இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முதல் நிலவுப் பயணத்திற்குத் தயாராகி வருகிறது இஸ்ரோ. ககன்யான் என்றழைக்கப்படும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் இத்திட்டம் பற்றி ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கல மையம் (Human Space Flight Centre) ஒன்றினை துரிதகதியில் உருவாக்கி வருகிறது இஸ்ரோ. இந்த மையத்தில் 800 முதல் 900 ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற இருக்கிறார்கள்.

விக்ரம் சாராபாய் ஆராய்ச்சியகத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக இருக்கும் உன்னிகிருஷ்ண நாயர் இந்த ககன்யான் திட்டத்திற்கான தலைவர் பொறுப்பை ஏற்கிறார். இதற்காக ஏற்கனவே ஐந்து வருடங்கள் உழைத்தவர் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமை
பெங்களூரில் அமைந்திருக்கும் இந்தத் திட்டத்திற்கான ஆராய்ச்சி மையத்தில் அதிநவீன கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ககன்யான் திட்டத்திற்காக முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலவிற்குச் செல்ல திறமையான வீரர்களைத் தேர்வு செய்ய இருப்பதாகவும், இதற்கு இந்திய வான்படையும் உதவும் என தெரிவித்தார்.
இஸ்ரோவின் தலைமையின் கீழ் இயங்கும் Institute of Space Science and Technology கல்லூரியிலிருந்து வருடத்திற்கு 100 மாணவர்களை இஸ்ரோவில் பணியமர்த்திக் கொள்கிறது. இப்படி தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகளில் இருந்து திறமையான நபர்களை நிலவிற்கு அனுப்ப முடிவு செய்யப்படும். மேலும் அவர்களுக்கு விண்வெளி சார் பயிற்சியும், தொழில்நுட்ப நுணுக்கங்களும் கற்றுக்கொடுக்கப்படும் என சிவன் தெரிவித்திருக்கிறார்.
பயிற்சி
வளிமண்டலத்திற்கு வெளியே 400 கிலோமீட்டர் உயரத்தில், விண்வெளியில் பயிற்சியானது அளிக்கப்பட இருக்கிறது. மொத்த திட்டத்திற்கான கால அளவு, செயல்படுத்தவேண்டிய துணைத் திட்டங்கள், பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என கடிகாரத்துல்லியத்தில் மொத்த இஸ்ரோவும் இயங்கி வருகிறது.
விண்கலம்
GSLV MarkIII மூலம் தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒருமுறையும், 2021 ஆம் ஆண்டு ஜூலையிலும் உச்சகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இறுதியாக, ஏற்கனவே திட்டமிட்ட மனிதர்களை நிலவிற்கு அழைத்துச்செல்லும் திட்டம் 2021 டிசம்பரில் செயல்படுத்தப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தற்போது 2022 ஆகஸ்டிற்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த வருடம் இந்தியாவின் 75 வது சுதத்திரம் கொண்டாடப்பட இருக்கிறது. வரலாற்றில் இந்தியா அழியாப்புகழ் பெற இருக்கும் நிகழ்விற்காக நாம் ஒன்னும் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.