நிலம், நீர் மற்றும் உலக அரசியலில் தன் பலத்தை நிரூபித்து வரும் சீனா, விண்வெளியிலும் தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த உள்ளது. அதன் ஒருபடியாக ஏற்கனவே நிலவின் மறுபக்கத்தில் தனது ரோபாட்டிக் காலைப்பதித்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் ஒருமுறை 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு நிலவின் மீதான மனித காலடித் தடத்தை படிய வைப்பதன் மூலம் சர்வ வல்லமை பொருந்திய விண்வெளி சக்தியாக மாறப்போகிறது பெய்ஜிங். ஆனால் இந்த முறை ஏர்கோட்டை தொட்டுவிட்டு திரும்பாமல் போனஸ் பாயிண்ட்டாக அங்கேயே தனக்கு சொந்தமாக ஆராய்ச்சி கூடம் ஒன்றை எழுப்ப உள்ளது.

மாஸ்டர் பிளான்
தனது நான்காவது ஸ்பேஸ் டே வை கடந்த 24 ஆம் தேதி கொண்டாடிய சீனா, தனது நிலவின் ஆராய்ச்சி கூடம் பற்றிய திட்டத்தை உலகிற்கு அறிவித்தது. இன்னும் பத்தாண்டுகளில் நிலவின் தென் முனையில் இந்த நிலையம் வரவுள்ளது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனாவின் பங்கு தற்போதைக்கு சொல்லும்படி இல்லை. எனவே தனக்கென்று சொந்தமாக விண்வெளி நிலையம் ஒன்றையும் அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இதோடு நிற்கவில்லை ஆச்சரியம். செவ்வாய் கிரகத்திற்கும் அடுத்த ஆண்டு தனது விண்கலத்தை செலுத்தவுள்ளது.
ஏற்கனவே Tiangong-1 மற்றும் 2 எனப்படும் சிறிய ரக விண்வெளி நிலையத்தை விண்ணில் ஏவிய சீனாவிற்கு இந்த விண்வெளி நிலையமானது, மூன்றாவது மற்றும் முழுமையான கனவுத் திட்டம் ஆகும். இதில் Tiangong-1 ஆனது தனது ஆயுள் முடிந்த நிலையில் பூமியில் விழுந்து அஸ்தியானது. Tiangong-2 ஆனது கடந்த ஆண்டு திடீரென்று தன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து சுமார 59 மைல்கள் சரசரவென கீழிறங்கியது. எங்கே Tiangong-1 போல பூமியில் விழுந்து விடுமோ என்று அஞ்சிய நிலையில் மீண்டும் அதன் பழைய நிலைக்கே சென்று அமரவைக்கப்பட்டது. இதில் 30 நாட்களே அதன் விஞ்ஞானிகள் அதில் பயணம் செய்தனர். இதுதான் சீனர்களின் அதிக கால விண்வெளி இருப்பாகும். எனவேதான் தனது மூன்றாவது விண்வெளி நிலையத்தை கூடிய விரைவில் நிலைநிறுத்த முயல்கிறது சீனா.
மொத்தம் மூன்று கட்டங்களாக விண்ணில் ஏவப்பட்டு அங்கேயே இனைக்கப்படவுள்ள இந்த விண்வெளி நிலையத்தின் முதல் பகுதி 2022 ஆம் ஆண்டு மார்ச் 5B ராக்கெட்டில் பயணப்படவுள்ளது. புதிய விண்வெளி நிலையத்தின் வீடியோ ஒன்றையும் சீனா வெளியிட்டுள்ளது. அது சீனாவின் கம்யூட்டர் சிட்டியான டியான்ஹே வில் இருந்து சோதிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2017 வாக்கிலேயே நிலவின் மாதிரிகளை எடுக்க சீனா முடிவு செய்திருந்தது. ஆனால் தான் ஏவிய long march 5 y2 ராக்கெட்டில் டர்போபம்பில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஏவப்பட்ட 346 நொடியில் கடலில் வீழ்ந்து மாண்டது. இதன் மேம்பட்ட மாடல்தான் தற்போது பயன்படுத்தப்படவுள்ளது.

முடிவுக்கு வரும் ISS
1998 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் தனது அந்திம காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2020 லேயே காலாவதி ஆக அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம் என நாசா தெரிவித்துள்ளது. இதை கணக்கில் கொண்டுதான் சீனா தனது விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் 2028 வரை சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பாட்டில் இருக்க வாய்ப்புள்ளதாக விண்வெளி சார்ந்த வட்டாரங்கள் விவரிக்கின்றன.