நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலத்தை இன்று அதிகாலை விண்ணில் ஏவ இருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் இத்திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டிருக்கிறது. வேறொரு நாளில் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 1 விண்கலம் இந்தியாவின் இணைய இணைப்பை நவீனமாக்க உதவி செய்ததுடன், வானிலை பற்றி துல்லியமாக அறிந்துகொள்ள வழிவகை செய்தது. அதேபோல் சந்திரயான் 2 நிலவில் மனித குடியேற்றத்திற்கான சாத்தியங்கள், நிலவின் மேற்புறத்தில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அங்கு நிலவும் அதிர்வுகள் ஆகியவை குறித்து ஆராய இருக்கிறது. இந்த திட்டத்திற்கான செலவுகளில் கணிசமான தொகையை இந்திய தனியார் நிறுவனங்கள் வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவின் தென்துருவம்
முன்னதாக திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் சந்தரயான் 2 முகமுக்கிய மைல்கல்லாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். ஏனெனில் நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டதில்லை. அதனாலேயே இஸ்ரோவின் இந்த சந்திராயன் 2 திட்டம் உலகம் முழுவதும் வானியல் ஆராய்ச்சியாளர்களால் பெருதும் எதிர்பார்க்கப்பட்டது. 978 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தை பாகுபலி என்று அழைக்கப்படும் மார்க் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்க தொடங்கியது.

இஸ்ரோவின் இந்த சாதனையைக் காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக, ஆந்திரா ஆளுநர்கள், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் ஆராய்ச்சி மையத்தில் எதிர்பார்ப்புகளுடன் திரண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்கலம் ஏவப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத தொழில்நுட்ப குளறுபடி ஏற்பட்டதால் விண்கலம் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் முன்னதாக கவுண்டிங் நிறுத்தப்பட்டது.
நிலவில் தண்ணீர் இருந்ததை ஏற்கெனவே சந்திரயான் 1 உறுதிசெய்துவிட்ட நிலையில், அதுகுறித்து மேலும் விரிவாக ஆராய்ச்சி செய்யவிருக்கிறது சந்திரயான் 2. இதற்காக பிரக்யான் என்னும் ரோவர் மற்றும் விக்ரம் என்னும் லேண்டர் இரண்டும் சந்திரயான் 2-வில் இடம்பெற்றுள்ளன. விண்கலத்திற்கான எரிபொருள் நிரப்பும் பணி எல்லாம் முடிவடைந்த பிறகு நிகழ்ந்த இந்த கைவிடல் ஆராய்ச்சியாளர்களை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.