ஜெமினிட் எனப்படும் விண்கல் பொழிவு இந்த டிசம்பரில் வானியல் ஆர்வலர்களின் கண்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது. இந்த பொழிவு டிசம்பர் 13 – 14 தேதிகளில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜெமினிட் பொழிவு சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட காரணம் விழும் ஒவ்வொரு விண்கல்லும் பிரகாசமாகவும், அதீத வேகத்துடனும் இருக்கும். இப்படி ஒருவருடத்தில் ஏராளமான விண்கற்கள் மற்றும் அஸ்ட்ராய்டுகள் பூமியின் பரப்பில் வந்து விழுகின்றன. முதலில் அஸ்ட்ராய்டுகள்,வால்நட்சத்திரங்கள்,விண்கற்கள் என்றால் என்ன? என்று பார்ப்போம்.
அஸ்ட்ராய்டுகள்
அஸ்ட்ராய்டுகள் கோள்களை விட சிறிய பாறைகள். பெரிய விண்கற்களை அதாவது 10 மீட்டருக்கும் அதிகமானவற்றை தான் அஸ்ட்ராய்டு என்கிறார்கள். சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின் போது எஞ்சிய துகள்கள் தான் இந்த அஸ்ட்ராய்டுகள். செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே அதிகமாக காணப்படுகிறது இந்த அஸ்ட்ராய்டு மண்டலம். அஸ்ட்ராய்டுகள் சூரியனுக்கு அருகில் இருக்கும். இவை உலோகம் மற்றும் பாறைகளால் ஆனது என்பதால் சூரிய வெப்பத்தால் ஆவியாவதில்லை.
டிசம்பர் மாதம் 13-14 தேதிகளில் ஜெமினி விண்மீன் தொகுதியில் தெரியும் விண்கல் பொழிவின் பெயர் ஜெமினிட் விண்கல் பொழிவு

வால்நட்சத்திரங்கள்
வால்நட்சத்திரங்கள் பனிக்கட்டி, தூசு மற்றும் வாயுக்களால் ஆனது. வால்நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் இருக்கும் போது மட்டுமே தெரியும். சூரியனை சுற்றி விட்டுத் திரும்புகையில் சில காலம் தெரியும். பிறகு நீண்ட தொலைவு சென்று விடுவதால் தெரியாது. வால்நட்சத்திரங்கள் வானில் எப்போதாவது தென்படுவதற்குக் காரணம் இதுதான். வால்நட்சத்திரத்துக்கு வால் என்று ஒன்று கிடையாது. இவற்றுக்கு சுய ஒளி கிடையாது. சூரியனை நெருங்கும் போது தான் வால் நட்சத்திரத்துக்கு வால் தோன்றுகிறது. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் மற்றும் ஆற்றல் மிக்க துகள்கள் தாக்குவதால் வால்நட்சத்திரத்திலிருந்து ஏராளமான அளவுக்கு நுண்ணிய துணுக்குகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இவற்றின் மீது சூரிய ஒளி படும் போது இவை நீண்ட வால் போன்று காட்சி அளிக்கின்றன.ஒவ்வொரு வால் நட்சத்திரமும் சூரியனை நெருங்கும் போது நிறைய பொருளை இழக்கிறது. ஆகவே அடுத்த தடவை வரும் போது அவை இன்னும் இளைத்துக் காணப்படும்.
நொடிக்கு 35 கீ.மீ வேகத்தில் பயணிக்கும் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை மோதும் போது அவை எரிந்து ஆவியாகி வண்ணமயமான ஜெமினிட் பொழிவைத் தருகின்றன.
விண்கற்கள்
விண்கல் என்பது வால் நட்சத்திரங்கள் அல்லது அஸ்ட்ராய்டுகள் உதிர்த்த துகள்கள் தான். இந்த விண்கற்கள் அவற்றின் சுற்றுப் பாதையிலிருந்து விலகி நம் வளிமண்டலத்துக்குள் நுழையும் போது காற்றுடன் மோதி எரிந்து சாம்பலாகி விடுகிறது. அவ்வாறு எரியும் போது ஒவ்வொரு விண்கல்லிலும் உள்ள தனிமங்களுக்கு ஏற்ப வண்ணத்துடன் எரியும். அது வானின் ஒரு மைய புள்ளியில் துவங்கி, அதிலிருந்து பலமுனைகளுக்கும் சிதறி ஓடும்.

ஜெமினிட் விண்கல் பொழிவு
விண்கற்கள் பொழிவு என்பது இரவின் வானில் நிகழும் ஓர் அற்புத வானியல் நிகழ்வு. ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 13 – 14 ஆம் தேதிகளில் ஜெமினி விண்மீன் தொகுதியில் தெரியும் விண்கல் பொழிவின் பெயர் ஜெமினிட் விண்கல் பொழிவு ஆகும். இவை 3200 Phaethon என்ற அஸ்ட்ராய்டுடன் தொடர்புடையவை. நொடிக்கு 35 கீ.மீ வேகத்தில் பயணிக்கும் இதன் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை மோதும் போது அவை எரிந்து ஆவியாகி வண்ணமயமான ஜெமினிட் பொழிவைத் தருகின்றன.
டிசம்பர் மாதம் வானில் நடக்கும் அற்புத நிகழ்வுகள்
- நவம்பர் 7 ஆம் தேதி மூன்று வானியலாளர்கள் இணைந்து C/2018 V1 Machholz-Fujikawa-Iwamoto என்ற வால் நட்சத்திரத்தைக் கண்டு பிடித்தனர். விஞ்ஞானிகளின் கணிப்புப்படி இது தொடர்ந்து பிரகாசமாகி டிசம்பர் முதல் வாரத்தில் வரும். அதனைத் தொலைநோக்கி மூலம் நாம் பார்க்க முடியும்.
- அதே போல் இந்த ஆண்டு இரண்டாவது வால்நட்சத்திரம் 46P/Wirtanen ஐயும் பார்க்க முடியும். அது டிசம்பர் 12ஆம் தேதி சூரியனுக்கு வெகு அருகில் செல்வதால் அதனை வெறும் கண்களாலே பார்க்க முடியுமாம்.
- டிசம்பர் 2 முதல் 4 தேதிகளில் காலை நேரங்களில் தென் கிழக்கு வானத்தில் பிரகாசமான வெள்ளி மற்றும் ஸ்பிகா (Spica) வைப் பார்க்கலாம். மேலும் இதனுடன் பிறை நிலவும் சேர்ந்து அழகாக இருக்கும்.
- டிசம்பர் 8 அன்று நிலவு, சனி கிரகத்திற்கு அருகில் இருக்கும். இதனை சூரிய அஸ்தமனத்திற்கு அரை மணி நேரத்திற்குப் பின் தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்.
- டிசம்பர் 13 அதிக ஜெமினிட் பொழிவைக் காணலாம். பூமி, அஸ்ட்ராய்டு மண்டலத்தின் அடர்த்தி நிறைந்த பகுதிக்கு செல்வதால் மணிக்கு 30 முதல் 40 விண்கல் பொழிவை எதிர்பார்க்கலாம்.
- டிசம்பர் 14 நிலவும், செவ்வாயும் வெகு அருகில் இருப்பதைக் காணலாம்.
- டிசம்பர் 21 சரியாக 5:23 p.m. ET மணிக்கு சூரியன் வானத்தில் அதன் குறைந்தபட்ச புள்ளியில் (Lowest Point) இருக்கும். இதனால் பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ளவர்களுக்கு குறுகிய நாளாக இருக்கும். அதேபோல் பூமத்திய ரேகைக்கு தெற்கில் இருந்து பார்ப்போருக்கு சூரியன் அதன் அதிகபட்ச உயரத்தில் இருக்கும். அதனால் அந்த நாள் நீண்ட நாளாக இருக்கும்.
- பூமியின் வட கோளம் சூரியனை பொறுத்து அதன் அச்சில் சாய்வதால் தான் வடக்குப் பகுதியில் உள்ளவர்கள் குளிர்காலத்தையும் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் கோடை காலத்தையும் அனுபவிக்கிறார்கள்.
- இதே போல் உர்சிட்(Ursid ) விண்கல் பொழிவு டிசம்பர் 22 ஆம் தேதி அதன் உச்ச நிலையை எட்டும். பூமி 8P/Tuttle என்ற வால் நட்சத்திரத்துக்கு அருகில் செல்வதால் இந்தப் பொழிவு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் மணிக்கு 10-15 விண்கல் பொழிவை எதிர்பார்க்கலாம்.
- டிசம்பர் 24 அன்று சந்திரன், தேன்கூடு நட்சத்திரத் தொகுப்பிற்கு (Beehive star cluster) அருகில் இருக்கும். அவற்றையும் தொலைநோக்கி மூலம் பார்க்கலாம். இத்தொகுப்பில் ஏறத்தாழ 1000 நட்சத்திரங்கள் 577 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும்.
- டிசம்பர் 30, 31 தேதிகளில் தெற்கு வானத்தின் மேல் பகுதியில் சந்திரனை மிக பிரகாசமான Spica நட்சத்திரத்திக்கு அருகில் பார்க்கலாம்.
ஜெமினிட் விண்கல் பொழிவை நகர விளக்குகளை தவிர்த்து இருட்டான இடத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தான் பார்க்க முடியுமாம். இவ்வளவு தேதிகளையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமே என எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம். இந்த மாதம் நிகழும் நட்சத்திரப் பொழிவு மற்றும் விண்வெளி பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எழுத்தாணியுடன் இணைந்திருங்கள்.