மேற்கத்திய நாடுகள் பலவற்றில் 13 – ஆம் எண்ணை சாத்தானுக்குரியதாக நினைக்கும் பழக்கம் இயேசுவின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் 13 என்ற எண்ணினையே பயன்படுத்துவது இல்லை. 12 எண்ணிற்குப் பிறகு நேரிடையாக 14 தான். அதுவும் வெள்ளிக்கிழமை வரும் 13 – ஆம் தேதி வந்தால் பலர் வீட்டிற்குள்ளே முடங்கிவிடுவார்கள். 19 – ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இந்த நம்பிக்கை அதிதீவிரமாக பரவ ஆரம்பித்தது. இதன் துவக்கப்புள்ளி இயேசுவின் மரணத்திலிருந்து துவங்கியது.
என்ன காரணம் ?
இயேசு கிறிஸ்து கல்வாரிக் குன்றுக்கு சிலுவை சுமந்தபடி அழைத்துச் செல்வதற்கு முந்தய இரவில் ஒரு விருந்து நடைபெற்றது. அதுதான் புகழ் பெற்ற இயேசுவின் கடைசி விருந்து (Last Supper). அதில் 13 நபர்கள் பங்குபெற்றதாக பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசு மரித்த நாள் வெள்ளிக்கிழமை 13 – ஆம் தேதி. அதன்பின்பு 1307 – ஆம் ஆண்டு நூறுக்கும் மேற்பட்ட நைட் டெம்ப்ளர்களைக் கைது செய்ய பிரெஞ்சு அரசர் உத்தரவிட்ட நாளும் ஒரு வெள்ளிக்கிழமை 13 – ஆம் தேதி. அதற்கடுத்து என்ன நடந்தது என்பதை நாம் அறிந்ததே.

இடையில் கொஞ்ச நாள் எல்லாம் அமைதியாகத்தான் இருந்திருக்கிறது. 1907 – ஆம் ஆண்டு மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறியது. சொல்லிவைத்தாற்போல் Gioachino Rossini என்னும் இத்தாலியைச் சேர்ந்த பிரபல இசைமைப்பாளர் ஒரு வெள்ளிக்கிழமை இறந்துபோனார். தேதி 13. அதே நாளில் அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர் Thomas Lawson னும் இறந்துபோகவே மக்கள் பழைய கதைகளை தூசு தட்டினர். மேற்கு நாடுகள் முழுவதும் பயம் பயங்கர வேகத்தில் பரவ ஆரம்பித்தது.
13 – ஆம் நோய்
நாளாக நாளாக இந்த பயம் பலரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர். மருத்துவர்கள் இது ஒரு மன நோய் என்றனர். 13 – ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமையைப் பார்த்து பயப்படும் நோய்க்கு friggatriskaidekaphobia என்னும் எளிய பெயர் வைக்கப்பட்டது. இந்தப் பெயரை உச்சரிக்கத் தெரியாதவர்கள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டிருந்தனர். மத்திய ஐரோப்பாவில் மட்டும் சுமார் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கி இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

விமான நிலையம், ரயில்வே, வணிக வளாகங்கள் என அனைத்திலும் 13 ஐப் பயன்படுத்துவதை தவிர்த்தார்கள் மக்கள். வருடத்திற்கு குறைந்தது 3 முறையாவது வந்துவிடும். அந்நாட்களிலெல்லாம் எல்லா தேவாலயங்களும் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மேலும் சில பயங்கள்
த்ரில்லர் படங்களின் பிதாவான ஆல்பிரெட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock) 13- தேதி பிறந்ததை எல்லாம் நினைத்து பலர் பயந்தார்கள் என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் அது உண்மைதான். ஆனால் அதைவிட சுவாரஸ்யமான தகவல் ஒன்று இருக்கிறது. Number 13 என்னும் படத்தை அவர் எடுத்து பின்னாளில் பொருளாதாரப் பிரச்சனைகளால் அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இதுவரை நீங்கள் ஒழுங்காகப் படித்திருந்தால் அதற்கு மக்கள் என்ன காரணம் சொல்லி இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

2029 ஆம் ஆண்டில் வரும் ஏப்ரல் 13 – ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று வரும் என நாசா அறிவித்திருக்கிறது. 99942 Apophis என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் 2004 – ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் ஏப்ரல் 13 வருவது வெள்ளிக்கிழமை என்பதால் பூமி தப்பிக்குமா? என்ற பேச்சுக்கள் இப்போதே கிளம்பிவிட்டன. 2012 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்பது போல இதுவும் புரளியா என்பதை நாம் அறிந்துகொள்ள இன்னும் 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.