அமெரிக்காவின் அப்பல்லோ மற்றும் சோவியத் ரஷ்யாவின் லூனா திட்டங்கள் மூலம் 40 ஆண்டுகளுக்கு முன், நிலவில் இருந்து மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டன. அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகளும் மொத்தம் சுமார் 400 கிலோ அளவிற்கு நிலவின் மாதிரிகளை இதுவரை சேகரித்துள்ளன. கடைசியாக, 1976 இல் சோவியத் யூனியனின் லூனா 24 பயணம் நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு வந்தது. அதற்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா நிலவில் இருந்து இப்பொழுது மாதிரிகளைக் கொண்டு வந்திருக்கிறது.
நிலவில் உள்ள பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சாங்கே-5 என்ற விண்கலத்தை, நவ-25ஆம் தேதி சீனா விண்ணில் செலுத்தியது. நிலவைச் சுற்றிவரும் சுற்றுவட்டக் கலனின் ஒரு பகுதி டிசம்பர் 1-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக தரையிறங்கியது. தரையிறங்கிய லேண்டர், அங்கு கற்கள்,மண் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்தது. பின்னர் டிசம்பர் 3ஆம் தேதி புறப்பட்டு, நிலவை சுற்றிக் கொண்டிந்த விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைந்தது.
சீனாவில் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் (உள்ளூர் நேரப்படி) இந்த விண்கலமானது தரையிறங்கியது. இதில் 2கிலோ மாதிரிகளை கொண்டு வந்திருக்கின்றது.இந்த மாதிரிகள், நிலவின் மண் தன்மை மற்றும் ஆரம்ப கால வரலாறு குறித்து அறிந்துகொள்ள உதவும். முன்னதாக டிச-3ஆம் தேதி நிலவில் தங்கள் நாட்டின் கொடியை சீனா நிலைநாட்டியது. இதன்மூலம் நிலவில் கொடியை ஏற்றிய இரண்டாவது நாடானது சீனா, அதுவும் 50 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு.
2024-ம் ஆண்டில், அமெரிக்கா தங்கள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. 2022 க்குள் ஒரு விண்வெளி நிலையம் அமைத்து, 2030 க்குள் மனிதர்களை நிலவிற்கு அனுப்ப சீனா திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.