பொதுவாக நாம் பயன்படுத்தும் மின்சாரம் பல வழிகளில் உற்பத்தி செய்யப்பட்டு அரசு மூலமாகவோ, தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ வழங்கப்படுகிறது. இது கிரிட்(Grid) வழி மின்சாரம் எனப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சோலார் பேனல்கள் மூலம் இந்த நிலை மாறி வருகிறது. சூரிய ஒளி மூலம், சோலார் பேனல் கொண்டு மக்களே தங்கள் பயன்பாட்டுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே வீடுகளில் தயாரித்துக்கொள்ள முடியும். இது Off-grid மின்சாரம் எனப்படுகிறது. சொல்லப்போனால், மொத்த உலகமுமே இன்னும் சில ஆண்டுகளில் இப்படித்தான் மாறப்போகிறது. மின்சாரம் வேறு யாருக்காவது தேவையென்றால் நாமே கூட மின்சார நிறுவனங்களிடம் விற்க முடியும்.
சோலார் பேனல்களால் நமது பூமியில் இந்த நிலை என்றால், விண்வெளியில் இவை இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன தெரியுமா?
ஆம்! விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துடன்(ISS) இணைக்கப்பட்டிருக்கும் சோலார் பேனல்கள் மிக மிக மிக அவசியமானவை. ஏனெனில் சோலார் பேனல் இல்லையென்றால் சர்வதேச விண்வெளி நிலையமே இயங்காது. அங்கு மின்சார உற்பத்தி எப்படி செய்யப்படுகிறது (Solar Panels in Space station) என்பதைத் தான் இங்கே காண இருக்கிறோம்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள மொத்த சோலார் பேனல் தொகுதிகளிலும் 2,62,400 சோலார் செல்கள் உள்ளன!!
Also Read: ஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை! செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு!
சர்வதேச விண்வெளி நிலையம்
விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை செய்வதற்காகவே சர்வதேச விண்வெளி நிலையம்(ISS) 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விண்வெளியிலிருந்து பூமியை படம் பிடிப்பது, தகவல்கள் அளிப்பது, சில உயிரினங்களை சுழிய ஈர்ப்பு விசையில் வைத்து ஆராய்வது என பல்வேறு ஆராய்ச்சி பணிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் சோலார் பேனல் தொகுதியை தான் பயன்படுத்துகிறது. அதாவது பல சோலார் பேனல்கள் அடங்கிய தொகுப்பு. இந்த தொகுதிகள் ஆயிரக்கணக்கான சோலார் செல்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும்.
சோலார் தொகுதி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சோலார் பேனல் தொகுதிகள் நமக்கு தேவையானதை போல வெறும் சாதாரண தேவைகளுக்காக மட்டும் அல்ல. அங்கு உள்ள எல்லா கருவிகளையும் செயல்பட வைக்கவும், வீரர்களின் உயிருக்கும் அந்த பேனல்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தான் பிரதானம். இதனால் தான் அங்கு இருக்கும் சோலார் தொகுதிகள் நிலையத்திற்கு தேவையானதை விட அதிக சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இந்த அதிக சக்தியை நிலையத்தில் உள்ள பேட்டரிகளை சார்ஜ் செய்ய பயன்படுத்திக்கொள்வார்கள்.
அதிக தொலைவுக்கு மின்சாரம் வழங்க வேண்டுமானால் AC மின்னோட்டம் தான் ஏற்றது. ஆனால் விண்வெளி நிலையத்தில் பூமியை போல அதிக தூரம் பயணிக்க தேவை இல்லை. அதனால் இங்கு சோலார் தொகுதிகள் உருவாக்கும் நேர் மின்னோட்டத்தை (DC) மாறு திசை மின்னோட்டமாக (AC) மாற்ற தேவை இல்லை. DC மின்சாரத்தை பேட்டரிகளில் சேமிக்க முடியும் என்பதால் பேட்டரிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. அதிலும் விண்வெளி நிலையம் சூரிய ஒளியில் இருக்கும் போது சோலார் தொகுதிகள் உருவாக்கும் மின்சாரத்தில் 60 சதவிகிதத்தை விண்வெளி நிலையத்தில் உள்ள பேட்டரிகளை சார்ஜ் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

அதே போல நேரத்திற்கேற்ப பூமியின் நிழல் காரணமாக சோலார் பேனல் தொகுதிகளின் பகுதி அல்லது முழுமையான மறைப்பு ஏற்படும் சூழ்நிலையும் இருக்கும். பகுதி மறைப்பின் போது மற்ற சோலார் பேனல்கள் செயல்படும். ஆனால் முழு மறைப்பு ஏற்படும் போது மொத்தமாக அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. அப்போது ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகள் தான் மொத்த நிலையத்திற்கும் மின்சாரம் வழங்கும்.
Also Read: காற்றாலை எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கிறது? அருமையான அறிவியல் விளக்கம்…
Blanket
விண்வெளி நிலையத்தில் உள்ள சோலார் பேனல்கள் பொதுவாக அப்படியே நிறுவப்படுவதில்லை. Blanket எனப்படும் தொழில்நுட்பத்தில் மடித்த நிலையில் தான் இருக்கும். விண்வெளியின் சுற்றுவட்ட பாதையை அடைந்தவுடன் அவை முழு அளவில் விரிந்து செயல்படும். மடிந்து விரிய வேண்டும் என்பதாலும், தேவையான அளவை விட அதிக ஆற்றலை வழங்க வேண்டும் என்பதாலும் இந்த சோலார் பேனல்கள் பூமியில் தயாரிப்பது போல சிலிக்கான் மட்டும் அல்லாமல் மேலும் சில பிரத்யேக பொருட்கள் சேர்க்கப்பட்டு விண்வெளிக்கு ஏற்றார் போல தயாரிக்கப்படும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள மொத்த சோலார் பேனல் தொகுதிகளிலும் 2,62,400 சோலார் செல்கள் உள்ளன. இது சுமார் சுமார் 27,000 சதுர அடி (2,500 சதுர மீட்டர்) பரப்பளவை உள்ளடக்கியது. அதாவது ஒரு கால்பந்து மைதானத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி. விண்வெளி நிலையத்தின் மின் சக்தி அமைப்பு மட்டும் எட்டு மைல் (12.9 கிலோமீட்டர்) கம்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை பொறுத்தவரை அங்கு மின்சார உற்பத்திக்கு ஒரே வழி சோலார் பேனல்கள் தான்!