நிலவிலிருந்து பூமியில் விழுந்த, மிகவும் அரிதான 5.5 கிலோ எடையுடைய விண்கல் ஒன்றை அமெரிக்காவின் ஏல நிறுவனம் ஒன்று சுமார் 612,500 டாலர்களுக்கு ஏலம் விட்டுள்ளது.
6 விண்கற்கள்
ஆறு வெவ்வேறு துண்டுகள் ஒன்றாக இணைந்து, ஒரே விண்கல்லாக பூமியில் விழுந்துள்ளது. பூமியில் விழுந்த மிகப் பெரிய விண்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
NWA 11789 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த விண்கல்லிற்கு, புவாக்பா (Buagaba) அல்லது தி மூன் பஸில் (The Moon Puzzle) என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டில் தான் இந்த விண்கல் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரனிலிருந்து நெடுங்காலத்துக்கு முன்னர் இந்த விண்கல், இன்னொரு பெரிய விண்கல்லின் தாக்கத்தினால் பூமியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விண்வெளியில் விண்கற்களுக்கு இடையிலான தாக்குதலில் தாக்கப்பட்டு, கால் மில்லியன் மைல் தூரத்தைக் கடந்து பூமியை வந்தடைந்துள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள வடமேற்குப் பாலைவனப் பகுதியில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியில் விழுந்த முதல் 6 பகுதிகளைக் கொண்ட ஒரே விண்கல் இது என்பது கூடுதல் சிறப்பு.
அமெரிக்காவில் ஏலம்
இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்.ஆர். ஏலத்தில், இந்த விண்கல் ஏலத்திற்கு வந்தது. இந்த விண்கல்லை வாங்குவதற்கு ஏகப்பட்ட கோடீஸ்வரர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி இறுதியில் சுமார் 612,500 டாலர்களுக்கு ஏலத்தை வென்றார். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.4,48,93,493 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.