பூமியை, இதுவரை கடந்து சென்ற சிறுகோள்களைப் போல் அல்லாமல், பூமியைக் கடந்து செல்லும் மிகப்பெரிய மற்றும் வேகமான சிறுகோள் இது. அதனால் இது ஆராய்ச்சியாளர்களால் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. வரும் மார்ச் 21ம் தேதி இந்த சிறுகோள் பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இது அளவில் பெரியதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. விண்வெளியில் உள்ள சிறுகோள்கள், அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வழக்கம்தான்.
பூமிக்கு பாதிப்பு?
அபாயகரமான NEO (near-Earth objects) பூமி அருகில் உள்ள கோள்கள் கண்காணிப்பு அமைப்பின் வரையறையின்படி, சிறுகோள் 231937 (2001 FO32) அபாயகரமானது. மேலும் அதன் விட்டம் 2,526 அடி முதல் 5,577 அடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுகோள் பூமியைக் கடக்கும் நிகழ்வு மார்ச் 21 அன்று இந்திய நேரப்படி இரவு 9:33 மணிக்கு நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான (NASA), இந்த சிறுகோளின் சுற்றுப்பாதையை ஆராய்ந்ததில், பூமியில் மோதி பாதிப்பை ஏற்படுத்தாது என விளக்கப்பட்டுள்ளது.
சிறுகோள் வேகம்
இந்த சிறுகோள் 231937 (2001 FO32) வினாடிக்கு 21 மைல் (34.4 கி.மீ) வேகத்தில் நகரும் என்றும் சிறுகோளின் விட்டம் 1 கி.மீ. அளவுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பிற சிறுகோள்களைவிட 97% பெரியதாக இருந்தாலும், வேகமானதும் கூட. பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்க இயலாது. வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் போல பெரிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தியே இந்த சிறுகோளினை பார்க்க முடியும். கடந்த 200 ஆண்டுகளில் தற்போதுதான் நமது பூமிக்கு அருகில் வர உள்ளது. சிறுகோளுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 21 (2021) நிகழ்விற்கு அடுத்ததாக 31 ஆண்டுகளுக்குப் பிறகு 2052-இல் தான் இந்த சிறுகோள் பூமியைக் கடந்து செல்லும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். முதன் முதலாக 2001-இல் Lincoln Near-Earth Asteroid Research (LINEAR) இந்த சிறுகோள் 231937 (2001 FO32)-ஐ கண்டுபிடித்தது. இது ஒவ்வொரு 810 நாட்களுக்கும் சூரியனைச் சுற்றி அதன் சுற்றுப்பாதையில் வலம் வருவதாக கண்டறியப்பட்டது.

விஞ்ஞானிகள் தற்போது வரை சுமார் 25,000 NEO-களை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை சிறுகோள்கள்.