விண்வெளி முழுவதையும் கைப்பற்றும் அமெரிக்கா!!

Date:

ஹாலிவுட் படங்களில் வரும் விண்வெளி சண்டைக் காட்சிகளைப் போல இனி வரும் காலங்களில் பூமியின் கடைசி அடுக்கிலும் (Exosphere) சண்டைகள் நடக்கலாம். அதற்குத்தான் அமெரிக்கா தயாராகிவருகிறது. ஆனால் இம்முறை சண்டைகள் எண்ணெய் கிணறுகளுக்காக அல்ல!

ஸ்பேஸ் ஃபோர்ஸ் (Space force)

சென்ற வருடம் அனைத்து சமூக வலைத்தளங்களும் ட்ரம்பின் பேர்முழங்கியே ஓய்ந்தன. காரணம் அவருடைய இந்த ட்வீட் தான்.

trump

அமெரிக்க நெட்டிசன்களால் உலகம் முழுவதும் சிரிப்பலைகளை ஏற்படுத்திய இந்த ட்வீட் ஒரு நகைச்சுவையே கிடையாது. அதே வருடத்தில் ஜீன் மாதத்தில் அமெரிக்க துணை அதிபர் Mike pense “தரையிலும், நீரிலும், காற்றிலும் போலவே விண்வெளியிலும் அமெரிக்க ராணுவம் ஆதிக்கம் செலுத்தும்” என்று கூறியிருந்தார். அவர் கூறியது இந்த ஸ்பேஸ் ஃபோர்ஸைத்தான். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை, மெரின் கார்ப்ஸ் (marine corps), கோஸ்ட் கார்டு (coast guard) இந்த வரிசையில் அமெரிக்காவின் ஆறாவது படைதான் ஸ்பேஸ் ஃபோர்ஸ். நிலத்திற்கும், நீருக்கும் நடக்கும் எல்லைப் பிரச்சினையே தீர்ந்தபாடில்லை. பிறகு எந்த ஏலியனைஅழிக்க இந்த விண்வெளிப்படை? அடுத்து சொர்க்கத்திலும், பாதள உலகத்திலும் ஸோம்பிக்களைக் கொண்டு  ட்ரம்ப் படைதிரட்டுவார்!. என்று நெட்டிசன்கள்  கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அசராத ட்ரம்ப், இந்த விண்வெளிப் படைக்கும் ராணுவத்திற்கும் சேர்த்து  $750 பில்லியன் டாலர் நிதியைக் கோரவுள்ளார் ட்ரம்ப்.

மூடிக்கிடந்த பழைய திட்டம்

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தவுடனே இருபெரும் வல்லரசு நாடுகளுக்கும் (USA-USSR) இடையே பனிப்போர் தொடங்கியது. சரியாக 44 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் International Nuclear Force ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தாலும், பனிப்போரோடு சேர்ந்திருந்த பகை தீர்ந்தபாடில்லை. அதில் ஒரு பகுதிதான் அவற்றிற்கிடையே நிலவிவந்த விண்வெளிப் போட்டி. 1957 ஆம் ஆண்டில் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1 ஐ சோவியத் விண்ணில் செலுத்தியது. அதே ஆண்டின் பிற்பகுதியில் ஸ்புட்னிக் 2-ம் விண்ணில் பாய்ந்தது. சுதாரித்த அமெரிக்கா, 1969 ல் நிலவில் கால்வைக்க, போட்டியின் போக்கை மாற்றிய சோவியத் விண்வெளியில் செயற்கைக்கோள்களை மேய்க்கத் தொடங்கியது.

Space force
Credit: Reddit

1983 ஆம் ஆண்டு, அப்போதைய அதிபர் ரொனால்ட் ரீகன் “ஸ்டார் வார்ஸ்” (Star wars) என்ற விண்வெளிப் படையை உருவாக்க திட்டமிட்டார். அதாவது நிலம், நீர், ஆகாயம் போன்றவற்றைப்போலவே விண்வெளிப்பரப்பையும் பாதுகாக்கவேண்டும். அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1985 ல் அமெரிக்கவின் P78-1 எனும் செயற்கைக்கோளானது அமெரிக்கா ராணுவ விமானம் (F-15 Eagle) மூலம் குண்டு வீசி அழிக்கப்பட்டது. காரணம், ஆயுள் முடிந்த அதன் தொழில்நுட்ப ரகசியம் யாரிடமும் அகப்பட்டுவிட கூடாது. அன்று (1985) முதல் 2002 ஆம் ஆண்டுவரை நீடித்த ஸ்பேஸ் வார்ஸ் திட்டம் 2003 ல் நடந்த இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின்னர் அரசால் கைகழுவப்பட்டது. அமெரிக்கா தனது முழு கவனத்தையும் அல்கய்தா மீதும் மற்றும் தேசிய பாதுக்காப்பிற்கும் செலவிட்டது.

ஆரம்பமே ஆசியாதான்….

2007 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி விண்வெளியில் சுற்றித்திரிந்த பழைய செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியது. இல்லை சிதைக்கப்பட்டது. அதற்கு ஒரு வாரம் கழித்து அமெரிக்க பத்திரிகைகள் சீனாவை சந்தேகித்து எழுதியிருந்தன. உலகம் முழுக்க எழுந்த சந்தேக சுனாமிக்குப் பிறகு ஜனவரி 23 ஆம் தேதி சீனாவே அத்தகைய வெடிப்பை ஏற்படுத்தியதை ஒத்துக் கொண்டது. இம்முறை ஆயுட்காலம் காரணமல்ல. செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் Anti sattelite Missile- ஐ தன்மீதே பரிசோதித்துள்ளது சீனா. 1979 ஆம் ஆண்டு வானிலை பற்றி ஆராய சீனாவால் அனுப்பப்பட்டதுதான் அந்த Fengyun 1c செயற்கைக்கோள்.

donald-trump-விண்வெளி குப்பை

“2008 ல் அமெரிக்காவும் தன் திறமையை நிரூபிக்க, தனது பழைய செயற்கைக்கோளொன்றை சுட்டு வீழ்த்தியது. எனினும், நாசாவின் கூற்றுப்படி சீனாவின் வெடிப்பின் மூலம் ஏற்பட்ட அதிவேக விண்வெளிக் குப்பைகளின் எண்ணிக்கை 2841. இதுவரை விண்ணில் கொட்டப்பட்ட குப்பைகளிலேயே பெரிய அளவு இதுதான். ஒட்டுமொத்த குப்பைகளாக 1,50,000 அடையாளம் காணப்பட்டுள்ளன.

பின்னர் அதிகாரப்பூர்வமாக, people liberation army strategy support force என்ற விண்வெளிப்படையை சீனா உருவாக்கிக் கொண்டது. இதற்கு முன்பாக 1992 களிலேயே ரஷ்யா தனது விண்வெளிப் படையை உருவாக்கிவிட்டது. 1997 ல் அது கலைக்கப்பட்டு, தற்போது மாற்றங்கள் பலசெய்து இப்போது நவீன தன்னிச்சையான விண்வெளி அமைப்பாக உள்ளது. (Russian Space  Force). தாமதமாக வந்தாலும் அமெரிக்கா வீரியத்தோடுதான் களமிறங்கவுள்ளது.

ஸ்பேஸ் ஃபோர்ஸின் அவசியம் என்ன?

இன்றைய உலகில் செயற்கைக்கோளன்றி இயங்கும் நாளொன்றை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஒரு நாட்டின் பொருளாதாரமே செயற்கைக்கோள்களால் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றது. ராணுவம், தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு என அனைத்துமே செயற்கைக்கோள்களின் சித்து வேலையின்றி எவ்வாறு முழுமைபெறும்?  இத்தகைய செயற்கைக்கோள்களை அழித்தாலே போதும். எந்தவித உயிர்சேதமின்றி ஒரு நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரத்தை உருவியெடுத்து விடலாம். சர்வநாசம் நிச்சயம். எனவேதான் எல்லைகள், குடிமக்கள், இயற்கை வளங்களைப் போல செயற்கைக்கோள்களையும் ராணுவம் பாதுகாக்க வேண்டும். உதாரணமாக இந்தியாவில் அனைத்து ATM களுமே Vsat எனும் செயற்கைக்கோள்களின் உதவியைதான் நம்பியுள்ளன. இது ஒன்றை இழந்தால்? விளைவு உங்கள் கற்பனைக்கே..

என்ன செய்யும் இந்த ஸ்பேஸ் ஃபோர்ஸ்?

  • அடுத்த ஆண்டுக்குள் 600 கைதேர்ந்த விமானப்படை வீரர்களைக் கொண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் ஃபோர்ஸ் தயாராகிவிடும். அதற்கடுத்த ஆண்டுகளில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டலாம். விண்வெளியில் உள்ள அனைத்து செயற்கைக்கோள்களையும் சர்வதேச விண்வெளி வீர்களையும் பாதுகாப்பதே இதன் முதல் கடமையாகும்.
  • ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்கள் இப்படையின் சிறப்பம்சம்.
  • எதிரி செயற்கைக்கோளை உளவு பார்த்தல், தேவைப்பட்டால் எதிரி செயற்கைக்கோளினை தாக்குதல், சக ராணுவத்திற்கு உதவி செய்தல் போன்றவை இதன் பிற வேலைகள்.
space force USA
Credit: KTUU

சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty)

OST என்பது 1967 ஆம் ஆண்டில் அமெரிக்கா, யு.கே., சோவியத் ஒன்றியம் ஆகியவை ஏற்படுத்திக்கொண்ட விண்வெளி ஒப்பந்தமாகும். அதன் பின்னர் இந்தியா உட்பட பல நாடுகள் ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாயினர். அதன்படி,

  • விண்வெளியில் எந்தவொரு நாடும் எத்தகைய ஆயுத பரிசோதனைகளிலும் ஈடுபடக்கூடாது. சூரியக் குடும்பம் மற்றும் விண்வெளியில் உள்ள எந்தவொரு வான்வெளிப் பொருளையும் (Celestial bodies) இதற்காக பயன்படுத்தக்கூடாது.
  • விண்வெளியில் நடைபெறும் ஆராய்ச்சிகள் மனிதகுலத்திற்கு நன்மை தரும் விதத்திலேயே இருக்கவேண்டும்.
  • பிற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிக்கு சிறிதளவு கூட கேடு தருவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இவை வேறும் காகித ஒப்பந்தங்களே. அதிகரிக்கும் ஆயுதப்போட்டியில் சத்தியத்தை மீறுபவனே சாணக்யன். இதுபோன்ற  விண்வெளி படை ஒரு ராணுவப் பிரிவே அல்ல.  நம் பூமியைச் சுற்றி நாமே கட்டிக்கொள்ளும் ஒரு  ஆயுதக் கிடங்கு. இதுவே  வருங்காலத்தில் ஆயுதச்சந்தையை ஏற்படுத்தக்கூடும்.

அறிந்து தெளிக!!
இதுவரை உலகம் சுற்றும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருக்கும் . அதில் பெரும்பான்மை அமெரிக்காவினுடையது. 1991 கோளில் நடந்த வளைகுடா போர்களுக்குப் பிறகு செயற்கைக்கோளின் பங்களிப்பை உணர்ந்து உலகநாடுகள் அவற்றை அதிகரித்துக்கொண்டன. எனினும் ராணுவத்திற்கான செயற்கைக்கோள்களின் செயல்பாடும் இருப்பிடமும் ரகசியமானவை.

Integrated space cell – இந்தியாவின் ஸ்பேஸ் ஃபோர்ஸ்

சீனாவின் பரிசோதனைக்குப் பிறகு இந்தியா எடுத்த அதிரடி முடிவுதான் இந்த integrated space cell. இது இந்தியாவின் முப்படைகளோடு இணைந்து செயல்படும். ஆனாலும் இதனை ISRO வே வழிநடத்தும். 2008 ல் அப்போதைய பாதுக்காப்புத்துறை அமைச்சர் ஏ.கே ஆண்டனி இத்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தினை முழுமை பெறச்செய்வது  இஸ்ரோவைச் சார்ந்தது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!