5.4 வருடங்களுக்கு ஒருமுறை வரும் 46 பி/ விர்டேனேன் (46P/Wirtanen ) வால் நட்சத்திரம் இன்று பூமிக்கு மிக அருகில் வர இருக்கிறது. சூரியக்குடும்பத்தில் உள்ள மற்ற பொருட்களைப் போலவே இந்த வால் நட்சத்திரமும் சூரியனைச் சுற்றிவருகிறது. ஆனால் இம்முறை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெருக்கமாய் வர இருக்கிறது Wirtanen வால் நட்சத்திரம்.

பூமிக்கு அருகில்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் வால்நட்சத்திர ஆய்வு மையம் ஒன்று டிசம்பர் 13 – 14 ஆம் தேதிகளில் இந்த நட்சத்திரமானது தெளிவாகத் தெரியும் என்று அறிவித்துள்ளது. மேலும் இது வெளிர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இதில் அதிகமாக உள்ள சியனோஜென் மற்றும் டயடாமிக் கார்பன் ஆகியவை சூரிய ஒளியின் மூலம் அயனியாக்கப்படுவதால் வெளிர்பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றன.
பெரும்பாலும் தொலைநோக்கி அல்லது பைனாகுலர் வழியாக இதனைத் தெளிவாகப் பார்க்கமுடியும். ஆனால் Wirtanen ஐப் பொறுத்தவரை மயங்கிய நட்சத்திரம் இது என்பதால் ஒளிச்சிதறல்கள் இல்லாத தெளிவான இரவு வானத்தில் மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மயங்கிய நட்சத்திரம் என்பது அதிகம் பிரகாசிக்காத ஒளிஉமிழ் குறைவான நட்சத்திரமாகும்.

பெரும்பான்மையான நேரங்களில் இதன் வாலை நம்மால் காணமுடியாது. இருப்பினும் இந்த ஆண்டு தூசுக்கள் நிறைந்த இதன் வால் பகுதி தெளிவாகத் தெரியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.