மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே அவனை ஆச்சர்யப்படுத்திவந்த சந்திரனை ஆராய நாசாவால் அப்போல்லோ 11 விண்கலம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் நிலாவில் தரையிறங்கியது. பல்லாயிரக்கனக்கான வருடங்களாக ஒளிக்கோளமாய் மனிதர்களை பரவசப்படுத்திய சந்திரனை அடைந்து புதிய சாதனை ஒன்றினை படைத்தது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான நாசா. மனிதர்களின் இந்த முதல் நிலவுப்பயணத்தை சாத்தியமாக்க பாடுபட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம்!!
இந்த ஆராய்ச்சிக்காக நிலவிற்கு பயணம் செய்தவர்கள் நமக்கு நன்கு பரீட்சயமான நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கில் காலின்ஸ். 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஃபுளோரிடாவில் இருக்கும் கென்னடி வானியல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து நாசாவின் சாட்டர்ன் வி ராக்கெட் மூலம் சந்திரனுக்கு பயணத்தைத் துவங்கியதைத் தான் வீடியோ டூடுலாக கூகுள் இன்று வெளியிட்டிருக்கிறது. நிலவில் திட்டமிட்டபடியே விண்கலம் தரையிறங்கிய பின்னர் அந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை பூமிக்கு அனுப்பியவர் காலின்ஸ் தான்.
நிலவில் தரையிறங்கிய பின்னர், தி ஈகிள் எனப்படும் குறும் ஆய்வுக்களம் ஒன்று நிலவின் பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் 13 நிமிடங்கள் நிலவின் பரப்பை ஆய்வு செய்யும். ஆனால் அப்போதுதான் இரண்டு சிக்கல்கள் முளைத்தன. முதலாவது, அவர்கள் பூமியுடன் கொண்டிருந்த ரேடியோ தொடர்பை இழந்திருந்தனர். சிக்னல் சரிவர கிடைக்காததால், நாசாவிலிருந்தவர்களால் மூவர் கொண்ட குழுவிற்கு எவ்வித சமிக்கைகளையும் அளிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது இன்னும் பயங்கரமானது. ஆய்வுக்கலத்தில் இருந்த எரிபொருள் வேகமாக குறைந்துகொண்டிருந்தது.

இப்படியான திக்,திக் நிமிடங்களுக்கு இடையே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 20, 1969 ஆம் ஆண்டு தனது பாதத்தை வெற்றிகரமாக நிலவில் பதித்தார். அந்த நிமிடத்தை பல இடங்களில் நினைவுகூரும் ஆம்ஸ்ட்ராங் “அந்த சிறிய பாத சுவடு மனித குலத்தின் மிகப்பெரும் பாய்ச்சல்” என்று குறிப்பிடுகிறார். ஆய்வுகளை முடித்துக்கொண்டு ஜூலை 25, 1969 பூமிக்குத்திரும்பினர் மூவரும். இவர்களை வரவேற்க ஒட்டுமொத்த அமெரிக்காவும் காத்திருந்தது.
எதிர்பார்ப்பு, கண்ணீர், கடின உழைப்பு, நினைத்துப்பார்க்க முடியாத அளவு பொருட்செலவு என எல்லாவற்றையும் கடந்து அப்போல்லோ 11 மிஷன் தனது இலக்கை வெற்றிகரமாக எட்டிய அந்த தருணத்தைத் தான் கூகுள் தனது டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.