சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரியனை மையமாகச் சுற்றிவருகின்றன. சூரியன் தன் ஈர்ப்பு விசையால் பால்வெளி அண்டத்தில் உள்ள அனைத்து வான்பொருட்களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சில நேரங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழையும் விண்கற்கள் பூமியில் வந்து மோதுவதுண்டு. புவியில் பெரும்பான்மையான பகுதி கடலாக இருப்பதால் விண்கற்கள் அங்கே விழுந்துவிடும். ஆனால் சில கற்கள் நிலத்தில் விழுவதற்கும் வாய்ப்புண்டு.

பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஏற்படும் காற்றின் உராய்வு காரணமாக விண்கற்கள் தீப்பிடிக்கும். புவியின் ஈர்ப்பு விசையினால் அதன் வேகம் அதிகரிக்கும் போது அதீத வெப்பத்தைக் கல் கொண்டிருக்கும். அப்படி நிலத்தினை நோக்கி வரும் விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் வந்தவுடன் வெப்பம் காரணமாக வெடித்துச் சிதறும். அப்படிப்பட்ட நேரத்தில் உருவாகும் வெப்ப உயர்வானது விண்கல்லிற்கு கீழே இருக்கும் இடத்தை ஒரு நொடியில் அழித்துவிடும் வல்லமை உடையது. இப்படியெல்லாம் நடக்குமா என்கிறீர்களா? நடந்திருக்கிறது. அப்படியான இடத்தைத் தான் விஞ்ஞானிகள் நேற்று கண்டுபிடித்திருக்கிறார்கள். 3,700 ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாட்டிற்கு அருகில் உள்ள சாக்கடல் பிராந்தியத்தில் சுமார் 500 கிலோமீட்டர் பரப்புள்ள இடம் விண்ணிலிருந்து வந்த மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதால் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பூமிக்கு வந்தது என்ன ?
ஆராய்ச்சியாளர்கள் இந்த விஷயத்தில் இன்னும்கூட குழப்பத்தில் தான் உள்ளனர். ஏனெனில் ஓரிரு நிமிடங்களில் 500 சதுர கிலோமீட்டரையும் மொத்தமாக அழிக்கவேண்டும் என்றால் எவ்வளவு வெப்பம் உண்டாகவேண்டும் ? என யோசித்துப்பாருங்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் பூமிக்கு வந்த அந்த மர்மப் பொருள் தரையில் மோதவில்லை. ஆம். தரைப்பரப்பிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உயரத்தில் விண்பொருள் வெடித்திருக்கிறது. இதனால் டெல் எல் ஹம்மாம் (Tell el-Hammam) என்னும் நகரம் சுவடு தெரியாமல் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
4000 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை இருந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
89 ஏக்கர் பரப்புள்ள இந்தப் பெரிய நகரத்தினை அழித்தது விண் கல்லாகவோ அல்லது வால் நட்சத்திரமாகவோ இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வித்தியாசமான பானை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. களிமண்ணால் செய்யப்பட்ட ஒன்றிரண்டு பானைகள் அதீத வெப்பம் காரணமாக கண்ணாடியாக மாறியிருக்கிறது. மிகக்குறைந்த காலத்திற்குத்தான் இந்த வெப்பம் இருந்திருக்கிறது. ஏனெனில் மண்பானைகள் முழுவதும் கண்ணாடியாக மாறவில்லை, மாறாக அவை சேதமடையாமல் அப்படியே இருந்திருக்கின்றன. பொதுவாக மண்ணில் இருக்கும் Zircon எனப்படும் செராமிக் மூலப்பொருட்கள் உருவான வெப்பத்தினால் ஆவியாகிவிட்டதாகவும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதனால் 4000 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை இருந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதிர்வலைகள்
விண்கல் வெடிப்பினால் உண்டான சப்தம் வலுவான ஒலியலைகளை உருவாக்கி இருக்கிறது. மேலும் சாக்கடலில் இருந்த உப்புநீர் முழுவதும் ஆவியாகிப் போனபின்னர் நிலத்தில் படிந்திருந்த உப்பை இந்த ஒலியலைகள் அந்தப் பிராந்தியம் முழுவதும் கொண்டுபோய் கொட்டியிருக்கின்றன. இதனால் ஒருகாலத்தில் விவசாய நிலமாக இருந்த இடம் பின்னாளில் Anhydride salts எனப்படும் உப்புநிலமாக மாறிவிட்டது. அதிலிருந்து அந்த நிலத்தில் புல் முளைக்க 600 ஆண்டுகள் தேவைப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னரும் இதேபோல் விபத்து சைபீரியாவில் உள்ள தன்குஷ்கா என்னும் இடத்தில் கடந்த 1908 ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இதிலும் விளக்கப்படாத சில முடிச்சுகள் இருக்கின்றன. தற்போது உலகத்தின் தலைசிறந்த ஆறு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டெல் எல் ஹம்மாம் இருந்த ஜோர்டான் பாலைவனத்தில் குழுமியிருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் மிச்சமிருக்கும் மர்மங்களும் வெளிவந்துவிடும்.