமியை மிக குறைந்த 62 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் நெருங்கியது. இது, பூமியிலிருந்து நிலவின் தொலைவை விட 160 மடங்கு ஆகும். இந்த சந்திப்பானது, இதற்கு அடுத்தபடியாக வரும் 2035 ஆண்டு தான் நிகழும். அப்போது பூமி சூரியனிடமிருந்து மிகவும் அதிக தொலைவில் இருக்கும்; செவ்வாய் கோள் சூரியனுக்கு மிக அருகில் (Perihelion) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 3 ஆம் தேதி செவ்வாய் கோளானது பெரிஹீலியனை அடைந்தது. அப்போதிலிருந்து சூரியனிடமிருந்து மெதுவாக நகர்கிறது.

இந்த சந்திப்பானது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் செவ்வாய் கோள் வெறும் 57.6 மில்லியன் கிலோமீட்டர் (35.8 மில்லியன் மைல்) தொலைவில் நெருக்கமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு தொலைநோக்கி மூலம் மிகவும் பெரிதாக, தெளிவாக சிவப்பு கோளினை பார்ப்பதற்கு சிறந்த வாய்ப்பு இதுவாகும். ஏனென்றால், இந்த முறை செவ்வாய் கோள் வானத்தில் மிக அதிக நேரம் தெரியும்.